பிரசவத்துக்கு தயாரானாள் மரியாள்
வழமைபோல
வடிவானதில் வரும் மயக்கம்தான்
அடிவாடி கள்ளி
கன்னத்தில் கிள்ளல் துள்ளல்
கடைசியில்
கொடிகாமம் கொழும்புக்கு
படி தாண்ட விடாத கால்கட்டு
எனக்கொன்றும் தெரியாதென
எட்ட நழுவுகிறது சனவரி
கன்னத்தில் கையோடு
கணக்கு வழக்கோடு மார்கழி
இரயிலுக்கு காத்துளது
இரண்டாயிரத்து இருபது மாஸ்க்
காட்டுத் தீ கதகளி
கோலாகரடியோடு குடிவந்த நினைவு
வழிதவறி வந்ததுக்கு
வாடகைக்கு விட்டது தவறாயிற்று
இதைவிட குடிகாரரோடு
குடும்பம் நடத்தியிருக்கலாம்
மட்டைத் தேளுக்கிடையில்
மாக்கெற் போய்வந்ததே மிச்சம்
எட்டி எட்டி நின்று
எப்படித்தான் பெறுவது
கட்டி வைத்தும் பலன் பிழை
முட்டாமல் வைத்த காலத்துக்கு
முற்றத்தில் என்ன பிரியாவிடை
லீவு நாளொன்றின் தேவாமிர்தம்
ஏழு நாளையும் இறுகப் பூட்டி
வேப்பெண்ணை குப்பியாய்
வீடுகள் பலதில்
பள்ளி விடுமுறை
பாவாடை இலாஸ்ரிக்காய்
பந்தலை கழற்ற விடாமல்
படுக்கையில்
அடுத்ததும் இழுக்க
இன்னமும் முடியவில்லை இளவு
பாசக்கயிறுக்கெதற்கு
பட்டாம் பூச்சிக் கவிதைகள்
ஓடித்தொலை ஒன்றுமிலா ஆண்டே!
பாரிசும் பல்லவிராயன் கட்டும்
கோவிட் ரெக்ஸ்ரைலில்
கடுப்பாகிறது உள்ளம்
உடுப்பாயிற்று முகக்கவசம்
வாட்டங்களை வருடவில்லை
தேடும் விழிகளும் தீரவில்லை
குவிகிறது குற்றச்சாட்டு
கட்டுப்பாடுகளுக்குள்
மிதிபடுகிறது சிட்டுகுலம்
நட்டம் ஒன்றும் இல்லையென்று
நாக்கை வளைக்க முடியாது
கொட்டித் தீர்த்தது மாரி
தூறியதா மனதில் ஏதும்
சுத்த சூனியம் செப்ரெம்பர்
பாடும் நிலாவைப் பறித்தது
கார்த்திகை மட்டும் என்ன
கந்தர்வமாய் இருந்ததா
குப்பி விளக்கு ஏற்றவும்
தட்டி விழுத்தியது
விளக்கீட்டை தெரியாமல்
வெருண்டு கிடந்தது
நத்தார் எப்படி
நாலுபேர் கூட முடியவில்லை
தட்டத்தனிய தரணிக்கு பாலன்
ஏரோதுக்கு
இன்னொரு பெயர் கொரனா
பீசிஆர் முடிந்து
பிரசவத்துக்கு தயாரனாள் மரியாள்
ஏசியில் இருக்கிறதாம் வக்சின்
சாவடித்துவிட்டு
சமாளிப்புக்கு இது சக்கரையா
கபன் சீலை கதறுகிறது
இரயிலுனக்கு இதமானது
பாவங்கள் நிறைய
அதோ பஸ் வருகிறது ஏறு
பள்ளம் திட்டியில் விழுந்து போ
ஈராயிரத்து இருபதாம் ஆண்டே
No comments:
Post a Comment