இரவு கொஞ்சம் அறையை நோட்டம்விடும்போது
அநேகமாய் எல்லாம்
கொரோனாவை எதிர்கொள்ளும்
ஆயுதங்கள் போலிருக்கின்றன
இன்றுமட்டும்
சற்று தளர்த்தப்பட்ட லொக்டவுணில்
வாங்கிவந்த
ஒரு அரைக்கிலோ கருவாடு
நெஞ்சை நிமிர்த்தியபடி
அரிசிப்பை
காவலரணில் அடுக்கப்பட்ட
மண்மூடை போலவே
ஏதோ ஒரு போர்க்களத்திலேயே
வாழ்ந்து முடி என்கிறது
யாஸ் என்ற ஒரு புயல்
வெளியில் இரைந்துகொண்டிருக்கிறது.
காவோலை மட்டைகள்
கொக்காரைகள் அள்ளி சுமந்தபடி
கிழவியை
வரும் வழியில் கண்டேன்
காஸ் தீர்ந்துபோகும்
அச்சத்திற்கு முன்
அவள் லாக்டவுணின்
குதிரைப்படை தளபதியாக
இரவு தோன்றுகிறாள்
நாளை மறுபடியும்
சாலைகள் வெறிச்சோடிவிடும்
தெருநாய்கள் எப்படி சாப்பிடும்
கேள்வி எழுந்து மறைகிறது
அஸ்த்திரங்கள் தீர்ந்தும்
வெறுங்கையர்களுக்கு
அடுத்து என்ன வழிகளென்றும்
கேட்டு நிற்கும் நாட்களில்
இதுவும்தான்
இந்த நாளை
நான் வென்றேனா தோற்றேனா
தீர்ப்பறியாமலே
இன்று தூக்கத்திற்கு போகிறேன்
No comments:
Post a Comment