Tuesday, July 7, 2020

ஒரு புதிது-பொன்.காந்தன்,


கருவாட்டுச் சிப்பம்
கைக்குத்தரிசி
சீயாக்காய்
மணக்கும் பேரூந்தில்
எப்படியோ
சாம்பூக்கள்
பெர்பியூமின் வாசமுமாய்
கண்டக்டரின்
கமக்கட்டுக்குள் கிடக்கும்
ரிக்கற் புத்தகமும்
வார்த்தையும் தொலைந்து
வேறு மாதிரியாயிற்று
இன்றைக்கும்
ஏறியமர்ந்தனர் பயணிகள்
உதட்டுச்சாயமும்
மூக்குத்தியும்
முரட்டு மீசையும்
தொலைந்துவிட்டதை
கண்ணாடியில்
ஏக்கத்தோடு
பார்த்துக்கொண்டு
ஒரு கோணுடன்
கியர் போடுகிறார் சாரதி
குழாயடிகள் மீதும்
எல்லோருக்கும் முன்
பெரிய
குடமொன்றை வைத்து
காத்திருக்கிறது எதிர்பார்ப்பு
அலமேலுக்களின்
புதிய வார்த்தைகளை
நிரப்பிக் கொள்ளும் ஆவல்
நிச்சயம்
பிள்ளையை
பள்ளிக்கு
வெளிக்கிடுத்தியதை
இத்தால் சகலருக்கும்
புதிதாய் அறிவிப்பாள்
கடைசியாய்
தன் குடத்தை தள்ளிவிட்டு
நிரப்பிய
பெண்டுகள் மீது
கொட்டிய திட்டுக்களை
பொறுக்கியெடுத்து
ஒரு புதிய தூசணத்தால்
கொரோனவை
வசைபாடித் தீர்ப்பாள்
கண்டி பருத்தித்துறை
பேருந்தில்
சாரதிக்கு முன் தூங்கும்
முந்திரிகை குலையை
கண்வெட்டாமல் பார்த்தபடி
பயணத்தை முடித்த
ஒரு குட்டி பையனின் சுகத்தை
பன்னீர் செம்பிலிட்டு
எங்கும் சாலைகளிலும்
தெளிக்க விரும்புகிறது
ஒரு எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...