Thursday, December 24, 2020

புளியமரமும் இமயமலையும்-பொன்.காந்தன்



மழைக்காகால நினைவுகளை எழுவதற்கு ஏதாவது தலைப்பு வேண்டும் என்று எண்ணியபோது சின்ன வயதுக்காலம் முழுவதும் பள்ளிக்குப்போகும் வழியில் அந்தப்பருவத்திருவிழாவின் சோடனைபோல அந்த புளியமரம். இப்பொழுதும் மழைக்கால நினைவுகளை கொண்டாடும் உள்ளக்குளிர்ச்சியின் ஓரங்களில் தோரணமாய் அழகாகிறது அது.ஆனால் அந்த புளியமரம் இன்றில்லை.இம்முறை இந்தக்கார்காலம் புரவி புயலோடு மழை கொட்டியிருக்கிறது.பால்யப்பருவத்தில் மாரிகாலத்தில் எங்கள் ஊரில் பட்டணத்துக்கு போகும் இரண்டு மூன்று தெருக்களில் இருக்கும் குளங்கள் நிரம்பி வான்பாயும்.மழைத்தூறலில் வான் பார்ப்பதற்கு குடைகளின் திருவிழாவில் நிறையும் தெரு.அந்த அழகான மழையின் ஆச்சரியங்களை மனங்கள் எல்லாத்திசையிலும் திரும்பி திரும்பி செல்பி எடுத்துக்கொண்டது.மாரியை கொண்டாடும் புன்னகைகளை உள்ளத்தின் இடுக்குகள் ஆல்மாக்கிக்கொண்டது.இம்முறை இந்த மழைக்காலத்தில் ஈழத்தின் மக்கள் வெள்ளம் பாயும் நல்லூரில் நிஜத்திலுமே வெள்ளம்புரண்டோடுவதை காணக்கிடைத்தது.எல்லாம் அவன் செயல் இதுவும் பெரும் தீர்த்தமோ என்று எம்பெருமானை திருப்தி செய்ய முடியவில்லை.நல்லூர் வீதியில் முழங்காலுக்கு மேல் இடுப்பளவில் ஆடைகளை தூக்கி ஒதுக்கிக்கொண்டு தண்ணீரை கிழித்துக் கொண்டு ஊரார்களும் ஊர்திகளும் போவதை பார்க்க எனக்கு அந்த ஐந்தடிவானும் யானைப்பள்ளமும் தான் நினைவுக்கு வந்தது.
எங்கள் ஊரிலிருந்து பட்டணத்துக்கு மழைக்காலங்களில் போகவேண்டுமாயின் பறவைகள் ஆனால் மட்டுமே முழங்காலிலும் இடுப்பிலும் தண்ணீர் தழுவாமல் போகமுடியும்.அதனால் போகும்போதும் வரும்போதும் எம் பாவங்களை கழுவ வைத்தே ஐந்தடிவானும் யானைப்பள்ளமும் எங்களை ஊருக்குள் அனுமதிக்கும்.யானைப்பள்ளம் என்று ஏன் பெயர்.ஒரு காலத்தில் எங்கள் ஊரிருக்கும் இடம் பெருங்காடாயிருந்தது.பெருங்காட்டின் நடுவே சின்ன சின்னதாய் காட்டுத்தடிகள் வெட்டி குடிசைகள் முளைத்தன.அந்த குடிசைகளுக்கும் போதவற்கு ஒற்றையடி காட்டுவழி முளைத்தது.இந்த பாதை முளைக்கு முன்னரே அது காட்டாற்றின் வழி.யானைகளும் கடக்கும் பாதை.அது இயற்கையாகவே ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு காட்டில் மரங்களிலும் புல்வெளிகளிலும் விழும் மழை வழிந்து மரங்களை சுற்றி காதலுற்று கனிந்து வழிந்து வளைந்து நெளிந்து நிரம்பி இசைத்து பாயும் வழி.அதில் எம் ஊரென்ற ஒன்று குறுக்கிட்டபோது அதற்கு யானைப்பள்ளமென பெயரை சூட்டினார்கள் முன்னவர்கள்.அந்த யானைப்பள்ளமும் மாரிகாலங்களில் நிரம்பி பாயும் அதை கடந்து கடந்து ஊராருக்கு பழக்கமானது.நெடுங்காலமாய் எங்கள் ஊராருக்கு அந்த யானைப்பள்ளத்தை இயற்கையின் வரமாகவே வைத்திருக்கத் தோன்றியதோ என்னவோ எனது பள்ளிப்பருவக்காலத்திலும் சீருடைகள் நனைய புத்தகங்களை தலைக்கு உயர்த்திப்பிடித்தபடி பள்ளி செல்லும் மாரிகாலப்பாக்கியம் கிடைத்தது.
