எல்லாம் திறந்தார்கள்
எல்லோரும்
எங்கெங்கோ போனார்கள்
எங்கும் திறக்கப்பட்டது
எதற்காகவோ எல்லாம்.
இப்போது
மூடப்படும் காலம்
முதலில் முகத்தை
கடற்கரை சாலையை
திறக்கப்பட்டவை யாவும்.
இரயில் மேடையிலும்
வைன் குவளைகளிலும்
குதிரைச் சவாரியிலும்
மின்சார படிக்கட்டிலும்
வென்ற லாவகம்
தடுமாறித் தோற்றது
ஒற்றைச் சொல்லில்
நட்சத்திர விடுதியில்
வலைபின்னும் சிலந்தியின்
இரவுக் கேளிக்கை
வொற்காவின் லேபளில்
மறைக்கப்பட்ட
பெளர்ணமி இரவையும்
அந்தி சிவப்பையும்
அள்ளி வீசியது வெளியே
ஈபிளின் பார்வை
சுதந்திர தேவியின் நிழல்
செஞ்சதுக்கத்தின் புரவி
பக்கிங்காம் கிரீடத்தின்
புறமுதுகிலும்
தஸ்தயெவ்ஸ்கியின் பேனா
எழுதியிருக்கலாம்
இடையை
கால்கள் பின்ன
கூந்தலில்
முகம் புதைத்தபடி
எப்போதும் இனிக்கும்
உப்பு மூட்டையோடு
காத்திருக்கிறது முற்றம்
வென்று பார்க்கலாமென
ஏற்பதை தவிர வழியில்லை!
உப்பு மூட்டை வேணுமா
உப்பு மூட்டை

No comments:
Post a Comment