Sunday, March 21, 2021

மண்ணுக்கு மகிழ்ச்சி -பொன்.காந்தன்

 


உங்கள் கொம்புகளின் எழுச்சி
மட்டு நகர் தேன்தானே
மாந்தினேன் மயக்கத்தில் உழன்றேன்
மாறாப்பை பிடித்திழுத்தேன்
விட்டுவிடு என்ற ஒரு வீறாப்பு உறுமல்
வெடுக்கென்று எழுந்தேன்
பொத்துவிலில் ஜல்லிக்கட்டு
பூரித்துப்போயிற்று என் பூர்வீகம்
கட்டறுத்த காளைகளின்
கண்ணில் மின்னலிடி
கடிவாளம் போட்டவரை
எட்டிப் பாய்ந்து எழும்பியது
இதுதானடா கனவுகளின் சிலிர்ப்பு
நட்டுக்கொண்டது மயிர்கள்
நறநறவென்றது பற்கள்
கொட்டும் முரசுபோல குரல்கள்
குடும்பிமலை நிமிர்ந்தது
பறித்தெடுக்கப்பட்ட பாவலனின்
பட்டும் பீதாம்பரம் கட்ட
நாக பாணங்கள் உண்டுதான்
பாட்டனின் விதைப்பு பறவாயில்லை
நாட்டரிசி
நண்டும் இறாலும் சும்மாவா
தாட்டுழுதுள்ளான் பாட்டன்
தரமான விளைச்சலின்று
மடக்கி பிடிக்க முடியாதபடி
திருக்கோணமலை சிகரமானது மூச்சு
தீருவில் புலேந்திரனுக்கு
பொத்துவிலையுரைத்தது புதுக்காற்று
வாவி கொதித்து
பொலிகண்டிவரை பயணம்
கூவியது பூபாளம்
திருக்கோவில் தினவெடுத்த சேவல்
புலரிப் பனையின் மிடுக்கில்
புதுக் கள்ளுறியது நெருப்பாய்
அன்றுகொட்டிய மழை
தேராவில் தேவர்களின் தீர்த்தம்
நன்று நனைந்தீர் ஏறுகாள்
மணலாற்றுக் கானகத்தின்
வரலாற்று கிளைகள் இலையசைத்தன
விழப்போகும் விருட்சம் தாங்கும்
வீரியம் இன்னும் சாகவில்லை
விழுதுகளுக்கு இங்கு ஏது எல்லை
அழுது முடிக்கவேண்டும்
அடிக்கடி சிணுங்க முடியாது
பொழுதை அழைக்க பூக்கள் தெருவில்
இரவை முடித்து வைக்க
எழுந்தன மின்மினிகள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை
கொட்டுக்குள் கிடந்த குஞ்சுகள்
கொழுந்துவிட்டெரிந்தன
இட்டுக்கட்டிய கதைகளோடு ஈழமில்லை
இத்துப்போகாத நிலத்தின்
இறக்காத பெரும் சரித்திர ஆழத்துடன்
மட்டுநகர் காளைகளே
மண்ணுக்கு மகிழ்ச்சி
உங்கள் கொம்புகளின் எழுச்சி!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...