Sunday, May 10, 2020

லிங்கேசுவரர்!-பொன்.காந்தன்,


கனவில் வந்திருப்பது லிங்கேசுவரர் என கையெடுத்து கும்பிட நினைக்கும்போது என் நெஞ்சு படக்கென்றது அது லிங்கேசுவரர் அல்ல என்னால் ஆண்டுகள் பத்துக்கு முன் நந்திக்கடலோரத்தில் சாபமிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆண் குறிகளில் ஒன்று.பிறகு தூக்கமில்லை.அறத்தின்படியான ஆயிரங்கேள்விகளோடு நான் கல்லாக சமைந்ததுபோலானேன்.எவ்வாறு கல்லாக சாபமிடப்பட்ட ஆண்குறிகள் உயிர்த்தன.உயிர்த்தது மட்டுமல்ல அவை லிங்கேசுவரர் நிலைக்கு தம்மையுயர்த்திக்கொள்ளும் விமோசனம் அளிக்கப்பட்டது எப்படி.மனுநீதிக்கான பெருங்கோபத்தில் மதுரை சாம்பராகியவேளை வெப்ப விழிகளோடு கண்ணகி வந்தமர்ந்த வற்றாப்பளையின் கூப்பிடு தூரத்தில் எப்படி அறம் பிழைத்தல் கூடும்.
துகிலுரிதலின் பின்னான போருக்கான கோபத்தை தணித்தவைகள் எவையாயிருக்கும்.ஆண் ஆதிக்க பொதுமைச்சிந்தனையில் தங்கைகளின்(பாஞ்சாலிகள்) மீதான துகிலுரிதல் ஒரு போர்ச்சடங்கெனும் அறத்துக்குள் புதைக்கப்படுகின்றதா.ஆண் குறிகளை அறுத்தெறிவதாக யோனிகளின் மீது காக்கப்பட்டு வந்த ஒரு வகை அறத்தின் பாற்பட்டவைகள் பகடை உருட்டுபவர்களின் கையில் மீண்டுமொரு சூதாடு களத்தில் இடப்பட்டுவிட்டனவா.
மனு நீதிக்கான அடுத்த போர்க்களத்தின் பல குழப்பங்களோடு நின்றபோது.ஓங்கார மூர்த்திக்கு ஒரு தொலைபேசி அழைப்பை எடுக்கிறேன்.நீண்ட நாட்களாக தொடர்பிலில்லை.ஓங்கார மூர்த்தி என் தூரத்து உறவுக்காரர்.ஆனால் அதிகம் என்னோடு பேசுவதில்லை.இப்போது அவரோடு பேச வேண்டியிருக்கின்றது.வயது எண்பது கடந்துவிட்டது. இப்போதும் கம்புமாதிரி இருக்கிறார்.வெறும் மேனியோடு ஆளைப்பார்த்தால் மயிர்கொட்டிதான் அல்லது கரடி என்று வைத்துக்கொள்ளுங்கள்.அந்த அடர்ந்த உரோமங்களுக்குள் கிடக்கும் தழும்புகளை பார்த்தால் எப்படி இவ்வளவு நாளும் உயிரோடு இருக்கிறார் என்று எண்ணத்தோன்றும்.ஓங்கார மூர்த்தியிடம் எதையும் நான் எப்போதாவது நேரடியாக கேட்டதில்லை.நிறைய அவருடைய கதைகளை கேள்விப்பட்டிருக்கின்றேன்
அவருடைய வெட்டுக்காயங்கள் எல்லாம் பெண்கள் தொடர்பில் வந்தவை.தோளில் இருக்கிற வெட்டுக்காயம்.சாதியில் குறைந்த அடுத்த தெருப்பெடியன் ஒருவன் அவருடைய தங்கை வழிப்பெடிச்சியோடு அடிக்கடி கதைப்பதை அறிந்து தங்கையின் பெடிச்சியும் அவனும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் தன் தங்கையின் ஆசீர்வாதத்தோடு சண்டியர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டுபோய் வெட்டுப்பட்டவர்.வெட்டும் வாங்கியவர்.பிறகு அவள் பெடிச்சியை தன் சாதிக்குள்தான் கட்டி வைத்தார்.தன்னுடைய இரண்டு பெட்டைகளையும் பொத்தி பொத்தி வளர்த்தார்.பருவமடைந்தபின் அயல்வீட்டுப்பெடியனின் பார்வை சரியில்லையென்று தொலைவில் பட்டணத்துக்கு கொண்டுபோய் விட்டு அங்கு படிப்பித்தார்.அநேகமாய் ஓங்கார மூர்த்தியின் வெட்டுத்தழும்புகள் எல்லாம் தன் உறவுக்கார பெட்டைகளை அடுத்த சாதிக்காரன் அடுத்த ஊர்க்காரன் பார்த்ததுக்காய் சேட்டை விட்டதுக்காய் காதலித்ததுக்காய் நடந்த சண்டைகளில் சண்டித்தனங்களிலானவை.
