Tuesday, July 7, 2020

பத்தியம்தான் எதற்கு!-பொன்.காந்தன்,


நல்ல நீட்டு
நெடுப்பும்தான்
அடியும் பெருப்பு
ஆளுயரம் ஒவ்வொன்றும்
கப்பல் கதலி மொந்தன்
கண்ணுள்
எப்ப பார்த்தாலும்
உப்பிப் பெருத்த செழிப்பு
ஊரிலொன்றாய் எங்கள்
செப்பிச்சிலிர்க்க வாய்த்த
சிறப்பிலொன்று நீர்வேலி
அப்பு காலம் தொட்டு
அடிவளவு மூலைவரை
கட்டையிறுக்கி
கயிறிழுத்து நேர் பார்த்து
தாட்டு குழை மிதித்து
தரயை பண்ணாக்கி
மாட்டெருவும் கலந்து
மண்ணை கிண்டி
பாட்டம் பாட்டமாய்
ஊட்டமுள்ள இளம்
வாழைக்குட்டி நட்டு
பாத்தி நிரம்பி வழிய
பரம்பரை கிணறிறைத்து
வேட்டியில்
செம்மண் வண்ணம்
இதைவிட சிலிர்க்க
வேறுண்டோ எண்ணம்
வாழை சரை பார்த்து
வந்துள்ள குருமன் நீக்கி
தாழுக்கு உகந்த
தண்ணீர் உரம் ஊட்டி
நாளுக்கு நாளுயர்ந்து
வேலிக்கப்பால் போவோர்
விழியை உயர்த்துவதாய்
வாழையின் தாய்மையென
வந்து விரிந்து
பொத்தியொன்று புடைத்து
எட்டி மேல தள்ளி
இன்னும் மடல் உதிர்த்து
ஏழெட்டு சீப்பாகி
இறங்கியிறங்கி நீண்டு
நாட்டாமையும் தூக்க
நாரி சவளும் வண்ணம்
முத்தி வரும் பருவம்
பொத்தி கீழே தூங்க
அதையும் பிடுங்கியொரு
வறையும் கறியும்வைத்து
இடையிடையே குருவி
கூடும் கட்டிக் குலவி
குஞ்சும் பொரித்து பறக்கும்
கப்பல் குலைப் பாரம்
நெட்டை நெடு வாழை
நெடுகத் தாங்காமல்
வட்டில் கொஞ்சம் வளைந்து
வாழ்க்கை முடியக்காண
கட்டை இரண்டு நட்டு
கவடு ஒன்று பிரித்து
முட்டுக் கொடுத்து அதை
முத்தவைத்து பழத்தை
பிட்டு ஒரு கோப்பையொடு
பினைந்து எடுத்து திரட்டி
கட்டிலில் இருந்து நித்தம்
காலை மாலை யுண்ண
பத்தியம் தான் எதற்கு
பழசெல்லாம் காலை
பறிபட்டு பறக்கும்
ஒத்தை இரதையினை
உரித்து உள்ளிறக்க
மத்தியானம் பசிக்குமோ
மதாளித்த வாழை
நீர்வேலியை நா மறக்குமோ
செத்த வீட்டு வாசலில்
செழித்த மொந்தன் கண்டு
எப்படியும் அதிலொரு
வாழைக்காய் பொரியலொடு
கந்தசட்டிப் பாறணைக்கு
காய்ச்சியுண்ணக் கனவு
கலியாண வாசலிலே
கட்டிய குலையிழுத்து
முதலிரவுப் பொழுதுக்குள்
முழுவதுமாய் பிடுங்கி
உரித்துரித்து தோலை
உலகமெலாம் பரவி
காலை ஒன்றுமட்டும் தூங்கும்
அது தண்டு மட்டும்தான்
உண்டு களித்திருக்க
ஊருக்குள்
குண்டாய் கொழுப்பாய்
குலையாய்
நின்று நிலைத்து
சுவை பேசும் கனியாய்
மன்று கடை பந்தி
மணவிழாக்கள்
அந்திரட்டி
அர்ச்சனை தட்டென்று
எங்கும் வியாபித்து
முக்கனி தரும் ஊரில்
ஆம்பன் புயலடித்து
அகாலத்தில் போய்விட்டு
மொந்தன் கதலி சீனி
செவ்வாழை இரதை
அத்தனைக்குமென் அஞ்சலி
சந்தைக்கு வந்துபோனேன்
கதலியை காணாமல்
கண்கலங்கி விட்டேன்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...