வெறும் நான்காம் வகுப்புவரை ஒரு பள்ளி அனுபவம்.கடைசிவரை ஒரு இரயில் பயணத்தை சாளரத்தினூடே லயித்து தன் கிராமத்தில் வந்திறங்காத காலத்தின் ஒரு சிருஸ்டிப்பாக கற்பூரத்தின் காற்று வாசமாய் விடைபெற்றவள் அந்த மனுசி.தீர்ந்து போகாத தீர்த்தக்கரையின் சிறகாயும் மலராயும் அவள் பற்றிய ஓர் உலகத்தையும் சுற்றிவரலாம்.கடைசிவரையும் கந்தசஸ்டி பிடித்தும் காகத்துக்கு சோறு வைப்பதற்காய் கால் நடையாய் நான்கு கட்டை நடந்துபோய் கந்தசுவாமி கோவில் தேர் உலா வீதியில் காகம் ஒரு கவளம் உண்ணும்வரை காத்திருந்துவிட்டு வீடு வந்தவளிடம் கடைசி நாட்களிலேனும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம் என்ன வரம் கிடைத்ததென்று.அதனால் அமானுஸ்ய உலகத்துக்கும் பறக்கவேண்டிதாயிருக்கிறது அவளை பற்றிய தாகத்தில் ஆத்மாவின் விடாய் அடங்க எழுதுவதற்கு.
உயர்ந்த பனந்தோப்புக்களுடையில் இந்த உலகத்தில் அவள் படைக்கப்பட்டாள்.தெருவில் மாட்டு வண்டியின் சலங்கைகள் ஒலித்துக்கொண்டிருந்தன.குடிசையின் முகடுகளுக்கள் எலிகள் குஞ்சுகனை பொரித்து கீச்சிட்டுக்கொண்டிருந்தன.நல்ல தண்ணீர் எடுத்துவருவதற்கு குமரிகள் தூரத்தில் உள்ள வயல் கிணற்றுக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.கிழவியொன்று கடகம்இழைத்துக்கொண்டிருந்தாள்.சத்தகக்காம்பு சார்புகளில் உரசும் ஓசை அந்த கிராமத்தில் வழமையான தேசிய கீதம் போலவும்தான்.தூரத்தில் நெரிசலற்ற தெருவில் தட்டிவான்கள் அருந்தலாக போகும்.அதுபோலவே பேரூந்துகளும்.அப்பு குஞ்சியப்பு ஆத்தை பெரியாத்தை சின்னண்ணன் மாமா சித்தப்பா மூத்தக்கா சின்னக்கா என்ற உறவுமுறைகளால் நிறையும் கூட்டுக்குடும்ப நெருக்கமான சொந்தபந்த வாழ்வியல் கோலத்தின் அவளுக்கு மூத்தக்கா என்ற அந்தஸ்து கிடைத்தது.ஒரு வகை கிரீடமும் சுமையுமான உறவுமுறை அது.
பனையடைப்பு வேலிகள் பூவரசம் பூக்களையும் தாண்டி ஒரு வாழ்வியலை அவள் கண்டிருக்க நியாயமில்லை.அவளின் அப்பா(அப்பு)அல்லியாக நடித்ததில் அவர் குரலெடுத்து கடப்பை திறக்கும் போதும் வரும் போதும் அந்த நாடக மேடைப்பாடல்களை பாடுவதில் அவர் பற்றிய விம்பங்கள் பின்னால் தோன்றி மறைய அவளுள் படிந்துகொண்டிருந்தன மனதில்.வல்லிபுர ஆழ்வார் வரையும் செல்வச்சந்திவரையும் எப்போதாவது பிதுர்க்கடன் என்றால் கீரிமலைவரையும் சற்று விரிந்து பிறகு நெடுநாளாக சுருங்கிக்கிடந்தது அவளின் உலகம்.அது நிர்ப்பந்தமும் அல்ல.அதுவே வாழ்க்கை கோலமாய் வாசல்தோறும் இருந்தது.படத்தில் சாவித்திரியின் கண்ணில்சொட்டும் கண்ணீருக்கு சேலை தலைப்பை நீட்டும் காலத்தில் தன்னை யாராக உருவகித்துக்கொண்டாள் என அவளிடம் ஏதோ ஒரு நாள் கேட்டிருந்தால் அவளின் பல கனவு வாசல்கள் திறந்து வசந்த கால காற்றில் சின்ன மலர்கள் காற்றில் பறந்து வந்து தலையில் ஒட்டிக்கொள்வதுபோல இந்த எழுத்தில் இருந்திருக்கலாம்.கே ஆர் விஜயாவின் உதடுகளை போலென நல்ல தண்ணிக் கிணற்றடி ஓரத்தில் வயல்களுக்குள் நின்றவன் ஜாடை காட்டியிருந்தாலும் ஒரு காட்டு மல்லிகையின் வாசம் மாடங்களை கடந்து ஒரு இளவரசியின் சிம்மாசனத்தில் அவளை சாமரம் வீசியிருக்கலாம்.
