Thursday, December 24, 2020

உச்சிக்கிளை-,பொன்.காந்தன்

 


ஆழத்திலும்
தூரத்திலுமாயானேன்
சேறெடுக்கும்
கிணற்று விளிம்பில்
சீசன் ரிக்கற்றும்
கூப்பன் முத்திரையும்
எட்டி எட்டி பார்க்கிறது
தவறி விழுந்த
ஆட்டின் ஏமாற்றம்
தவளைகளாய் நீந்தியபடி
கரைப்பாண் துண்டும்
கப்பல் வாழைப்பழமும்
இடுப்பில் கயிறு சுற்றி
இறங்குமா
மணியத்தின்
பெரிய கோவணம் தெரிய
சீமைக் கிளுவையில்
உச்சிக் கிளையெட்டும்
கொக்கை சத்தகம்
கயிறிளகி வழமைபோல
பாதாள கறண்டியிலும்
சிக்குமாவெனும் சந்தேகம்
ஐஸ்பழமும்
ஆலடிப்பிள்ளையாரும்
குருவி கலைக்கும்
மம்பட்டி அலகும்
மணிசெய்தடித்தும்
பறக்காத ஆட்காட்டி பொந்தில்
எறிந்த தொலைவோ
நழுவவிட்ட
ஊஞ்சல் கிளையுச்சி
உதிரும்
காலடி மண்
கணக்கு பிழைக்கும்
குட்டித் திருத்துமா
சீயாக்காய் மணத்தில்
கூட்டி முடியாத
குளித்த கூந்தல்
கரைகளை அளையவும்
நண்டுமோகமாய்
எக்கித் திக்குமுக்காடும்
கெளிற்று மீசையில்
கவ்வுமென
நம்பிக்கையும் கூடவே
வெளியிலும்
பாலையிலுமானேன்
ஆடைமிதக்க காய்ச்சிய
அம்மாவின் பாற்சட்டியில்
பூனையாகிய கனவினை
கலைத்து
சேவல் பூவின் இரத்தமுதிர
ஊற்றுக் கொப்பளித்த
முக வசீகரத்தை
இழுத்துச்செல்லும்
இனந் தெரியாதவைக்குள்ளும்
பணியாரமாய்
கொட்டப்பெட்டிக்குள்
மறைத்து வைக்காத காலம்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...