Sunday, May 10, 2020

இலட்சுமி-பொன்.காந்தன்,


அடியடியாய்
அப்பாக்களும் அம்மாக்களும்
பெயர் வைத்ததில்
ஒரு அழகு அன்பு கனவுண்டு
என் இடாப்பு பெயரில்
காந்தனுக்கு முன்
ஒரு இலட்சுமி
எல்லாச் சிறுவர் போல
காந்தனுக்கு முன்
தேவ சந்திர இந்திர சுந்தரவென
இருந்திருக்கலாம்
நாகரிக மோகம் எனக்கும்தான்.
பிறகு
காந்தனோடு இலட்சுமியை
அப்பா
தன் அம்மா நினைவாக
சேர்த்த கதை தெரிந்தபோது
நானே
என் பெயரை அடிக்கடி
சொல்லிச் சிலிர்த்தேன்
ஊருக்குள்
பஞ்சலிங்கம் யோகலிங்கம் இராசலிங்கம்
பஞ்சலிங்கத்திற்கு ஒன்றென்றால்
இராசலிங்கம் பதறிப்போவான்
மகேஸ்வரி பரமேஸ்வரி கமலேஸ்வரி
இந்த ஈஸ்வரிகளை
அநேகம் சந்தை திருவிழாவெங்கும்
இணைபிரியாமல் காணலாம்
அனுசா வேனுசா பானுசா
அனுசாவை வளைத்துப் போட
பானுசாதான்
குணசீலனின் தம்பி
தவசீலனுக்கு தூது
எல்லாம் மகிழ்ச்சியானவை
மறக்க முடியாதவை
எவ்வாறு பெரு மகிழ்ச்சியோ
யோகராணி செல்வராணி லோகராணி
சிந்துஜா சிந்துஜன்
தமிழ்நிலா தமிழ்மகள் தமிழ்விழியென
எறிகணைகள் பறித்தன
எங்கள் பெயர்களை
அவ்வாறே பெருந்துயரும்
முள்ளிவாய்க்காலில்
கல்வெட்டுக்களை எடுத்து வந்தோம்
ஒரே நாளில்
ஒரே கணத்தில்
ஒரே இடத்தில்
ஒரே எறிகணையில்
பிணங்களாய்
அப்பாவும் அம்மாவும்
ஆசையோடு பெயர் வைத்த
பாமகன் பூமகளைக் கண்டோம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...