Sunday, March 21, 2021

வெள்ளி பூக்குமடி-பொன்.காந்தன்

 


பின்னேரப் பாண் வாங்க
பேரம்பலம் போனவர்
இந் நேரம் வந்திருப்பார்
இதுகாலும் காணவில்லை
நெஞ்சோடு கை வைத்து
நெடு வழியை பார்த்தபடி
சொன்னாலும் கேக்காது
சோத்தையும் இரவண்டா
இளந்தாரி போலவுந்தான்
இப்பவும் இம் மனுசன்
கலியாணம் கட்டியின்று
கன வரியம் ஆனாலும்
பெடல் மாறி இடறாமல்
பேத்தியின் சைக்கிளிலே
பிறேக்கையும் சரிபார்த்து
பருத்தித்துறை பக்கமாக
பாண்விற்கும் கடையடிக்கு
சுணங்காமல் போய் திரும்பும்
முருகேசு பெண்டிலுக்கு
முன் வீட்டு படலைக்குள்
வரலாற்றை சொன்னபடி
வழி பார்த்து வியாலாட்சி
வாயுன்னி முடிப்பதற்குள்
முன் சந்தி வளைவினிலே
முகமொன்று பேரம்பலம்
பெண்சாதி முன்னிறங்கி
பெருங்கூட்டம் தெருவின்று
பொலிகண்டிப் பக்கமாக
போகுது பெரு வெள்ளம்
வல்லை வெளி நிரம்பி
மண்டான் குஞ்சர் கடை
மணித்தியாலக் கணக்கு
குண்டர் படைக் கெதிராய்
கொதித்தெழுந்த பேராறு
கண்டமுகம் பலதில்லை
காட்டாறாய் பெருக்கில்
குச்சவெளி கோணமலை
மட்டக்களப்பு பக்கமாய்
பொத்துவிலில் புறப்பட்ட
கட்டறுத்த கடுங்கோவம்
கையில் கொடி பிடித்து
கொக்குளாய் மாங்குளம்
அப்புறம் வவுனியாவூர்
மன்னார் திரு முறிகண்டி
ஆனையிறவு செம்மணி
பின்னால் துரத்தி தடை
இடையில் செருகிப்படை
நடையை மடக்க போட்ட
கடை கெட்ட ஈனத்தினை
உடைத்துப் பிளந்த நிலை
குலையாமல் கடந்தின்று
பொலிகண்டி திசையில்
போய்கொண்டே இருந்தது
நெடு நதியாய் கோசம்
அட்டியில் ஏறிக் கொடி
அகன்ற வானம் நிரம்ப
பெட்டைபெடியலேராளம்
அந்திவானத்தின் அழகாய்
சந்தியை கடந்து பேரணி
மந்திகைப் பக்கமாய்
உந்துருளியில் ஏறிநின்று
உயரக் கொடி பிடித்தபடி
இன்றைய பெடியன்கள
இளவு காவாலிகள் என்று
எப்படி இனி பேச்சு வரும்
உச்சி முகர வேண்டுமே
உள்ளே ஒரு நெருப்புண்டு
கண்டாவளை மணியத்தார்
கறுப்புத் துணி கட்டியபடி
மண்டான் குணத்தானை
மாசார் சோதி நாதனை
மீசாலை வீர சிங்கத்தை
மிச்சமின்றி யாவரையும்
பெட்டி வானில் ஏற்றிபடி
பெரிசாய் கோசமெழுப்பி
போறதை தெருக்களின்று
பச்சைத் தமிழராகி காண
பரம்பரை குணம் மீண்டது
பத்திரகாளி கோயில் ஐயா
பக்கத்தில் குல்லாவோடு
இப்ராஹிமும் மகளும்
அந்தோனியார் ஆலய
அருட் தந்தையர்களும்
சிஸ்டர் லூர்த்துக்களும்
கற்றன் சின்னசாமியும்
ஒன்றாய் தமிழரான நாள்
நன்றாய் இருந்தது
இன்றைய மேற்குவானம்
நிறைய வெள்ளி பூக்குமடி
வியாலாட்சி என்றார்
பேரம்பலம் புல்லரித்து.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...