Tuesday, July 7, 2020

கொட்டங்காய் -பொன்.காந்தன்,


பொய் சொல்ல விரும்பவில்லை.சத்தியமாய் முதலில் கொட்டங்காய் பொறுக்கத்தான் அந்த வளவில் போனேன்.எத்தனை நாளைக்குத்தான் வெளவால் கடித்து விட்டு இரவு முற்றத்திலும் தெருவிலும் போடுவதை சாப்பிடுவது.நீங்கள் கொட்டங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா.முதலில் கொட்டங்காயின் சிவந்த இல்லை அதை சிவப்பென்று சொல்ல முடியாது கொஞ்சம் மரூனாக இருக்கும் தோலை கடித்து சாப்பிடவேண்டும் கடிக்கத் தேவையில்லை.கடிக்கும் அளவில் அது அந்த கல் மாதிரி அல்ல ஒரு வகை இதமாய்த்தான் இருக்கும்.அந்த மேல் தோலை கடித்து முடிக்கும்போது கைவிரல்களும் உதடும் கொட்டங்காய் வண்ணமாகிவிடும்.கொட்டங்காய் பொறுக்கி சாப்பிட்டு வீடு வரும் எந்த வாண்டும் சத்தியமாய் ரியூசன் முடிந்த பின்பு எங்கும் போகவில்லை என்று சொல்லவே முடியாது ஏனெனில் உதடுகளில் அது அரிச்சந்திர காயாய் குந்தியிருக்கும்.பொய்கள் ஆயிரம் வகை வகையாய் சின்ன வயதில் இருந்தபோதும் உண்மை பேச வைத்ததில் இந்த கொட்டங்காய்க்கு ஒரு பெரிய பங்குண்டு.நான் கொட்டங்காயை பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று நினைத்து நாங்கள் உங்களதைப் போல எத்தனையை கண்டோம்.அந்த கொட்டங்காயின் மேல் தோலை காந்திவிட்டு பிறகு நல்ல ஒரு கல்லாய்ப்பார்த்து கொட்டங்காயை வைத்து இன்னொரு கல்லால் உடைத்து உள்ளிருக்கும் அந்த பருப்பை எடுத்து சுவைக்க இந்த உலகத்தின் இன்பம் யாவும் தோற்றுவிடும் என்று கொட்டங்காயின் கிளைமாக்ஸ் பார்க்காமல் நிறுத்துவீர்கள் என்றால் நான் என்ன செய்ய கொட்டங்காய்க்கு பின் ஒளிந்து கொண்டிருக்கும் இரகசியங்களை எப்படிச் சொல்வேன்.
சத்தியமாய் கொட்டங்காய் பொறுக்கத்தான் முதலில் அந்த வளவுக்குள் கால் வைத்தேன்.கொட்டங்காயை சாப்பிட்டு விட்டு அந்த நிழலில் எவ்வளவு நேரமென்றாலும் குந்தியிருக்கலாம்.கொட்டங்காயின் இலைகள் பெரிது.அடந்த கிளைகள் அகன்ற இலைகள்.செறிந்த பசுமை.எங்கள் வீட்டிலும் ஒரு கொட்டங்காய் மரம் நடவேண்டும் என்ற ஒரு இனம்புரியாத கனவு இருந்தது அப்போது.இலையுதிர்காலங்களில் அகன்ற பழத்த இலைகளொடு கொட்டங்காய் மரம் ஒரு அழகிய குமரியின் சிரிப்புப்போல இருக்கும்.இப்படி கொட்டங்காய் மயக்கத்தில் போன எனக்கு அதற்கு அருகில் இருந்து ஒரு சிறிய கொட்டகைக்குள் என் சின்ன வயசு சகபாடிகளோடு போகும் சந்தர்ப்பம்.எனது அங்கு நண்பன் ஜேம்ஸ் பாண்டை தேடிக்கொண்டிருந்தான்.கஸ்தூரி அக்கா குமுதத்தை தேடிக்கொண்டிருந்தாள்.மூக்குக் கண்ணாடி போட்ட மகேஸ்வரி அறைக்குள் வந்த நந்தவனத்தின் பக்கத்தில் நான் சென்றதும் தெரியாமல் மூழ்கி முக்குளித்துக்கொண்டிருந்தாள்.சுந்தரமண்ணையின் பெண்சாதி விகடனோடு வெளியேறிக்கொண்டிருந்தாள்.அப்போது தான் என்னை இறாக்கைக்குள் இருந்து ஸ்ரீ தேவியின் கண்கள் வாவென அழைத்தது.அந்த வயதிலா என்று கேட்காதீர்கள்.ஏதோ புரியாத்தனமாக எடுத்து முதலில் பக்கத்துக்கு பக்கம் வெட்கப்பட்டபடியும் நிற்கும் படங்களை பார்த்தேன்.