புதிய கதை காத்துள்ளது
சுமந்தாள் ஈன்றாளல்ல
காத்தாள் போராடினாள்
கடவுளின் சந்நிதிகளும்
திருச்சபைகளும்
பொலிவிழந்து வெறிச்சோடின
முகமூடிகளும்
மூடப்படும்
பிணக் குழிகளுமாய்
நாட்கள் நரகமாயிருந்தன
பயணங்கள் இல்லை
கொண்டாட்டங்கள் இல்லை
அப்போது
நீ அம்மாவின் வயிற்றில்
கருவயிற்றை
கொண்டாடுவதானால்
இந்த நாட்களில்
மஞ்சளும் மலர்களும்
பூமியின் கனிகள் யாவும்
ஈடற்றனவாயின
கோவிலின் கர்ப்பகிரகமாய்
அவள் வயிறு மட்டுமே
பொலிவுடன் இருந்தது
சக்கியுடனும்
வரத்துடனும் இருந்தது
திருவயிற்றுடையாள்
விஞ்ஞானங்களை
தினமும் தோற்கடித்த
மெய்ஞானங்களை
தினமும் மிரளச்செய்த
வல்லாண்மைகளை
வாயடக்கச் செய்த
கொடிய கொரோனா
அம்மாவின்
தொப்பூள் கொடியிலும்
மோதிப் பார்த்தது
மகனே மகளே
அம்மாவின் புதிய கதையை
அடுத்து வரும்
யுகமெங்கணும் எழுதிவை
உனது தாய்
ஒரு போர் செய்தாள்
அவளின் அஸ்திரம்
தொப்பூள் கொடி
அவளின் வெற்றிக்கொடி நீ

No comments:
Post a Comment