கண்டிப்போன கால்களின் காவியத்தை
கொஞ்சம்
நெஞ்சுக்குள் வைத்து நீவி விடுகிறேன்
நாவற்குழியை தட்டி எழுப்பி
கண்டிவீதியில் வழிந்த கண்ணீரின்
காய்ந்துவிடாத இமைகளை வருடினேன்
வேரை பிரியும்
கிளைகளின் வேதனையை
பூக்களுக்கின்று போதிக்க தோன்றும்
நாராய் கிழிந்து பனந்தோப்பு
நடந்த தெருவை மறந்திடவோ
ஊர் வசந்தம் ஓவென அழுத ஓலத்தை
கடந்து வந்தோம் கனதூரம்
நினைவும் கூட
நின்று நின்று இன்றும் ஏம்பலிக்கும்
முன்னிலவு முற்றத்தில்
மோகம் தரும் முல்லைக்கொடியை
முடிவற்று விடைகொடுத்த
ஆழக்காதல் அழுது புரண்டது
சோழக்கொடிக்காய் சோரமின்றி
தோளிலும் மடியிலும் சுமைகளேற்றி
வாழப் பிறந்த வதன நிலமிருந்து
வரலாறாய் நடந்தது யாழ்ப்பாணம்
வடலியும் பூவரசும் பிடரி மயிரிலும்
பகைவன் சுவாசம் படாமல்
அடர்ந்தது கடலோரம்
பற்றிப் படர்ந்திருந்த
அத்தனை பாசக்கொடியையும்
அறுத்தெறிந்து விட்டு அலையிலேறியது
நட்டுக்கொண்டு நின்றது தன்மானம்
சுற்றியடைத்த வேலிக்குள்
முற்றிக்கிடந்த முந்தானைக்கனிகள்
வெட்டவெளியில் விறைத்தன
வீரியமாய் சிவந்து மரத்தன
பச்சைத்தாவணிக்குள் விளைந்த நாணம்
பத்திரகாளியாய் பாதையிலிறங்கியது
சத்தியப்பயணத்துக்காய்
பற்றுத் துறந்த சேனைப்புலத்தை
தெப்பங்களில் ஏற்றியசைந்தது கிளாலி
அப்பாலாண்ட மன்னவரின்
மண்ணித்தலை மணல் முகடுகள்
கண் வெட்டாமல் காத்திருந்தன
மொட்டைக்கறுப்பன் வெளியில்
மொத்த யாழ்ப்பாணமும்
எப்படியெனினும்
அன்னையை இழந்தால்
அழுகை வராதா
வாடியடியெல்லாம் விம்மல்
ஆலடிகள் ஆறுதல் சொல்லின
காலடித்தடம்
ஓர் நாள் வரலாறென
வன்னி
பட்சிபறவைகள் கனவுரைத்தன
அடம்பன் வரையும்
அகலக்கைவிரித்து அணைத்தாளொருத்தி
ஒட்டுசுட்டானிலிருந்து
உச்சிமுகரக் காத்திருந்த உதடு
விசுவமடு விரித்தது
உரிமையோடு உட்கார பந்திப்பாய்
ஊர்பிரிந்த நெஞ்சத்தை
வருடிவிட மலியிறகொடு மல்லாவி
கோட்டை கட்டியகுளம்
குமரிகளின் வரவுக்காய் குளிர்ந்தது
அடங்காப்பற்று முழுக்க
குடங்களில் தழும்பும் நிறைவாய்
உறைவொயென உச்சரித்தது
வயற்கோவியன் கடிக்காதென
வரம்புகளிலிருந்து இறங்கின கால்கள்
ஜெயபுரத்தில் அத்தான் வீடென்று
சுற்றிச்சுழன்று
காடுகளை தழுவின பறவைகள்
அக்கராயனில்தான்
அப்பாவின் அடிமுழுக்கவென
பற்றிக்கொண்டு பறண்கட்டியது மனம்
வட்டக்கச்சி முருகேசின்
பத்தேக்கர் காணி
பார்வையில் நீர்வேலி நிறமானது.
அரியாலையின் அகலிகைக்கு
திருவையாற்றில் சாமத்தியவீடு
கனகாம்பிகை அம்மனில்
நிலுவையாயிருந்த முகூர்த்தத்தில்
தாவடிக்கும் கோப்பாய்க்கும்
தாலி கட்டு ஒப்பேறியது.
பாண்டியன்குளம்வரையும்
பாதையில் தவறிய ரதியைதேடி
மன்மதன்
துணுக்காய் வயிலிடை தோன்றினான்
இரணைமடுவின் ஈரத்தில்
ஊரியான்வரை சிலிர்த்தது இதயம்
ஏற்ற இறக்கங்கள் தொலைந்தன
எவர் எதுவென்று ஏதுமில்லை
புளுதிக்குள் நின்று புன்னகைத்தனர்
பிரமந்தனாற்றிலேயே
வாழ்ந்து முடிக்கவும் பிரியப்பட்டனர்
ஆண்ட நிலத்துக்காய்
இழந்ததைப்பற்றி மறந்து நிமிர்ந்தனர்
மறுபடியும்தான் மானத்துக்காய்
ஏதேனும் கொடுக்கத்துணிந்தனர்
கனகபுரத்திலும்
கடைசித்துயில் கொண்டனர்
முழங்காவிலிலும்
விதையத்துணிந்தனர்
அன்றந்த
செம்மணி கடந்த சீவன்கள்
வன்னி நிலம் முழுக்க வாழ்ந்து
வரலாற்றுக்கும் ஈந்து
நத்திக்கடல்வரையும்
நடந்து துவண்டு மடிந்தனர்
இன்றுவரை அவர் ஆத்மமும்
முன்னிலவு முற்றத்தில்
முல்லைப்பந்தல் ஊரிற்கு
சென்றுவிட வசந்தமில்லை
நனைகின்றன மீண்டும் இமைகள்
ஈழத்து மாந்தரின்
இழத்தலிலும் ஈகத்திலும்

No comments:
Post a Comment