நடந்தே பட்டணத்துக்கும் வேறு இடங்களுக்கு பேருந்துக்காக சென்றபோதும் துவிச்சக்கரவண்டிகள் வீட்டுக்கு வீடு வந்து பட்டணம்போனபோதும் மாட்டுவண்டிகளில் வாழைக்குலைச்சந்தைக்கு போனபோதும் இயற்கைக்காக யானைப்பள்ளத்துக்காக ஊரார் வளைந்துகொடுத்து நெகிழ்ந்து போனதை என் காலத்தில் பாத்திருக்கிறேன்.ஊரின் குடும்பங்கள் பெருத்தன.உயர்படிப்பு உத்தியோகங்கள் அவசரங்கள் ஆலாய்ப்பறப்புகள் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டது.நாகரிகமோகங்கள் பீடித்துக்கொண்டன.சொகுசுவாகனங்களுக்கும் காலின் அணிகளில் இருந்து கண்மைவரை பூசிக்கொண்ட புதிய ஆசைகளுக்கும் மேடுகளிலேயிலே வாழ்க்கை என்றைக்கும் இருக்கவேண்டும் என்ற தத்துவமுரணுக்கும் இடையே அந்த யானைப்பள்ளம் ஒரு சிரமமாக இடைஞ்சலாக அபத்தமாக அபசகுனமாகவெல்லாம் பட்டது.அதன் கடைசிவிளைவாய் இன்று அந்த யானைப்பள்ளத்தின் மேல் ஒரு அதிநவீன உருக்கு இரும்புத்தகடுகளால் இழைத்த பெரிய பாலம் இருக்கிறது.என்றோ மடிந்து என் முன்னவர்களின் ஆத்துமாவின் நினைவிலிருக்கும் மரங்களில் இலைகளில் புல்வெளிகளில் பெய்து வழிந்தோடும் காட்டாறு இன்று வெறுங்கிரீட் காட்டில் தொலைபேசி கோபுரங்களில் உயர்ந்த மதில்களில் பெய்யும் மழையால் தடுமாறி விழுந்து மனிதர்களில் தடக்கவிழுந்து புரண்டு எழுந்து சீறி யானைப்பள்ளத்தில் வழியேயும் பாய்கிறது.
இது கொஞசம் நீளமான கதைதான் போலும் எங்கள் ஊரின் இன்னொருவழியில் ஐந்தடிவான்.அந்த வழியில் இருக்கும் குளம் நிரம்பினால் ஒரு திசையால விரிந்து பரந்து பரவி வெள்ளம் பாயும் அது அநேகமாய் ஒரு ஐந்தடி ஆஜனுபாகுவான ஒருவருக்கு மூக்கின் நுனிவரை பாயும் வழக்கமாதலால் அதற்கு முன்னவர்கள் ஐந்தடிவான் என்று பெயர் சூட்டினார்கள்.யானைப்பள்ளமும் ஐந்தடிவானும் இரண்டு பள்ளிக்கான தெருக்கள்.ஐந்தடிவானின் மழைகால அனுபவம் சற்று வித்தியாசமானது.எங்களுரில் மலைகள் பெரு நதிகள் இல்லையென்றாலும் மழைக்காலத்தில் ஐந்தடி வான் அந்த மலைகள் நதிகளின் அனுபவத்தை தரும்.ஐந்தடிவானின் வான் வாயும் வழியில் குறுக்கே மிக நீளமாக ஒரு மண்திட்டு இருந்தது.எங்கள் வீட்டில் கிணறு வெட்டி குவிக்கப்பட்ட வெள்ளையும் கிறவலுமான அந்த மண்புட்டி சிகிரியா என்றால் இந்த ஐந்தடிவானின் நீளமான மண்திட்டு இமயமலைதான்.முல்லைத்தீவு கடந்து மட்டக்களப்பு திருக்கோணமலை வரை வாழும் எங்களது இரத்த சொந்தங்களுக்கு மழைக்காலத்தில் குன்றுகளில் இருந்து வீசம்காற்றை அதில் இருந்து வழியும் ஓடைகளை தூரத்தில் இருந்து குன்றுகளின் புகார் காட்சிகளை அனுபவித்து இன்பமுறும் வாழ்க்கை கிடைத்திருந்தாலும் எங்களுக்கு ஊரில் இந்த ஐந்தடிவானும் அந்த நீளமான மண்திட்டும் மலைகளின் அனுபவத்தை தந்தது.