பிறகு ஒன்றிரண்டை வாசித்தேன் மேலோட்டமாய் இப்படித்தான் தொடங்கியது ஒரு நூலகத்துக்கும் அதாவது படிப்பகத்துக்கும் எனக்குமான உறவு.பிறகு எனக்கு கொட்டங்காயின் தோல்களை விட புத்தகங்களின் முகப்பும் பக்கங்களில் இருக்கும் எழுத்துக்களும் அதில் அழகும் ஆச்சரியங்களும் கற்பனைகளும் சுவையாகத்தோன்றின.கொட்டங்காய் மரத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் இன்னொருத்திக்கும் என் நன்றி சேரவேண்டியிருக்கிறது.மீண்டும் சத்தியமாய் அந்த வளவுக்குள் போவதற்கு புத்தகங்களும் அதன் மீதான என் வெறித்தனமான வாசிப்பு காரணமென்று சும்மா பச்சை பொய் சொல்ல மாட்டேன்.இப்போது கொட்டங்காய் பொறுக்கும் வயதையும் குறும்புகளையும் கடந்த அரும்பு மீசைப்பருவம்.பிறகு உங்களுக்கு இதைபற்றி விபரிக்கவா வேண்டும்.அநேகமாக நீங்கள் ஒவ்வொருவரும் அரும்பு மீசை கருங்கூந்தல் கண்கள் புன்னகையென எல்லாவற்றிலும் கலாநிதி பெற்றவர்கள்தானே.அதனால் எனது அரும்புமீசையை பற்றி ஆலாபனை செய்யவிரும்பவில்லை.அந்த வளவுக்குள் சென்ற கதை.அதுவும் ஒரு படிப்பக வளவுதான்.ஆனால் எனக்கு புத்தகங்களைவிட அந்த படிப்பகத்து ஓரமாக வளைந்து திரும்பும் செம்மண் தெருதான் வாசிக்க வேண்டிய
இன்பத் தேன் சாரல் கொட்டும் அருவிகளும் புல்வெளியும் நிறைந்த பக்கங்களை சுமக்கும் புத்தகமாய் இருந்தது.என் மனதை கிள்ளிவிட்ட பருவ தேவதையின் உலாவீதி அதுதான்.வேறு வழியில்லை.எனக்கு அந்த படிப்பக வளவுதான் காத்திருக்க இடம் கொடுத்தது.எப்போதும் உன்னை அந்த லைபிறறியில் முந்தி காண்பேன் என்று எனக்கு யாரும் சொல்ல நினைத்திருந்தால் இத்தோடு அந்த நினைப்பை விடுங்கள்.அங்கே சென்றதற்கு வாசிப்பு காரணம் கிடையாது.நேசிப்பும் அவளை தினமும் பூசிப்பும் தான் காரணம்.அப்போது சின்ன கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.அப்படியேனும் என்னை அவள் அறியட்டுமென பத்திரிகை சிலதுக்கும் அனுப்பினேன்.அனுப்பியவை நூறு வந்ததோ ஆறு.அந்த ஆறு கவிதைகளும் அவளை கூறும் குறுங்காவியங்கள்(இந்த இடத்தில் என்னை நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கின்றேன்)வந்த கவிதைகள் அந்தப்படிப்பகத்தின் மேசைகளில் இறாக்கைகளில் பரவிக்கிடந்தன.வாசித்தவர்கள் என்னை எழுத்தாளன் போலவும் முறுவலித்துச்சென்றார்கள்.பிறகு அந்த படிப்பகத்திற்கு என் கவிதைகள் வந்தனவா பத்திரிகையில் என்று பார்ப்பதற்காக செல்வேன்.என்னைத் தெரியாத பலரையும் எனக்கு புன்னகை தரும் சிநேகிதங்களாக அந்த படிப்பகம் தந்தது.நான் அவளுக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டுமல்லவா.என் அன்பு தோழியே உனக்கு நன்றி.அங்குதான் எரிக்கப்பட்ட புத்தகங்கள் இடிக்கப்பட்ட நூலகங்கள் கொல்லப்பட்ட எழுத்தாளர்கள் என்று என் வாசிப்பு ஆரம்பமாகியது.ஏன் நூலகங்களை எரித்தார்கள் எழுத்தாளர்களை சுட்டார்கள் என்பதை மனம் கேள்வி கேக்க வைக்கும் ஒரு மனப்போரும் தொடங்கியது.
