Thursday, December 24, 2020

நாணல்கள்-பொன்.காந்தன்

 


சின்ன வயதில் இருந்து வங்காள விரிகுடாவை கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.அக்காலங்களில் சற்சொருபவதியோ சரோஜ் நாராயண சாமியோ செய்திகளில் கடைசியில் இந்த வங்காள விரிகுடாவை வானிலை அறிக்கையில் மனதில் பூசிவிட்டுச் செல்வர்.இன்று தொலைக்காட்சியில் ஒரு அழகிய நாணல் தோன்றி வங்காள விரிகுடாவின் அமுக்கத்தை புன்னகையால் பூசி கடக்கின்ற பாதையை காட்டிவிட்டு மறைந்துவிடுகிறது. வங்காள விரிகுடாவில் ஒரு தென்றல் உருவாகியிருக்கிறது அது தமிழ்நாட்டை உரசி திருக்கோணமலையை தடவி மட்டக்களப்பில் கிறுகி யாழ்ப்பாணத்தில் முற்றத்து மல்லிகை பந்தலை தடவி சாளரத்தின் திரையில் தவழ்ந்து அறையில் தூங்கும் காயத்திரியின் கண் இமைகளில் முடியாதோ என்று ஒரு வானிலை அறிக்கையை எதிர்பார்க்கும் நப்பாசை எனக்கு.

ஒரு வழியுமில்லை கொரொனா இருத்திவைக்க தாழமுக்கங்கள் கிள்ளிவிளையாடுவது போல இருக்கிறது.இதைவிட புயலின் பாதையில் நாங்கள் உரொட்டி சுட்டு தேனீர் அருந்திக்கொண்டு கவிதை எழுதக்கூடிய வைராக்கியம் உடையோர் என்ற தெனாவட்டுக்களும்கூட இருக்கத்தான் செய்கிறது.கோடை காலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் இரவு அம்மா மார்பு சட்டை ஊசியை கழற்றி மண்ணெண்ணை விளக்கில் என் பிஞ்சுப்பாதங்களில் தொட்டாச்சிணுங்கி முட்களை மடியில் பாதங்களை தூக்கி வைத்து ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டிருப்பார்.மாசியிலும் மாரியிலும் பெருவிரல் வரை போர்வையை இழுத்திப்போர்த்திவிட்டுக்கொண்டிருப்பார்.
அப்போது அவர் உதடுகளில் உச்சரிக்கப்பட்ட மட்டக்களப்பு சூறாவளி இப்போதும் நினைவிருக்கிறது.அதற்குப்பிறகு வங்காள விரிகுடாவில் தோன்றும் பல புயல்களை கேள்விப்பட்டபோதும் புயல் என்றவுடன் அந்த மட்டக்களப்பு சூறாவளி முன்னே வந்து மறையும்.
இப்போது புயலுக்கு பல பெயர்கள் சூட்டப்படுகிறது.இதை எழுதிக்கொண்டிருக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய புயலை புரெவி என அழைக்கிறார்கள்.அதன் அர்த்தம் பற்றியெல்லாம் தேடவில்லை.ஏனென்றால் நிசா கூரையை பிடுங்க நிவர் சாளரத்தை கழற்ற இவற்றையெல்லாம் பொருத்திவிடும் கொத்தனார் கிடையாதே புரெவி.மட்டக்களப்பில் பல தசாப்தங்களுக்கு முன் வீசிய புயலுக்கு என்ன பெயரிட்டார்கள் என்பது தெரியவில்லை.புயல்களுக்கு பெயரிடும் கலாச்சாரம் எப்பொழுது உருவாகியது பற்றியும் எனக்கு ஆராயத்தோன்றவில்லை.
தொட்டாஞ்சிணுங்கி முட்களை அம்மா எடுத்துக்கொண்டிருக்கும் போது பிஞ்சுப்பாதங்கள் இனி கடக்க போகும் தூரம் தடுமாற்றங்கள் சேறு சகதிகள் புயல்கள் தென்றல்கள் எவையும் அறியா.இறுதிவரையும் பூக்கள் நிறைந்த தென்றல் வீசும் பாதையில் நடக்கவேண்டுமென ஒவ்வொரு தாயும் கனவு காண்கிறாள் தன்குழந்தையை புயல்களை கடந்து. துரதிஸ்டம் அவ்வாறே நடந்துவிடுவதில்லை.அதையும் இயற்கை என அழைப்போம்.
சில நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இருந்து நிவர் வந்து கடந்தது.இப்போது புரெவி.இந்த புயலின்போது எனக்கு கிளிநொச்சியில் வன்னேரிக்குளத்தை கடந்து செல்லும்போது குளத்தோடு அண்டிய பிள்ளையார் கோவிலடியில் நிறைய நாணல்கள் நினைவுக்கு வந்து நிற்கின்றன.மிக உயரமாய் ஒரு கோடை காலத்தில் அசைந்து கொண்டிருந்தன.என்னவோ தெரியவில்லை தெருவழியால் ஜெயபுரம் காட்டு வழி போய்க்கொண்டிருந்த என்னை நாணல்கள் அழைத்தன போலிருந்தது.தெருவிலிருந்து நாணல்களை வருடினேன். வாழ்வில் குத்திய பல முட்களை அவை எடுத்து விட்டன போன்ற இதமான உணர்வு.இந்த புயலுக்கும் அந்த நாணல்கள் என்ன செய்யும்.மறுபடியும் புயலுக்கு பிறகும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை நாணல்களும் அடிக்கடி தந்திருக்கின்றன.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...