ஆனையிறவைத்தாண்டி வன்னிக்குள் போய்வருவது ஒரு வீரதீரப் பயணம்.அன்றியும் ஒரு அமானுஸ்ய கதைகளின் இருளும் தோன்றி மறையும் நிழல்களுமாக கற்பனை பண்ணிக்கொண்டிருந்த ஒரு வடலித் தெரு வாழ்க்கையில் அண்டங்காக்கா விருந்தினரை அழைத்துவரும் தூதனாகவும் நாயின் ஊளைகள் இயமன் வந்துபோகும் அபசகுனமாயும் ஐதிகத்துள்ளும் அடங்கிய நாட்களில் அவளுக்கு ஒற்றையடிப்பாதையும் ஓங்கி வளர்ந்த காட்டு மரங்களும் வழியில் குறுக்கறுக்கும் சிற்றோடைகளும் காத்திருந்தன.தேன் நிலவுக்காலங்களின் பின் ஆனையிறவைத் தாண்டி சூடுகளை யானைகள் சப்பிக்கொண்டிருக்கும் மொச்சைக்கு நடுவில் அவள் தன்னுடையதோர் உலகத்தை படைக்க காலம் வழிவிரித்தது.குஞ்சியப்பா மாமா அப்பு இப்படி எல்லாமும் புள்ளியாய் தொலைய அவள் காடுவெட்டி கட்டை
பிடுங்கி கொட்டில் போடும் கூட்டங்களில் ஒருத்தியாய் தன் கணவருடன் போனாள்
பிடுங்கி கொட்டில் போடும் கூட்டங்களில் ஒருத்தியாய் தன் கணவருடன் போனாள்
கூப்பிடு தூரத்தில் இல்லா குடில்களுக்கு மத்தியில் குடிசையில் சுற்றத்தொடங்கிய அந்த மனுசியின் உலகம் தான் பெற்றெடுக்காத ஒரு பிள்ளைக்காகவும் சுற்றியது.அன்னைகளுக்கு மேலாக ஒரு அன்னையாயும் அவள் அவதாரம் எடுத்தாள்.தான் அந்த பிள்ளை கணவன் இப்போது அப்பு சொல்ல அவளின் தங்கச்சி எழுதிய கடிதம்.மற்றும் மூத்தக்காவை சுகம் கேட்ட ஒன்றுவிட்ட தம்பி தங்கச்சிகளிடம் இருந்து மாதத்துக்கு ஒரு தடவையோ இரண்டு மாதத்துக்கு ஒரு தடவையோ வரும் கடிதங்கள் எல்லாமும் சேர அவளின் உலகம் சுற்றுகின்றது.காடு வெட்டிய நிலத்தில் மிளகாய்த்தோட்டம் வாழைகள்.ஒரு மண் கிணறு.பிறகு அவளுடைய கந்தசட்டி சனி விரதங்களும்.இரவு நெடுநேரமாகியும் பேரூந்துச் சாலை வேலையில் இருந்த கணவர் வரும் வரையும் குடிசை வாசலில் எரியும் கைவிளக்கும்.அதின் மின்னிக்கொண்டிருக்கும் அவளின் விழிகளும்.வெளியே காட்டுப்பூச்சிகளின் ஓசை.சற்று தொலையில் யானைக்கு மணி அடிக்கும் ஓசை.வீட்டுக்கு காவலுக்காய் வளர்க்கின்ற ராணி என்ற பெயருடைய சடை நாய்.காற்றில் கலந்திருக்கும் பாம்பு இரையெடுக்கும் மணம்.மர நாய்க்கு வெருண்டு கொண்டிருக்கும் கோழிகளின் அனுங்கல்.வளுவளுப்பான ஒரு பனங்கீற்று இப்படி ஒவ்வொரு இரவும் இரும்பாயும் மாறவேண்டியிருந்தது.நாள் பட நாள் பட சாமங்களோ சர்ப்பங்களோ புதிதல்ல என்பதாயிற்று அவளுக்கு.
