நட்டம் தான் இப்போ
நாலு சுருளும் போகாது
கட்டை வைத்தெரித்து
கருகாமல் வறுத்து
நெட்டி முறித்தாற்போல்
நின்ற நிலையில்
சிலர் கொறித்து
விட்டுப்போக மனமின்றி
வேண்டிப்போகுமிது
சொட்டைத்தீன்
சுடச் சுடச் இதம்
அட்டைபோல் வந்து
அணிவகுத்திங்கு
எட்டுத்திக்கிருந்து
இறுமி வரும் ஊர்திகள்
வட்டமடித்து திருப்பி
வழிப் பிள்ளையாரிதில்
வாய் கால் கை அலம்பி
பொட்டு வைத்து
போட்டுடைத்து தேங்காய்
பற்றவைத்து கற்பூரம்
பாவங்களை கழுவி
சித்திபெறக் குந்தி
சிரித்தபடி பிறகு
நட்ட நடுத்தெருவில்
நாலுசில்லும் காத்திறங்கி
அத்தெருவில் வாய்பார்க்க
அரிகண்டம் தராரென்று
பக்தியுடன் முறிகண்டியில்
பாரங்களை இறக்கி
கச்சானை உடைத்து
கண்ணாடி திறந்தெறிந்து
அச்சாவாய்
யாழ்ப்பாணம் கொழும்பு
அன்றாடம் போய்வருவார்
வந்து நின்றால்தான்
நமக்கு பிழைப்பு
நாலு காசு வரும்
இல்லையெனில்
ஏழையெம் வயிறு வேகும்
எம்பிள்ளை காலம் சாகும்
கொள்ளை நோய்வந்து
இல்லைத் தெருவால்
பயணம் அதிகம்
நட்டம்தான் இப்போ
நாலு சுருளும் போகாது
இன்று நேற்றல்ல
இருபத்து வயதிலிருந்து
சறுபத்து கடைக்கருகில்
சாய்ப்பொன்றிலிருந்து
எடுபட்டு திரியாமல்
இளமை வறுமையால்
இரும்புச் சட்டியோடு
இருந்து ஊதி மூட்டி
வறுபட்டுதோ இல்லையா
வடிவாய் பதம்பார்த்து
முறிகண்டி கச்சானின்
முதுபெரும் மரியாதை
தறிகெட்டுப்போகாமல்
தறப்பால் காலம்
தம்பிகள் பெடிச்சிகள்
அஞ்சு சதமுமின்றி
கொஞ்சிக் குலவும்
அலைபேசி நாள்வரை
சுண்டுப்பேணியும்
சோடையற்ற கச்சானும்
மண்டைக்கண்ணால்
கடப்பவரையும்
மடக்கி வாங்கவைத்து
கண்டிக்கு மட்டுமல்ல
கனடாவரையும்
வந்துபோன நினைவாய்
வண்டடிக்காததாய்
வறுத்துக்கொடுக்கும்
வறுமையிலும் செம்மை
வந்து போகுமெம் தெருவாழ்வு
இன்று
ஏதோ கொரானாவாம்
நாலு சுருளும் போகாது
நலிவுதான் இரைப்பை
நமக்கேது படிப்பு
இஞ்சினியர் டாக்குத்தர்
எங்கிருந்தோவரும்
வெள்ளை கறுப்பு
வாவ் என்றுரைத்து
வாங்கிச்செல்லும்போது
நாலு இங்கிலீசு தெரியும்
நாள்பட நாள்பட
நீக்ரோ நியூயோர்க்கையும்
கூப்பிட்டிந்த கச்சானை
கொறிப்பது பற்றி
குறுவிளக்கம் அளிக்கவும்
கொஞ்சம் தெரியும்
ஐந்தாறு கிலோவாய்
அடுக்கியபடி வந்து
அவரவர் தந்துபோன
புத்தகம் கொப்பி குறிப்பு
கிழித்து மடித்து
ஒட்டிச் சிறுபையாக்க
ஆசிரியர் கையெழுத்து
அத்தனைக்கு பிழையெடுத்த
சொல்வதெழுதல்
உறுப்பெழுத்துத் தவறு
ஊருபட்ட தமிழ் பிழை
இன்னும் கவிதை கட்டுரை
நியூட்டன் ஐன்ஸ்டின்விதிகள்
ஒன்றும் படிக்காதபோதும்
ஓரளவுக்கு தெரியும்
எல்லாம் இந்தக்கச்சான்
இதுவரை தந்திருப்பது
நொந்திருக்கும் காலமும்
நுழைந்த கோவிட்டால் நமக்கு!

No comments:
Post a Comment