Thursday, December 24, 2020

கோடையின் சம்பாசணை-பொன்.காந்தன்



சில மாதங்களுக்கு முன் கோடையில் நமக்கு தெரிந்த ஊரின் அம்மணி ஒருவர் தொலைபேசியில் கடுப்பாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.மறுமுனையில் யாரோ இப்படி வகையறாக்களை சமாளிக்ககூடிய மாய வார்த்தைகளை முலாம்பூசுவதில் வல்லவன் ஒருவன் இருந்திருக்க கூடும்.அம்மணியின் சூடு சடுதியாக தணிந்து விட்டது.இறுதியில் புன்னகையோடு அந்த மறுமுனை மாய வித்தைக்காரனிடம் விடைபெற்று அதே புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.
அங்கு நடந்தது என்னவோ தண்ணீர் உரையாடல்தான்.ஒரு வாரமாக அம்மணிக்கு குழாய் நீர் சீராகக் கிடைக்கவில்லை.இரண்டு நாட்களாக தண்ணீர் வரவே இல்லை. பரம்பரையாய் அள்ளிக்குளித்து குடித்து சமைத்த பழைய கிணற்றில் கயிற்று வாளியில் குனிந்து அள்ளும் அளவில் பொறுமையை அவகாசங்களை வைக்காமல் வாழ்க்கை நாகரிகமும் மாறிக்கிடக்கின்றது.வேறு வழியில்லை அம்மணியைப்போல் குழாய் நீர் கொடுப்பவர்களோடு இவ்வாறு ஒரு சம்பாசணைகள் கோடையில் நடந்து முடிகிறது.நம் முன்னோர்களிடம் கைபேசி இருக்கவில்லை.இந்த நீலவானத்து முகில்களுக்கு இலக்கங்களும் இருக்கவில்லை.வானத்தோடு அவர்கள் பேசினார்கள்.வானமும் மும்மாரி பொழிந்தது.போகங்களும் சிலிர்த்தன.
இப்போது காலடியில் இந்த கார்காலத்தில் கொட்டித்தீர்த்தது மழை.வழமையில் தனியே வந்து தனி ஆவர்த்தனம் செய்யும் மழை.இம்முறை நிவர் புரெவி என இரண்டு புயல் சேடிகளோடு வந்து பொழிந்து தள்ளியிருக்கிறது.சில இடங்களை புரட்டிப்போட்டிருக்கிறது.இருந்தும் வளவு முழுக்க தெருமுழுக்க ஊர்முழுக்க நீர்க்காடாய் இருக்கும் காட்சியை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இதே பூமியில் தினமும் தண்ணீருக்காய் ஏங்கும்
ஒரு வறண்ட உலகமும் தண்ணீருக்காய் நெடுந்தூரங்கள் அலையும் சீவன்களும் உண்டு.நினைத்துப்பார்த்தால் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.மழை கொடையளித்திருக்கிறது எங்களுக்கு.
இரவு முழுக்க மழை காற்று.விடிந்ததும் அதே அம்மணிக்கு அழைப்பெடுத்து கேட்டேன் எப்படி மழை என்று.கோடையில் அவர் அடைந்த கடுகடுப்புக்கு நிகரான குதூகலம் குளிர்ச்சி அவர்பதிலில் இல்லை.இரவு மின்சாரம் நின்றுவிட்டதாம்.வாசலில் இறங்க முடியவில்லையாம்.முற்றம் சேறாகி விட்டதாம்.இப்படி நீள்கிறது அவர் கதை.நாம் அநேகம்பேர் தண்ணீரை வைத்து கனவு காண்பதில்லை.கிணறுகள் முட்டி நிரம்பி வழிந்து எம்மிடம் பேசும் வார்த்தகளை நாம் புரிந்து கொள்வதுமில்லை.மழை காலத்தில் இப்பொழுது ஒரு வார்த்தை ஒட்டிக்கொண்டுவிட்டது.அதுதான் அனர்த்தம்.
