Thursday, December 24, 2020

முற்றம்-பொன்.காந்தன்



ஓர் நாள்
எல்லாம் முடிந்தது
அந்த துயரத்திற்கு
கரையுமில்லை முகடுமில்லை
வானமுமில்லை
பிரபஞ்சமுமில்லை
எல்லாப்பாரங்களையும்
அள்ளி தோள்களில் போட்டேன்
சிலுவையாயும் இல்லை
நான் நிமிரவேண்டுமென
என்னை அழுத்தும் ஒன்று
ஓங்கி ஒலிக்க துடிக்கும்
குரல்வளையை
இறுக நசிக்கும் ஒன்று
பார்க்க ஏங்கும் காட்சியாவும்
மறைத்து நிற்கும்
இருள்களில் ஒன்று
என் வாசலில்
எனக்காக காத்திருக்கும்
நாய்க் குட்டிவரையிலும்
ஒவ்வொன்றாய் நினைத்தபடி
ஊர் திரும்பினேன்
நேசித்தவை எதுவுமில்லை
எப்படித் தொடங்குவது
முற்றத்தை வரைந்து
எப்படி அழுவது
திரைகளை மறைத்து
எப்படி தூங்குவது
கனவுகளை மறந்து
எப்படிச் சிரிப்பது
கோபங்களை மறைத்து
எப்படியோ உழன்றும்
எப்படியோ முனகியும்
கால்மாட்டில்
ஒரு நெடுங்கதை கேட்க
உடைக்கப்பட்ட எதுவும்
வார்த்தையும் கவிதையும்
கடவுளும் சிலையும்
ஆகிவிடாதபடி
காவலிருக்கிறது தினமும்
போரின் குரூரம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...