Tuesday, May 25, 2021

கனவிலிருப்பவன்-பொன்.காந்தன்


நீயறியாய்
கனவிலிருப்பவனின் சேவகர்கள்
உன்னை
பல்லக்கில் சுமக்கிறார்கள்
ஆடையும் இதுவல்ல
ரம்மியமான பொழுதில்
சிறகுகள் வரமளிக்கப்படுகிறது
விழிகளுக்கு
மாடத்தெரு படைக்கிறார்கள்
அலங்கரிக்கப்படுகிறாய்
சிற்பிகளுக்கிடையில்
ஓவியர்களுக்கிடையில்
மலர்களுக்கிடையில்
தேவகானத்துக்கிடையில்
கரைக்கப்படுகிறாய்
கனவு இராச்சிய கட்டளையில்
படைக்கப்படுகிறாய்
உன் துவண்டுபோன
பாதங்களில் சலங்கைபூட்டி
விம்மல்களை புதைத்து
முற்றத்தை தெருவை
காவல் செய்கிறது
கனவிலிருப்பவன் படைகள்
நீயறியாய்
நீ இளவரசி
ஏதுமற்றதொரு
உனது காலத்தில்
கனவிலிருப்பவன்
உன்னோடிருக்கிறான்
கடைத்தெருவில்
ஏங்கிக் கடக்கும்
உன் பின்
ஒரு கூடை
பொற்காசுகளோடு
அலைகிறான் அவன்
மாற்றியுடுக்க
துணியற்ற பொழுதில்
முத்துப்பதித்த
தங்க வஸ்த்திரத்தோடு
முற்றத்தில் நிற்கிறான்
பசியில் நீ உறங்கும்போது
கல்லாகிப் போய்விடுகிறான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...