கணவரின் சாம்பாத்தியத்திலும் புதன் சனிச்சந்தைக்கு வணடில் கார அப்பு வந்து ஏற்றும் வாழைக்குலைகளாலும் கையில் கிடைத்ததில் அவளுக்குள் ஒரு கல்வீடு பற்றி கனவும் ஒரு சிறு புள்ளியாய் விதையாய் வளர்ந்தது.அப்போதுதான் பரமக்கா என்ற இன்னொரு மனுசியை இந்த மனுசி சந்திக்கின்றாள்.சீட்டுப்பிடிக்கும் அந்த மனுசியின் துருதுருப்பும் வேகமும் வல்லமையும் இவளுக்கும் துணையாய் இருந்தது.மாலையில் மண்குந்தில் இருந்து பரமக்காவும் இவளும் நெடுநேரம் இரகசியமாயும் சற்றுக்குரல் உயர்த்தியும் இடைக்கடை சிரித்தும் பல கதை பேசுவார்கள்.தென்னைகள் வளர்ந்து ஓலைகள் விழத்தொடங்கியபோது இன்னொரு வேலையும் வந்தது கிடுகு பின்ன ஆரம்பித்தாள்.கோடிக்குள் ஆடுகளும் கோழிகளும் நின்றன.ஆடு வளர்ப்பது விருப்பான ஒன்றாய் இருந்தது.மகனுக்கு சிறுவயதில் இருந்து ஆட்டுப்பாலே அதிகம் கொடுத்தாள்.அப்பாலில் கோப்பி கலந்து கொடுப்பாள் அதன் சுவைக்கு எல்லையில்லை.ஊர்க்கோழிக்கறி சமைத்து அவள் தரும் சோற்றை இதுவரை எதுவும் வெல்லவில்லை.அவள் வேலியில் நட்டுவைத்த குறிஞ்சாவில் புட்டு முசுட்டையில் புட்டு வறை இப்போது அதையெங்கு எங்கு தேடினாலும் கிடைப்பது அரிது.தன் மகனுக்கு அழகாய் வேலியில் பூத்திருக்கும் முள் முருக்கம் பூக்களை இனிய கனிகளை குளிர்ந்த நீரை.மணிவாழையை மல்லிகையை வாடா மல்லிகையை செவ்விரத்தையை சீமைக்கிளுவையை அறிமுகம் செய்து வைத்தாள்.ஓ அவன் கவிஞனாகவோ கதாசிரியனாகவோ ஆகியிருப்பானோ
அவள் ஒரு மெல்லிய தீராத ஆஸ்த்துமா நோயால் வருந்தும் உடல்வாகு கொண்டவளாக இருந்தாலும் அவள் ஒரு இரும்பு மனுசிதான்.மனசு இயற்கையின் மாற்றங்களை தாங்க கற்றுக்கொண்டது.அவள் வளவுக்குள்ளேயே அவள் பொழுதும் வயதும் போய்க்கொண்டிருந்தது.காடுவெட்டி உருவான கிராமத்தில் தன் காலையும் அவள் ஊன்றிய விதம் சிலிர்ப்பானது.வளவுக்குள் அவள் வளர்த்த கனவுகள் நிலத்தில் வெயில் படாதபடி தென்னங்கீற்றுகளாக நிழல்கொடுத்தது.பலா மரங்கள் கனி கொடுத்தது.எலுமிச்சைகள் காய்த்துக்கொண்டிருந்தன.அதைவிட அப்படியென்ன அனுபவித்தவிட்டாள்அவள் அனுபவித்தவைகள் கொஞ்சம்தான் மின்சாரம் இல்லை கைவிளக்கு.ஒரு நாலு பற்றரி பனசொனிக் றேடியோ அவள் வீட்டில் இருந்தது.பரமக்கா முன் வீட்டு ஈசுவரியக்கா கனகம்மா தொம்மாசி லூர்த்து என பக்கத்து வீட்டுக்காரர்களோடு சிறு பொழுது கதைக்கும் நேரங்களை தவிர அந்த றேடியோதான் அவளுக்கு தஞ்சம்.
