Thursday, December 24, 2020

துளசி மலர்-பொன்.காந்தன்



அம்மாவின்
ஆயிரம் காரணங்களில்
ஒன்று
முற்றத்து துளசியில்
தினமும்
செம்பரத்தம்பூ
சனிக்கிழமைகளில்
இரண்டு மூன்று கட்டை
காகங்களை
தேடிப்போயிருப்பார்
இளங்கொடிகள்
கட்டியிருக்கும் தெருவில்
ஆட்டுக்கும்
ஆட்டுப்பாலுக்கும்
காரணங்கள் படித்தபடி
அவருடன் நானும்
இலவம் பஞ்சு
வெடித்துப் பறப்பதுவரை
ஒதியின் குழைகளை
ஒடிக்காததுவரை
சொல்லப்பட்டவைகளை
நம்பினேனோ இல்லையோ
சிக்னல் மரங்களை
கண்டபோதுதான்
ஏதோ ஒரு நம்பிக்கையில்
வாழ்வதிலும்
சுகமிருப்பது தெரிந்தது
எருக்கலை
பால் தருமென்பதாய்
பனிப்புகாரில்
செம்பு தண்ணீருடன்
கோடிக்குள்
ஆட்டின் முலை பிடிக்கும்
அம்மாவின் அருகே
ஊட்டத்துடிக்கும்
இரண்டு குட்டிகளை
இறுக அணைத்திருக்கும்
என் சுகத்தை
குழை ஒடிந்த ஒதியாய்
இழந்திருக்கும்
இன்றெல்லாமும்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...