Sunday, March 21, 2021

பக்கிங்காம் தெருவும் பசியிருக்கும் பூவரசும்-பொன்.காந்தன்

 

சயன்சென்றர் முடிய
சாய்த்தபடி குமரிகளோடு முடிந்த அந்தி
செட்டை முளைத்திருந்த இரவு
குட்டை பாவாடைக்கொரு நக்கல்
குப்பாடியென
அவள் திட்டும் செல்லம்
கொள்ளை போயிற்று தெருவில்
குழறியழுதபடி
குருத்துக்களை ஏந்திப்போய்
விடியுமென விதைத்து வந்தோம்
விண்ணிற் கொடியெனவும் கனவுடனிருந்தோம்
வேட்டையாடப்பட்டது எல்லாம்
வெறும் மேட்டில் மறுபடியும்
தலைசாய்த்தோம்
கனவு விடவில்லை கண்ணை மூட
வேங்கை வீதியில்
விளம்பர அழகியின் சிரிப்பு
ஆயிரம் நிமிசங்கள் இலவசம்
அழையுங்கள் அலைபேசி சிணுங்கல்
எதைப் பேச யாரொடு பேச
கடைசியில்
வட்டுவாகலில் நிற்கும் வார்த்தைகள்
எப்படித்திரும்புவது
படங்கு விரித்து
படுத்திருந்து போய் வந்த
திருவிழா இரவுகளுக்கு
தொடங்கலாம்
எல்லா நினைவுகளும் தொலைத்து
என்று திரும்பினால்
உடைந்து நொறுங்கி தாய்மனமெங்கும்
உள்வீட்டில் தினமும் ஒப்பாரி
மோகனம் கலைக்கப்பட்ட மல்லிகையை
ஏதேதோ இழுத்து உலுப்புகிறது
யாருமறியாக் கண்ணீர்
நாலுசுவருக்குள் நனைகிறது நிலம்
தகிக்கும் பல கதைக்கு
எந்தக்கடையிலும்
அந்த நந்தவனக் குடைகளில்லை
நதிக்கரைக்கு திரும்பி
நாணலோட பாட வழியில்லை
பத்தியிறைக்கி படுகிடையாய்
பெற்றவயிறுகள் வழி நீளம்
உக்கி நலிந்தும்
உறங்கியும் விட்டன நிரந்தமாயும்
பக்கிங்காம் பக்கத்தில்
அம்பிகை பசித்திருக்க தொடங்கினளாம்
காக்குமா இவ்வுலகம்
பழுத்து உதிராமல்
பாதியில் இலைவிழாமல்
கள்ளரிடம் ஈழத்தை குடுத்த
காலனித்துவ கறைக்கு
வெள்ளை பூசுமா எலிசெபத்தின் இரக்கம்
விடையை இம்முறையும்
பிழையாய் எழுதிச் சரிபோடுமா
சோல்பரியை எழுப்பிக்கேட்டால்
ஐம் சொறியென்றுதானே சொல்லுவார்
நூலிழை அறுந்துபோகும் வரை
நொந்துபோகாமல்
தேம்ஸின் ஈரம் தேற்றுமா அம்பிகையை
பாய்ந்த நதி தமிழர்
ஊர்ந்துபோவதில்லை
ஓடிவந்து குந்தியிருக்கிறாள்
ஒத்தடம் கொடுக்க தமிழிச்சியொருத்தி
அவள் வாடியுலர விடாமல்
வெஸ்ட்மின்ஸ்டரின் விழியருள வேண்டும்
வேலிக்கருகில் என்றால்
எட்டி விசாரிக்கலாம்
எங்கோ தொலைவில்
இந்த வேரடிக்காய்
விரமிருக்கிறாள் ஒரு தங்கச்சி
வெல்லலாம் தோற்கலாம்
அம்பிகையென ஒருத்தியும்
எங்கள் தாய்வயிற்றில் பிறந்தாள்
அதுவே திருப்திதான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...