Tuesday, May 25, 2021

பூங்காவனச் சிரிப்பு -பொன்.காந்தன்

ஆச்சி விற்கும் மரத்தடியில்

அமர்ந்திருந்தாள் ரம்பை
அவ்வழியே போனோர்க்கு
ஆச்சரியம் பாரும்
கொவ்வை உதடுகளில்
கொழுத்த மாதுளைகள்
பையநின்று பல பேரும்
பார்த்தனரே அப்பக்கம்
மையல் கொண்டவள் பார்வை
மயக்கத்தை தெருவெங்கும்
செய்யத் தடுமாறி
சீக்கிரம் கடக்காமல்
எய்யும் பாணங்களால்
இதயத்தை தவறவிட்டு
உய்யத் தவம் போல
உருகினரே அத்தெருவில்
சந்தைக்கு மீன்வாங்க
சாப்ற்வேர் வேலைக்கும்
பந்தயக்குதிரைகளாய்
பறந்து சென்றவரும்
நின்றங்கு நெளிந்து
கையில் இரண்டு சரை
காலிடறி அவளிடம்தான்
களிப்புற்று வாங்கினர் காண்
மகிழுந்து உந்துருளி
மற்றும் பல ஊர்தி
எல்லாம் ஆங்கோரங்கட்டி
இடிபட்டு இழுபட்டு
கடிபட்டு ஒரு கச்சானேனும்
அவள் கைப்பட்டு வாங்கி
பொடிபட்டு உண்டிட்டால்
போதுமென பெருவரிசை
கந்தர்வதோட்டத்தில்
காய்த்திட்ட கனியெனவே
செம்புழுதி வேரோடி
செடி தந்த கச்சான்கள்
ஐம்புலனும் மகிழவன்று
அவள் முன் கூடையிலே
ஏழெட்டு சரைகள்தான்
எஞ்சிடும் போதினிலே
பதினேழோ பதினெட்டோ
பழுக்கின்ற வாலிபங்கள்
பறிபட்டு கொறிக்கத்தான்
பட்டாளமாயும் வந்து
வழிபட்டிடை கன்னம்
வர்ணித்தும் கலைய
சில மணிப் பொழுதில்
சீக்கிரமாய் தீர்ந்தங்கே
பெரு முடிச்சொன்றில்
சில்லறை தாள் நிரப்பி
இரு கரமேந்திப் போய்
இளவழகி ரம்பை
வழமையில் காய்ந்து
கருகி வெயிலில்
ஓரிரு சரை விற்கும்
உடைந்த ஆச்சியிடம்
உவகையுடன் கொடுத்து
விடைபெற்றாள் தேவமாது
கொரொனா வந்திங்கு
குலைப்பதற்கு முன்பு
கொடியேறிக் கோயிலொன்று
திருவிழா பூங்காவனம்
தீர்ந்து கச்சானெல்லாம்
தித்தித்து பூத்த
கிழவியின் சிரிப்பு
அத்தியென பூத்ததின்று
அவள் ரம்பை
கண்டாளிங்கும் தேவலோகம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...