உண்டியலில் காசு சேர்த்து
அந்த ஒரு நாளுக்காய்
நீ காத்திருந்திருக்கிறாய்
சில்லறைகள் குலுங்க குலுங்க
ஓரமாய் தெருவில் நடந்து
சின்னப்பட்டணத்தில்
உன் விழிகள்
ஒவ்வொன்றாய் தேடும்
விலை கேட்கும்
விரலை விட்டு பிறகும்
சில்லறைகளை
கையிலும் காலிலும் எண்ணி
கணக்குப் பார்க்கும்
மனதில்
சுதன் கேதீஸ் இளங்கோ
சுகந்தி மல்லிகா யசோ
முகங்களும் தோன்றும்
கடைசியாய்
உன் அழகிய விழிகளுக்கும்
ஆழ்மனதுக்கும்
பிடித்தமானதை எடுப்பாய்
முடிவாய்
இப்படிக்கு இங்ஙனம்
முத்துக் கையெழுத்துடன்
என் முகவரிக்கும்
ஒரு அழகிய வாழ்த்துமடல்
அது மட்டும் போதும்
இன்னும் ஓராயிரம் காலத்துக்கு
அன்பையும்
நட்பையும் கொண்டாட
No comments:
Post a Comment