படங்கு விரித்து
பாயாச மிச்சமும் குடித்து
இடம்பிடித்தமர்ந்து
ஈராறில் குமரியானவள்
சடங்கு வீட்டில் மகிழ்ந்து
கிடங்கு பள்ளமறியாக்
கீறல்விழாப் பருவத்தில்
தொடங்கும் இனிமைக்கு
தூறல் வசந்தங்களாய்
படங்கள் நாலு பார்க்கப்
பரவசமாய் முழு இரவும்
வரங்களாய் வாய்த்ததம்
மணவறை பந்தல் நல்வரவு
வாழையோடு முடியும்
சீனியாஸ் குறோட்டன்
செவ்வந்தி முற்றத்தில்
கும்பம் தேங்காய்
குத்து விளக்கையெடுத்து
அலம்பி மடித்து
அடிப் பெட்டியில் வைத்த
கம்பளம் உதறி விரித்து
மல்லுக் கட்டித் தூக்கி
மனோ ஸ்பீக்கர் காரர்
மரப்பலகை ரிவி வைக்க
தரவளி கொஞ்சம் அங்கு
விரல்மடித்து விசிலடிக்கும்
இலாச்சியை இழுத்தவர்
நாலைந்து கொப்பி செருக
வால் முளைத்த சிலதுபோய்
வடிவாய் திறந்து பாக்கும்
ஓணருக்கு ஓடிப்போய்
உண்டென பால்க் கோப்பி
எவர் சில்வர் இறேயில்
எடுத்துவரும் இளமயில்கள்
பருத்தித்துறை வடைகடித்து
பால்கோப்பி குடித்துப்பின்
ஆர்விஜி ஒன்றெடுத்து
அடிவளவில் இழுத்து விட்டு
அவர் வரும் நேரம்வரை
ஓடாத ரிவி பார்த்தே
ஓராயிரம் இன்பமன்றோ
எழுத்தோட்டம் வர முன்னர்
ஏகப்பட்ட புள்ளி பார்த்து
குதூகலித்த கூட்டமல்லோ
ஏவிம் எழுத்து வந்து
இளையராசா இசையோடு
ஆசைப்பட்ட நாலுபடம்
அம் முற்றம் அனுபவிக்க
சோகக்கட்டங்களில்
சொரிந்து கண்ணீர் விட்டு
காதல் காட்சிகள்
கையிடை உதடுயென்றாக
இடத்தை விட்டெழுந்து
இரண்டொன்று நழுவும்
தளம்பாமல் விடியும்வரை
தனித்து பார்க்கவும் சிலது
ஒரு கால முற்றத்தின்
ஊர்சேரும் வண்ணங்கள்
காலத்தில் மாறிப்போய்
கையிலொரு யுனிசெவ் பை
கட்டவும் துணி நிவாரணம்
பட்டிணிக்கு கூட
பல் தீட்ட பிறஸ் பேஸ்ற்
பாண் பருப்பு சீனி தர
றெட்குறோஸ்
படுக்கும் பாய் யூஎன்சிஆர்
பார்த்தால் மேலே
யூ என் தறப்பாள்
இருபக்கம் சேலை சுவர்
எழும்பும் போது மலேரியா
இப்போது கூட
இந்திய வீட்டுத் திட்டம்
இன்னமும் கூட
பானர்கள் கட்டி
எவர் எவரோ தருகிறார்கள்
எப்போதோ இழந்தோம்
ஓர் அழகிய முற்றம்
No comments:
Post a Comment