நல்லவேளை
மினியாபொலிசில்
பிலாய்ட்டின் குருதி சிவப்பு
பிலாய்ட்க்கு நீதி கிடைப்பதாக!
நந்திக்கடலோரத்தில்
ஜோர்ஜ் பிலாய்ட்
கொல்லப்படும்போது
பிலாய்டின் குருதி
நீலம் மஞ்சள் பச்சையாய்
ஒரு வானவில்லாய் கரைய
இரசிக்கப்பட்டார்
முதலொரு முறை
பிலாய்ட் கொல்லப்படுகையில்
எண்ணெய் வயலிடையில்
அவரின் பிணமிருந்து
எண்ணெய் புளுவாய்
எழுதி வைக்கப்பட்டார்
பிறகொரு பொழுது
பிலாய்ட்டின் மூச்சு
நிறுத்தப்பட்டு
காட்டில் பிணம் கிடந்தது
கொடிய மிருகமாய்
வர்ணனை செய்யப்பட்டார்
மலைகளுக்கிடையில்
பாறாங்கல்லாய்
கடலில் திமிங்கிலமாய்
பிலாய்ட்டின் பிணம்
உலகுக்கு அறிவிக்கப்பட்டது
பிலாய்ட்டின் சனநாயகம்
எப்படி இருக்கும்
பிலாய்ட் என்பவர்
ஒரு கறுப்பு மனிதனா
சிறுபான்மையனா
ஒரு மனிதனா
பிலாய்ட்
நந்திக்கடலிலிருந்து
மினியாபொலிசு வழியே
நெடும் பயணம் போனார்
மினியா பொலிசிலும்
மூச்சடங்க நசுக்கப்பட்டார்
நல்லவேளை
அவர் குருதி சிவப்பு
பிலாய்ட்டுக்களுக்கான
நீதிக்கான காத்திருப்பு
மினியா பொலிசில்
தொடங்கியது அல்ல
No comments:
Post a Comment