மண்திட்டின் முனையில் தெருவை பார்த்தபடி பெரியபுளியமரம்.எங்களுக்கு பத்து வயது இருக்கும்போதே அதற்கு எங்கள் பாட்டனின் வயது.அப்பால் மண் திட்டில் குடிசைகள் அமைத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டது சிறிய குறிஞ்சி நில மாந்தர் கூட்டம்.எங்களுக்கு அந்த மண் திட்டும் அதன் உச்சத்தில் ஓடித்திரியும் சிறுவர்களும் எங்களுக்கு இனிய கனவுகளாய் இருந்தது.ஒரு தடவையாவது அந்த இமயமலையில் ஏற வேண்டுமென்ற ஆசை அவா பள்ளிக்கும்போய் வரும்போதெல்லாத் தீராமலிருந்தது.அந்த மண்திட்டு புல்லரிப்பை தரவேண்டுமாயின் அதில் ஏழு எட்டு வயதில் சகபாடிகளோடு ஏறியிருக்கவேண்டும்.மழைக்காலத்தில் வான் வாயும் அந்த இமயமலை சுற்றி இரு மருங்கிலும் பெருநதியென அது பாயும்.நமது ஊர் ஒரு கரையிலிருந்து மறுகரைவரை மழையின் திருவிழாவை இரசிக்கும்.அந்த மண் திட்டில் குடியிருப்பு பெரியவர்கள் சிறுவர்கள் பெண்கள் எங்களை குந்தியிருந்தபடி சுருட்டை புகைத்தபடி தூண்டில் போட்டபடி ஆடைகளை தோய்த்தபடி பாயும் நதியில் இறங்கி குளித்தபடி வேடிக்கை பார்க்கும்.
இப்போது அந்த மண்திட்டு இல்லை புளிமரம் இல்லை.யானைப்பள்ளத்திற்கு கிடைத்த அதே வாழ்க்கைதான் ஐந்தடிவானுக்கும் அதற்கு மேல் பெரிய நீண்டபாலமிருக்கிறது.நீண்ட பாலத்தில் நிறுத்தாமல் பறக்கின்றன ஊர்திகள்.அதற்கு முன் அந்த வான் பாயும் நிலம் எப்போதும் மேடும் பள்ளமுமான ஒரு தத்துவமாயிருந்தது.அந்த மண் திட்டில் நெடுங்காலமாய் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்தவர்கள் ஏழையானவர்களாய் இருந்தார்கள்.பெரும்பாலும் உரொட்டியும் அருகில் உள்ள யப்பான் மீனும் அவர்களுக்கு வாழ வைத்தது.ஆயினும் அந்த மண் திட்டில் இருந்து பள்ளத்தில் பாயும் அந்த நதியை பார்த்தவர்களில் பலர் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிலதிபர்கள் என்று வாழ்வின் உச்சங்களில் புளியமரமென சடைத்து பரந்து வாழ்கிறார்கள் என்பதும் மழையோடு ஒட்டிய கதைதான்.மழைக்காலத்தில் நிவாரணங்களுக்கு முன் அந்த மண் திட்டி மாந்தர்கள் அந்த குளத்தையும் மீனையும் நம்பினார்கள். வைரவர் கோவிலின் பிரசாதங்களையும் நேத்திக்கு வைக்கப்படும் அன்னதானங்களையும் நம்பினார்கள்.வாழ்க்கையை அனுவங்களால் இயற்கையோடு சேர்த்து கற்றார்கள் தேர்ச்சி பெற்றார்கள்.
இப்போது எனக்குள்ள கேள்வி இம்முறை நல்லூரை சுற்றி நான் கண்ட ஐந்தடிவான் யானைப்பள்ளம் நீளும் காலங்களில் தரும் அனுபவங்கள் எப்படி இருக்கும்.ஒரு மண் திட்டாகவே தோன்றுகிறது இப்போது கோபுரம்.மழை தேடுகிறது போல் தொலைந்த பலதை......

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...