Wednesday, April 15, 2020

போத்தல் காரனின் பித்தளைக்குரல்-பொன்.காந்தன்,


ஒழுங்கையில் இப்போதெல்லாம்
அம்மி ஆட்டுக்கல் பொழியல்லையோ
குரல்கள் இல்லை
தினமும் இரண்டு மூன்று தடவை
உடைந்த பழைய சாமான்கள் தேடும்
ஊர்தியும் ஒலிபெருக்கியும் பழக்கபட்டுவிட்டது
எங்கள் வீடுகளின்
இன்றைய பழைய சாமான்கள்
எதுவென்ற உண்மையை காண்கிறபோது
முந்தி வேலிப்புற்றுக்குள் போடும்
பிசுங்கான் கீறுவதாய்
மனசு வலிக்கின்றது
ஆட்டு இளங்கொடி தொங்கும்
பால் மரங்களின் தெருவில்
உடைந்த பித்தளை போத்தலுக்காய்
கூவிப்போனவனின் காலத்தில்
உலக்கைச் சத்தத்தை மீறி
அவ்வளவு இலகுவாய்
கட்டில் மெத்தைகள் காவிவரும்
தூக்கத்தை தூவ முடியவில்லை
இப்போது எல்லாம்
விறாந்தையில் ஏராளம் உள்ளன
எவை எப்போது பழசாகும்
சொல்லமுடியவில்லை
நாளைக்குமாக இருக்கலாம்
ஒரு வாரம் கழித்து
பட்டணத்துக்குப் போய் திரும்பும்போது
சிலவேளை
வீடு முழுக்க பழையதாகவே தோன்றுகின்றது
இப்போது
யாராவது தெருவிலோ விழாக்களிலோ
உற்றுப் பார்க்க்கின்றபோதும்
சிரிக்கின்றபோதும்
வேறு ஏதேதோ தோன்றுகின்றன
என் கைத் தொலைபேசியின் ரகத்தை
பூசிக்கொண்ட வாசனைத்திரவியத்தை
ஆடைகளை
இப்படி இப்படி ஏதேதோ

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...