Tuesday, May 25, 2021

ஸ்ரோன் பெஞ்சும் ஸ்ரெச்சரில் நம்பிக்கையும்-பொன்.காந்தன்



லில்லியும் ரோசும் கொஞ்சும்
ஸ்ரோன் பெஞ்சில்
நீட்டி வளர்த்தியிருக்கிறது பிணம்.
மெல்லிய கனவோடிருந்த இமைகளை
கணக்கு முடிக்காத கடையாய்
இழுத்து சாத்திவிடுகிறது இயமம்.
அவசர கிச்சை பிரிவின் இறுதி விடுதி
இப்போது எது தெரியுமா
காப்பி அருந்தி கதைபேசும் கடைத்தெரு.
வாக்கிங் போக முடியாது
சாவோடு போர் சாலையெங்கும்.
மாருதிக்கு பெற்றோலாய்
இந்த ஆவிக்கு ஆக்சிஜன் பங்.
ஓடியும் ஏற முடியாத பேருந்தாய்
உதறி விட்டுப் போகிறது பூமி மனிதரை.
காவ முடியாது உங்களையென
ஏன் கழற்றி விடுகிறது ஏன்!
நம்பர் வண் கேடிகளை விட்டுவிட்டு
இன்ப வான பறவைகளின் மீது
ஏன் ஈட்டி எய்கிறான்
கண்ணுக்குத் தெரியா காவாலி வேடன்.
அம்பெறிந்தவனே
அனுப்பவா புண்ணுக்கு மருந்தென்கிறான்.
அவனை அடிச்சு சூப் வைக்க
ஒரு ஆபத்பாந்தவனில்லை.
தும்பு மயிராய் மானுட உயிர்
தூக்கிப்போடு அதிலென
சாக்கில் கட்டும் சாமானாய் பூதவுடல்.
நாயன்மார்க்கட்டு
ஏன் வெருள வேண்டும்
நாகலிங்கம் ஏன் சாகவேண்டும்
என்ன
வெற்றிலைக் கொடியிலா விளைந்தது
இந்த வில்லங்கமான் கோவிட்டு.
ஊட்டிக் குளிரில்தான்
வாட்டியெடுக்கும் இந்த வைரஸ் வடிவெடுத்ததா
சூட்டிங் போன கனவுக்கன்னிக்கும்
கடவுளே பொசிற்றிவ்!
பழனி ஆண்டவனை சுற்றியும்
லாக்டவுண்
பஞ்சாமிர்தத்தில் எழுந்ததா கொரானோ.
எங்கிருந்தோ வந்த இளவு
உடல் காம்பிலிருந்து
உயிரிலைகளை உருவி எடுக்கிறது.
காட்டுக்கறுப்பு தொற்றும்
கரித்துண்டு போடென்றாள்
காதறுந்த கிழவியொருத்தி
முடக்கில் கழிப்பு
கடப்புக்குள் கால் கழுவென்றது
அப்புவின் குரல்
நடப்பு இப்போது நவீனம்
நாமும் மாறவேண்டுமென்றது கிறுக்கு
திறந்து கிடந்தது ஆசைக்கதவு
வாச்சர் இல்லாத வாழ்க்கை.
சற்றலைட்டில் சரணடைந்த சீவியம்
சலம் விடுவதும் சகலதும் சிக்கும் சிசிரிவியில் சுருண்ட நாளாந்தம்.
தவளை குரல்வைத்து
இனி மழைதானென்றது இதயவாசல்
இலை நுனிகளில் இனித்த இயற்கை
முடிவறியா சாக்காட்டில் மீள
வழிதெரியாமல் குலைகிறது மனிதகுலம்
நிலம்பிளக்க கந்தகங்கள்
நெஞ்சோடு கூட்டில் நிறையச்சன்னங்கள்.
நெற்றி வியர்வை என்னாச்சு
பயிர் முளைக்கும் அழகிய பூமியில்
உயிர் பிழைக்க முடியாதபடி வைரஸ்
அந்த நதிக்கரையில்
அவர்கள் சிந்தித் தொடங்கிய வியர்வை
தடம் மாறியதெப்போது
வரமாகி தரணி சாபமாகியதிப்போது
ஸ்ரெச்சரில் கிடக்கிறது நம்பிக்கை.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...