பிறகு கொஞ்சம் ஏதோ எழுத ஆரம்பித்தேன்.காரணம் எழுத்தாளன் ஆகவேண்டுமென்பதல்ல.ஆனால் ஏதோ எழுத வேண்டுமென்று தோன்றியது.இன்றுவரையும் ஏதோ தொடர்கின்றது.பிறகு சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் எழுதியவை.வெளிவராமல் எனது கை பையில் பல கற்றைகளாக எழுதி வைத்துக்கொண்டவை.புத்தக வெளியீடுகளில் பெற்றுக்கொண்டவை.விருப்பங்கொண்டு வாங்கிய ஏடுகள் சஞ்சிகைகள் என் வீட்டில் ஒரு மூலையில் ஒரு மேசையின் ஓரத்தில் அடுக்கப்பட்டன.அதுவும் ஒரு குட்டி நூலகமாக மாறுவதற்கு வாய்ப்பு இருந்தது.அங்கு என்னுடைய பள்ளிக்காலச்சான்றுகள்.தேர்ச்சி அறிக்கைகளும் சேர்ந்திருந்தன.அவைபற்றிய கனவுகள் இருந்தன பிற்காலத்தில் அதை என்னுடைய இளவல்களுக்கு காட்டவேண்டும்.அவை ஒவ்வொன்றுக்கும் பின்னாலிருந்த சின்ன சின்ன கதைகளை சொல்லவேண்டுமென.ஆனால் ஒரு நாள் இரவு சரசரமாரியாக எறிகணைகள் எங்கள் ஊருக்குள் வீழ்ந்தன.அந்த இரவில் ஒரு சிறு கைப்பையோடு மறுநாள் எறிகணைகள் ஓய திரும்பி விடலாம் என கொஞ்சம் தொலைவாக ஓடினேன்.ஆனால் மீண்டும் திரும்ப முடியவில்லை.ஊர் ஆக்கிரமிக்கப்பட்டது.நான் வேறு ஒரு ஊருக்கு அகதி ஆனேன்.என்னுடையவை எழுதியவை பிரசுரமானவை எழுதிவைத்தவை தொலைத்தன.பிறகு ஆக்கிரமிப்பாளர்களால் எரிக்கப்பட்டன.சில பத்து புத்தகங்கள் எரிந்த வலியே எனக்கு அப்படி என்றால் தொண்ணூறு ஆயிரம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட வலி எப்படி இருக்கும்.
இப்போது இறுதியாய் அந்த இன்னொரு வளவுக்குள்ளும் போனது வாசிப்பதற்காக அல்ல ஊரை இழந்த வலி மனதில் என் ஆவணங்கள் எரிந்த வலி இன்னொரு புறம்.கொஞ்சம் தனிமையாய் அந்த வளவுக்குள் நின்ற மரத்தின் கீழிருந்த இருக்கையில் இருந்த என்னை ஆசவாசப்படுத்த முனைந்தேன்.ஊருக்கு எப்பொழுது போவேன் என்பதை அறிய தினமும் பத்திரிகை வாசிக்க அந்த வளவுக்குள் இருந்த படிப்பகத்தில் நுழைய வேண்டி இருந்தது.பிறகு புத்தகங்கள் எழுத்துக்களை அளைய வேண்டியிருந்தது.அங்கு இருந்த சஞ்சிகைகளில் அநேகமானவை இடிக்கப்பட்டவை எரிக்கப்பட்டவை வதைக்கப்பட்டவை எதிர்க்கப்பட்டவை வெல்லப்பட்டவை என பொருளடக்கமாய் எழுத்துக்களாக இருந்தன.அந்த வளவுக்கு ஒரு நன்றி சொல்வேன்.அங்கேதான் ஒரு தத்துவத்தை உணர்ந்தேன்.நெருப்பால் எரிக்கலாம் ஏராளம்.ஆனால் பிறகு தோன்றும் நெருப்பை எவராலும் எரிக்க முடியாது எப்போதும்.இப்போது கொட்டங்காய் ஒரு தீயின் கனியாய் எனக்கு முன் தோன்றுகின்றது.கொட்டங்காய்களுக்குள் பருப்பு மட்டுமல்ல நெருப்புங் கூட எங்கள் ஊரில்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...