Thursday, December 24, 2020

பாசுபதாஸ்த்திரம் பார்வதிக்கும் அருள்வதாக!-பொன்.காந்தன்



பஞ்சு ஊசியோடு பவளக்கொடி
பக்கிங்காமுக்கு அப்பால்
பன்னிரண்டு ஒன்றுக்கு
பாக்கு வெற்றிலையற்ற சுபமுகூர்த்தம்
மந்திரமற்ற
மருத்துவிச்சியின் மெல்லிய புன்னகை
ஆக்கினை தீர
அஸ்த்திரத்தை ஏற்றினான் மாக்கிரட் கீனன்
வக்சின் வரலாறு
வசப்பட்டது வண்ணக் கிழவிக்கு
வெறிச்சோடிய பூமிக்கு விடிவு காலமா
அழிக்க வந்த அரக்கனுக்கு
இனி நாளும் மரண யோகமா
பழுத்த இலையொன்றுக்கு
கிளை வரம் கிடைத்த கிளர்ச்சியின்று
பளை இயக்கச்சி கடந்து
பார்வதி கிழவிக்கும்
பாசுபத அஸ்த்திரம் பங்கிடப்படுமா
பாகுபலியாய்
பாட் வன் ரூ வென்று படமெடுக்கும்
கோவிட்டை
வேலியோடு சாய்த்து உழக்கவேண்டாமா
எத்தனைக்கு நாளைக்குத்தான்
சூமில் குந்தி
நாரிப் பிடிப்புக்கு உருவ தைலம்
வேறேதும் என்றால்
ஆளும்பேருமாய் நாலுபேர் சேர்ந்து
நடுக்கடலில் போட்டிருப்போம்
தேங்காய்ச் சொட்டு எலிப்பொறியில்
இரவோடே பிடித்திருப்போம்
தேடாவளையம் கட்டியாயினும்
இழுத்து எங்கேயோ விட்டிருப்போம்
இளவு கெரானா
கண்ணறியா கறுமம் ஆயிற்றே
சண்டியனை கூட
வென்ரிலெற்றரில் கிடத்திற்று
பன்றி வேட்டையனின்
பத்து பற்றரி ரோச்சிலும் தப்பிற்று.
அடுத்த சந்தியில் நிறுத்தி
இஞ்சின் ஓயிலா உடன் மாற்ற
ஈரல் இதயம் இரைப்பையெல்லாம்
அங்கதானே அறுந்தது கொவிட் அரிவாளோடு
கொள்ளி வைப்பவன்
தள்ளி நிக்கிறான் நீல் ஆம்றோங்காய்
ஒரு கட்டைக்கப்பால் நின்று
ஒப்பாரி கத்திக் குழறல்
எட்டி நின்று இறுதிச்சடங்குகள்
பட்டபாட்டிற்கு ஒரு பரசவம் வந்திற்று
அச்சுவேலிக்கும் வரட்டும்
அழகான மிஸி உள்ளார்
தடுப்பு மருத்து தடவிக் குத்தி
பழைய செட்டோடு செருமி நடக்க
அட கனவில் வரும்
கன்னியை கூட
ஆறடியில் நிற்க வைத்து அருட்டும் நிலை
சேறடித்தால் கூட
செருப்பும் கழுவாதவர்
கைகழுவி கடைச் சோப்பு தீர்ந்திற்று
முந்திப்பூசணிக்காய்
இனி முச்சந்தியில் முகக்கவசம்
கழிப்புச்செய்ய
கடவுளே அருள்க எமக்கும் ஒரு ஊசி
பிரேதம் எடுக்க
பிள்ளைக்குட்டிக்கு பிறகு
இப்போது பிசிஆரும் வரவேணும்
மாக்கிரட் கீனக்கு ஏற்றி
மருத்துவம் ஊற்றியிருக்கு நெஞ்சில் பால்
காத்திருக்கும் உலக மூலைக்கும்
கோவக்சினே வருக
நாற்றுக்கள் செழித்து வளர
நாசகார கொரானா தொலைந்து
நல்ல கால மழை பெய்க
ஏழைக்கும் தடுப்பு மருந்து இரங்குக
வெறிசோடிய உலகம் வெளிக்கட்டும்
படித்த பல பாடங்களோடு
மனிதர்கள் புதிதாய்
சாலையில் இறங்கட்டும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...