ஓங்கார மூர்த்தி நீண்ட முயற்சியின் பின் அழைப்பில் வந்தார்.ஓங்கார மூர்த்தியிடம் என் மனுநீதிக்கான அடுத்த போர்க்களத்தின் கேள்விகளை எழுப்பினேன்.
உனது சாதியுமில்லை உனது மொழியுமில்லை.உனது ஊருமில்லை.நீ அறிந்திராத ஒரு அன்னியன் ஒருவனல்ல பத்துபேர் உனது மகளை கற்பழித்துக்கொலை செய்தால்.....
ஓங்கார மூர்த்தியின் உரோமங்கள் நீண்ட காலத்தின் பின் சிலிர்த்தது. கண்கள் சிவந்தன இமைகள் துடித்தன.எனக்கு அவர் உதடுகள் துடிக்க உடன் அளித்த பதில்
அவ்வளவும் நடந்த பிறகு எனக்கெதுக்கடா ஆண்குறி முதலில் என்னுடையதை அறுத்தெறிய வேண்டும்.பிறகு அதே அரிவாளால் அந்த பத்துபேரின் ஆண் குறிகளையும் அறுத்துக் கிழித்து நாராக்கி எறியவேணுமடா கடலில் என்றார்.
அடுத்து அவர் சொன்னது
என் சாதிக்கார பெடியனுக்கு அல்லாவிட்டால் என்னூருக்குள் இருக்கிற அடுத்த சாதிக்காரனுக்கு என் பெட்டைகளை கட்டிக்கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பேனேயொழிய ஆரோ நாய்கள் இரையெடுக்க விடுவனாடா நான்...
ஓங்கார மூர்த்தியின் கோபத்தின் கொப்பளிப்பு இப்படி கொதி நிலையில் இருக்கும்போது.எவ்வாறு சாபமிடப்பட்ட ஆண்குறிகள் விமோசனமடைந்திருக்க முடியும்
துகிலுரிதலுக்குப் பின்னான கோபம் ஒரு சூதாடு களத்தில் வைக்கப்பட்டுள்ளது போலவும் எனக்கு ஐயம். கண்ணகியின் கோபத்திற்கான அறம் முழுமையும் ஆணாதிக்கத்திடம் சிக்கிக்கியிருக்கலாம்.பாஞ்சாலிகளின் சத்தியம் ஆணாதிக்க அரசியல் அறத்தில் முனகலாகும் அறிகுறிகள்.நந்திக்கடலின் சாபமிடப்பட்ட ஆண் குறிகள் எவ்வாறு விமாசன அளிக்கப்பட்டதாய் லிங்கேசுவரர் நிலையில் எழுதல் நிகழும்.
பிறகு நடனசிகாமணிக்கு ஒரு தொலைபேசியை எடுக்கிறேன்.அழைத்தவுடன் எடுக்கும் நடனசிகாமணியின் அழைப்பு இன்று காத்திருப்பில் போகின்றது.நடனசிகாமணியை எனக்கு நன்றாகவே தெரியும்.பட்டிமன்றங்களும் பேசுவார்.இரண்டு பக்கமும் பேசுவார்.நடன சிகாமணி கற்பில் சிறந்தவள் கண்ணகியில்லை என்றும் பேசுவார்.அவருக்கு முக்கியம் கற்பல்ல தைட்டல்.நாவை வளைக்கும் லாவகம்தான் நடனசிகாமணிக்கு.கட்சியொன்றில் வேட்பாராக நிற்க வாய்ப்பாகவும் அமைந்தது.பிறகு நடனசிகாமணிக்கு வெள்ளிதிசைதான்.நடன சிகாமணிக்கும் ஒரு குமர்பெட்டையுண்டு.நடன சிகாமணியின் பைபேசி பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஓங்கார மூர்த்தியிடம் கேட்ட அதே வகைப்பட்ட அறம் சார்ந்த கேள்விகளைத்தான்.நடனசிகாமணியிடமும் கேட்பதாக இருந்தேன்.ஆனால் அழைப்பை எடுக்கவில்லை.பிறகு ஆறுதலாய் இந்த மனுநீதிக்கான அடுத்த போர்க்களம் பற்றி பேசலாம் என்று நினைத்துவிட்டு .மறு நாள் பத்திரிகையை புரட்டியபோது அதிர்ந்துபோனேன்.நடனசிகாமணி லிங்ககேஸ்வரருக்கு அருகில் இருக்கும் புகைப்படம்.மீண்டும் நெஞ்சில் அதே படபடப்பு

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...