எங்கள் நிலம் இப்படித்தான்
முற்றம் பெருக்கும்போது
சன்னக்கோதுகளும்
செடியை நட
மண்ணை கிண்டும்போது
மனித எலும்புத்துண்டும்
கண்ணில்படும் அன்றாடும்
எதையும் மறக்க முடியாது
எதிரே சாலையில்
இரண்டு கைகளை இழந்தவன்
அருகே கடந்து
இரண்டு கால்களை இழந்தவள்
எங்கள் நிலம் இப்படித்தான்
மறக்க நினைத்தும்
ஆனையிறவு சிறுகடலின்
நாரைக்கூட்டங்களை
இரசித்துப் போகையில்
சோதனைச் சாவடியில்
துப்பாக்கி ஏந்தியவர்களால்
நிறத்தப்படுகிறோம்
நினைவு மீண்டும்
பின்னேதான் செல்கிறது
எங்கள் நிலம் இப்படித்தான்
உப்பளத்தோடோ
அதற்கு முன்னதாய்
கெமிக்கலடியிலோ
பரந்தனிலோ
எங்கள் பயணங்கள்
முன்னைய நாட்களில்
முற்றுப் பெற்றன
துப்பாக்கிகள் அற்ற
ஆனையிறவை
இன்னமும் இரசித்ததில்லை
பேரூந்துப் பயணங்களில்
வேலிகளில்
பூவரசம் பூக்களில்
மெய் மறக்கையில்
ஒரு காட்சிப்பிழை
கண்ணிவெடி கவனம்
விளம்பரப் பலகையாய்
இன்னமும் எங்கள்
மாமரத்தடிகளில்
வேப்ப மர நிழல்களில்
எங்கள் உயிர்களுக்கு
எந்த உத்தரவாதமுமற்று
திடுக்குற வைக்கிறது
இப்படித்தான் எங்கள் நிலம்
இன்னமும்
புதையுண்ட
நம்மவர் எச்சங்கள்
துப்பாக்கியை
பற்றிப்பிடித்த
எலும்புக் கூடுகளாய்
தோன்றும்போது
முகமாலை
வெண்மணல்மேல்
விடுவிக்கப்பட்ட
வார்த்தைகளின் கீழ்
எங்கள் சனங்கள்
கட்டியெழுப்பியது
கல்லறைகளா
வீடுகளா
நிச்சயம் சொல்ல முடியா
எங்கள் நிலம் இப்படித்தான்
இயக்கச்சி
தென்னஞ்சோலைகளின்
இதமான காற்றிலும்
இறுக்கம் தளராத முகத்துடன்
வலிந்து நிற்கும்
சிப்பாய்கள்
எப்படி விடுமுறை
இரயில் பயணத்தில்
மதவாச்சிக்கு அப்பால்
முகத்தில்
புன்னகையிழையோடி
அனுராதபுரத்தில்
சுதந்திர புருசனாய்
இறங்கிப் போகமுடிகிறது
இப்படி
ஏராளம்கேள்விகளோடும்
எங்கள் நிலம் இப்படித்தான்
No comments:
Post a Comment