Thursday, December 24, 2020

என் பதினாறே!-பொன்.காந்தன்



அன்புள்ள
என் பதினாறுக்கு
ஆவலுடன் எழுதுவது
கன்னத்திலும்
கரு மீசையிலும் காலம்
மெள்ள
வெள்ளை தடவும் கோலம்
முற்றிப் பருவம்
முறுகிப் பெருத்தும்
சுற்றியும் கிளையெறிந்தும்
வற்றத் தொடங்குகிறது
சில பொய்கை பூங்காற்றும்
சற்று உனை நினைந்தேன்
இக்கணம்
பற்றிப் படர்ந்தாயன்று
கொட்டிவிட்டாய்
மனதுக்குள் ஒரு பொழுது
மாயக் கலவைகளை
கட்டொன்று
அவிழ்ந்தது போல் சிலிர்ப்பு
கண்ணாடி முன் எனக்கு
ஐந்தாறு அரும்புமீசை காட்டி
இந்தா பிடியென
இன்பரசம் ஊட்டினாய்
கண்ணாலும் பேசலாமென
கைப்பிடித்து நடத்தி
இந்திரலோக இதமூட்டினாய்
அம்மாவின்
முந்தானை பிடி
கொஞ்சம் இளக்கி
அம் மான்களை தேடும்
அரும்பும் துடிப்புக்கு
தனி அரங்கம் திறந்தாய்
உச்சி பிரித்து இழுத்ததை
இஸ்டப்படி பறக்க விட்டாய்
இடைக்கிடை
மடக்கி கோதவுமாய்.
கட்டிப்புரண்டு முற்றத்தில்
கிட்டி புள்ளு
புழுதி அளைவதை விட்டு
சட்டை கசங்காமல்
பெட்டைகளுக்கு இடையில்
உலாப் போக வைத்தாய்
புளுகொன்றை எப்போதும்
பூட்டிவைத்தாய் மனதில்
வகுப்பறையில்
வம்புகளையும் கூடவே.
பிடிவாதம் அடம்பிடிப்பை
வரம் கேட்டேன் என்பதாய்
வாரி இறைத்தாய்
வீட்டில் அடம்பிடித்து
வெல்ல முடியாமல்
சிணுங்கவும் சீறவும்
ஓரமாய் மூஞ்சை நீட்டவும்
கோபத்துக்கும்
குறுகிய எல்லைதான்
சில்லறைகள் சேர்த்து
திருட்டாய் படம்
திருவிழாவில் ஐஸ்கிறீம்
தீரும்வரை சுகம்
நடைதான் பள்ளிக்கு
நாளும்
புளுதி தெருவானாலும்
ஓரங்களில்
பறவைகள்
ஓடைகளில் ஒத்தடமானாய்
கம்பங்கள் இருந்தன
மின்சாரமில்லை
மின் மினிக்கிடையில்
சுகமான சந்நிதி
சந்திக்க
சரசங்களை தொடக்க
பூநாறி ஒழுங்கைகள்
தாராளம் ஆக்கினாய்
கனவுகளை
அறிமுகம் செய்தாய்
கவனமுடன் படியென
கட்டளையிட்டும் கடிந்தாய்
முடிசூட்டியும்
முகத்தை நிமிர்த்தினாய்
மறுபடியும்
என் பதினாறே
நீ வரமானால்
அம்மாவின் சேலையில்
அகாலமாய் தூக்கிட்டு
கண்மூடிய
இக்காலப் பதினாறை
கைப் பிடித்தழைத்தபடி
உன்னோடு சேர்த்து
உலகத்தை இனிக்க
உளங்கொண்டேன் இன்று!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...