பலாவடியில் வந்து நிற்கிறது நிவர்
பல்லை நெறுமுகிறது
பார்க்கலாம் என்கிறது பனை
புயலொன்றும் புதிதில்லை நமக்கு
வல்வையிலும் ஒரு புயல்
இப்படியோர் கார்த்திகையில்தான்
மையங்கொண்டது ஓர் நாள்
மறுபடியும்
சயங்கொண்டானுக்கு புல்லரிப்பு
மேக மூட்டத்தில் இருந்து
மேனி சிலிர்க்க காவிய மழை
புளுதி கூட
மயிரில் படரும் சந்தணமானது
கோவணத்தோடு நின்றவனுக்கு
பட்டும் பீதாம்பரம்
பகலிரவன்றி
முழுதும் மாரியாய் முகமலர்ச்சி
வண்டியை பூட்டி
வளவு உழ சண்டியோடு ஊரான்
கண்டிக்கு மொகறை
வயிறு குழம்பிக் கறுத்தது
காலிக்கு
ஊழிப் பயம் உருவானது
வல்ல புயலின் வரத்தில்
உள்ளூரில் பல வருத்தம் தீர்ந்தது
மல்லிகாவின் கூந்தலில்
மாற்றங்கள் நூறு
புள்ளிமான் காட்டிலிருந்து
புறப்பட்டாள் புயலின்பின்னே
கள்ளச் சிரிப்புக்கு
காத்திருந்த கவிஞனுக்கு ஏமாற்றம்
கிட்டிபுள்ளை
குட்டி சிறி மோட்டாராக்கியது புயல்
கிளித்தட்டு
ஜயசிக்குறு முன் வழிமறித்து பழம்
கொக்கானெல்லாம்
குடாரப்புவில் குவிந்தது
எப்படி அந்த புயலின் நடனம்
வியாசனின் உலைக்களம்
மழையின் துளிகளை
தமிழிலுரசி தணலாக்கியது
காசியின் கிளைகளில்
கனிந்தன கந்தகப்பழங்கள்
ஆசியா கடந்தும்
தூசியை தட்டியது புயல்
பாசி பிடித்திருந்த வாள்களில்
பளிச்சிட்டது பழைய கீர்த்தி
ஆனையிறவே
ஆயிரம் பக்கமுடைய
கொற்றவைப் புத்தகமானது
சேனைப் புலவிலிருந்து
வானை நோக்கிப் பறவைகள்
காலியான ஆகாயத்தில்
கருத்தரித்தது மீண்டும் புட்பகம்
இராவணனின் இதயத்திலும்
ஓர் இனியமழை
வேலிகளில் காந்தளின் அழகு
பூவரசுகளுக்கு புதுவுணர்ச்சி
கதியால்கள்
கடிதம் எழுதிவைத்துவிட்டு
களத்து மேடு போயின
மலடு பற்றிக் கிடந்த மண்ணில்
கண்ணுக்கெட்டியவரை
கலையும் இருளின் பிரசவம்
புண்ணுக்கு மருந்திட்டது
புயலின் அகன்ற கரங்கள்
புளுக்களுக்கு சிறகு முளைத்தது
பட்டாம்பூச்சிகள் பறந்து
எட்டாத உயரத்தில் பீனிக்ஸ் ஆயின
இப்படித்தான்
ஒரு புயலின் வரவும் சிலிர்ப்பும்
நினைக்க
நட்டுக்கொள்கிறது உரோமங்கள்
ஒரு புயலில் வீச்சில்
புதிதாய் பெய்த மழையில்
எழிலாய் வந்து குடையில்
எதையும் தாங்கும் நடையில்
அரிதாய் கிடைத்த அலையில்
அனுபவித்தோம்
வரலாற்றின் வடிவை நிமிர்வை
வாழ்க புயல்
No comments:
Post a Comment