அனர்த்தம் அனைத்தையும் இயற்கை தருவதில்லை.நாம்தான் அதை கொடுத்தது அதனிடம்வாங்கிக்கொள்கிறோம்.வானத்திடம் அபிப்பிராயம் அறியாமல் நிலத்தின் மனதில் உள்ளதை உணராமல் மரங்களிடம் கருத்துக்கேட்காமல் காடுகளிடம் உறவு கொள்ளாமல் நிறைய காரியங்கள் செய்து முடித்துவிடுகிறோம்.இறுதியில் இயற்கை அனர்த்தம் என்ற வார்த்தைக்குள் இருந்து நல்லவர்களாக ஒவ்வொரு கோடையிலும் மாரியிலும் தப்பிக்கொள்கிறோம்.இன்னமும் சிலர் அகதிமுகாம்களில் வாழ்வதைப்போலவே சொந்த வீடுகளில் ஏன் மாடிவீடுகளிலும் வாழ்கிறார்கள்.மஞ்சள் நிற கொள்கலனை தூக்கிக்கொண்டு அடுத்த தெருவிலோ அடுத்த ஊரிலோ தண்ணீர் அள்ளி வருகிறார்கள்.குடிநீருக்கான அலைச்சல் நம் காலடியில் பெருகிக்கொண்டுதான் போகிறது.ஏன் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் குளங்களும் ஓடைகளும் நிறைந்த எமது ஊரில் அமோக விற்பனையாவது ஆச்சரியமாக தோன்றவில்லையா. ஊரின் பெயர்களில் குளங்களை வைத்திருக்கும் எங்களுக்கு அது எதை சொல்கிறது.
அகதி முகாமில் ஒரு பத்துலீற்றர் தண்ணீரில் குளித்து குடித்து ஆடை தோய்த்தவர்களுக்கு இப்படி கொட்டித் தீர்க்கும் மழை மழைத் திருவிழாதான்.மழை பெரு மகிழ்ச்சி.என்னுடைய பள்ளி காலம் முழுவதும் எத்தனை கார்காலங்கள் வந்து போனது.ஒவ்வொன்றாய் நினைத்தால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பாதங்களை மூடும் வெள்ளத்தில் இடுப்பளவு ஓடும் தண்ணீரில் முழங்காலளவு தேங்கிய நீரில் நனைந்தே என்னூரிலிருந்து பள்ளிக்கோ பட்டணத்துக்கோ போயிருக்கிறேன்.என் கிராமத்தாரும் அப்படித்தான்.இரண்டு மூன்று குளங்கள் ஊரைச் சுற்றி. ஒவ்வொன்றும் வான்பாயும் காலால் எற்றியும் கையால் எற்றியும் நீந்தியும் கார்காலத்தை கொண்டாடி முடித்தோம்.அனர்த்தம் என்ற வார்த்தைக்கு இடமில்லை.அப்போது இயற்கையின் வடிகால்களை எவரும் இடையூறு செய்யவும் இல்லை.மழையின் வழியில் குறுக்கிடவில்லை மழையின் வழியில் போனோம் அது இதமான அனுபவங்களை தந்தது.மழைக்கால சுற்றுலாவுக்கு ஒவ்வொரு குளங்களும் நிரம்பி வழிந்து அழைத்தன.
இந்த கார்காலம் தொடங்குவதற்கு முந்தைய சில நாட்களில் சில இளைஞர் கூட்டம் கட்டாந் தரைகளில் பனம் விதைகளை தினமும் விதைத்துக்கொண்டிருந்தார்கள்.இன்னும் சில பசுமைவிரும்பிகள் படித்தவர்கள் சமுக ஆர்வலர்கள் தொடர்ந்து எங்கள் மண்ணில் ஊர்களில் தெருக்களில் மரங்களை நடுவதை காண முடிந்தது கோடையில் இந்த மழையின் புன்னகையை முளைத்து கிளைவிடும் மரங்களிலும் காணலாமென காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...