அந்த றேடியோவில் அவள் தணியாத தாகம் தொடர் நாடகத்தை விடாமல் கேட்டு முடித்தாள்.மகனோ அதில் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே விளம்பரப்பாடலை கேட்டு ரசித்தான்.பிடித்துவிட்டதுபோல் முணுமுணுக்கவும் செய்தான்.அலை வரிசைகளை மாத்தி நடிகமணி விவி வைரமுத்துவின் அரிச்சந்திர மயான காண்டத்தை அவள் கேட்டாள்.மகனோ லலிதாவின் பாட்டுக்கு பாட்டை கேட்டு தன்னை மறந்தான்.பி.எச்.அப்துல் கமீட் போல அறிவிப்புச் செய்து பார்த்தான்.பிறகு தொடர்ந்து பாட்டுக்கு பாட்டை கேட்டான்.அவள் தேன் கிண்ணத்தை தவறாமல் கேட்பாள் அந்த இனிய மதுரகானங்கள் மகனின் காதிலும் விழும்.முகத்தார் வீட்டை முற்றத்தில் இருந்து தன் கணவரோடு சேர்ந்து முற்றத்தில் நிலாக்காலத்தில் கேட்டாள்.ஏஎம்ஜி ஜெயசோதியின் நிலையில் தானிருப்பதாய் சிரித்துக்கொள்வாள்.அவளின் இன்னொரு தவறாத பழக்கவழக்கம் இரவு இலண்டன் பிபிசி கேட்பது.இலண்டன் பிபிசி வழியால்தான் தமிழீழம் மலர்ந்த செய்தி வருமென்று நம்பிய வற்றாத மண்வாசத்தில் அவளும் ஒருத்தி.இரண்டு தலைவர்கள் இறந்தபோது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறாள் சாப்பிடாமலும் தவித்திருக்கிறாள்.அந்த இரண்டு மரணங்களும் எம்ஜிஆர் அன்னை இந்திராகாந்தி ஆகியோருடையது.அவளுக்கான எல்லா இன்பங்களையும் துன்பங்களையும் ஆசுவாசத்தையும் அந்த நாலுபற்றரி பனசொனிக் றேடியோ அறிவித்தது.அதன் வழியாய்தான் அவளின் மகன் இசை நாடகம் செய்தி இப்படியோர் மிகப்பெரிய உலகத்துள் பயணம் செய்ய ஒரு அத்திபாரத்தை அவளை அறியாமலே தன் இரசனையின் மூலம் அவள் இட்டாள்.அவள் ஒரு பெரிய மனுசிதான்.
வெறும் நான்காம் வகுப்பு இரயில் பயணங்கள் காற்று கவிதைகள் இல்லை.கடைசிவரையும் அவளுக்கு விமானங்கள் குண்டு போடும் என்பது மட்டுமே தெரியும்.தொலைபேசி டயல்களில் விரல் பட்டது கிடையாது மிக்சி கிறைண்டர் தெரியாது.குளிர்சாதனப்பெட்டியை தொட்டது கிடையாது. வாசலில் கணவரை புன்னகையோடு வழியனுப்புவது.அடிவளவுக்குள் ஆடுகளோடு பேசுவது.கோழிகளை திட்டுவது.மழை பெய்து ஓய்ந்த நாட்களில் வீட்டை சுற்றி படரும் கோரைகளை பிடுங்குவது முட்டு இழுக்க அப்படியே கோரைகளில் குந்தியிருப்பது.எழுந்து மகனின் ஆடைகளை தோய்த்து உலரவிடுவது.கலண்டரில் உள்ள பிள்ளையாரிடம் நெடுநேரமாய் அழுதுகேட்பது.காகத்திற்கு சோறு வைக்க ஓடுவது.இப்படி ஒரு நாள் நெடுந்தூரமாய் பறந்தாள்.அப்போதுதான் தெரிந்தது பெரிய உலகத்தில் பெரியர்கள் பலபேர் இல்லையென்றாலும் சிறிய உலகத்தில் நிறைய பெரியவர்கள் இருந்தார்கள்.அன்னைக்கு மேலான அன்னையாயும் அங்கு பலர் வாழ்ந்திருப்பார்கள்

No comments:
Post a Comment