Wednesday, April 15, 2020

முத்தரும் முற்றத்து பனையும்-பொன்.காந்தன்,


அப்பத்துக்கு புளிக்க
ஆள் தெரியா மம்மலுக்குள்
வெக்கத்தை விட்டு
வெளிக்கிட்டுப்போய் கேட்க
அப்பத்தை நாட்களிலே
ஆத்தை அனுப்பிவிட
பத்தைக்கால் போய்
பனந்தோப்புள் நுழைந்து
சுத்தி சுழன்று பாத்து
எப்பன் கள்ளிதற்குள்
இறக்கியதில் சிந்துமென்று
சொத்தையில் பால்வடியும்
சுள்ளிப் பருவத்தில் நிற்க
அத்தையை மாமனை
ஆட்டுக்கிடாயை
முட்டியை சரித்தபடி
முப்பது பூராயம் கேட்டு
அப்பதான் இறக்கியதில்
குப்பென்று மணம்
குடும்பமாய் வண்டு
சொர்க்கத்தை அடைந்து
சுழன்று மிதந்துவர
பக்கத்தில் நுரை
பாதிசெம்பு வரை
எட்டி எழும்பி வர
முட்டி எங்கேனும்
முழுதும் சிந்தாமல்
கெட்டியாய் பிடித்து
கிடங்கு பாத்து நடந்து
தட்டிப்படலை திறந்து
தையிர் நிறத்திலதில்
ஊதி ஒதுக்கி
உயிர் வண்டினையும்
எழுப்பிக் கலைத்து
ஊற்றி அப்பம் பொங்க
ஏற்ற தென்று மட்டும்
ஏதோ முடிவு காண
மீண்டும் மீண்டும் அப்பம்
பிறகும் தோப்புள் பயணம்
வாண்டு கொஞ்சம் வளர
வாயில் கொஞ்சம் தொட்டு
வரும் வழியில் நக்கி
மெல்ல மெல்ல கிறக்கம்
மேலுமொரு மயக்கம்
இல்லை மேலே சொர்க்கம்
என்றும் ஒரு குதர்க்கம்
அன்று தொட்ட கள்ளு
கன்று வளர்ந்து காளை
என்று மூர்க்கமாகி
வந்த அந்த முத்தன்
வாழ்க்கை துணைவியான
மஞ்சு என அழைக்கும்
மங்கை பார்வையறிந்து
கள்ளப்பூனைப் போல
கடப்பை திறந்து முத்தர்
உள்ளொழுங்கை விட்டு
ஓடிப்போயங்கு
நிண்டு நிலையில் ஒண்டை
உறிஞ்சி முடித்துவிட்டு
ஓடுப்பட்டு வந்து
ஒன்றுமறியாதவர் போல்
என்ன இரவு பிட்டோ
என்று கதையை தொடங்க
மண்டிவிட்டு வந்து
மசிந்தும் முத்தர் தனத்தை
ஒண்டும் அறியாள் போல்
ஓரக்கண்ணால் பாத்து
சாடை மாடையாக
சட்டியோடும் தனக
ஒத்தை பனங்கள்ளு
உறிஞ்சி வந்த கதை
எப்படித்தான் அறிவாளே
என்று மூலைக்குள்
முத்தர் சாய்மனையில்
அப்பத்துக்கெனத் தொடங்கி
ஆரம்பித்த இப்பயணம்
பூநகரி பாதையிலே
போகையிலும் தானாக
காலாறும் சாட்டிலே
கரையிலே மெல்ல நின்று
மொட்டை கறுப்பனுக்குள்
முட்டிகளை தேடி
முன்னேறும் கண்கள்
எப்படியென்றாலும்
எவரைப்பிடித்தேனும்
எடுத்தொன்று இரண்டை
இழுத்துவிட்டே கடக்கும்
கறுவல் தங்கராசை
காணப் போவதற்கும்
வன்னேரிக்கள்ளின்
வாயிதம்தான் காரணம்
பின்னேரக்கையாக
பிளேன்ரியை குடிக்காமல்
என்னவோ பன்னங்கண்டி
எட்டேக்கர் நீர் பாய்ச்ச
இவ்வளவு அவசரமோ
என்றில்லை காரணமாம்
அங்கால பக்கத்தில்
ஆறூரின் கள்ளுவரும்
நன்றாக இருந்து
நாற நாற மீனோடு
கொண்டாடிக் குடிக்க
ஒரு கோப்பிறேசன் உண்டு
என்றாலும்
கண்டாவளை கள்ளு
கண கணப்பு என்றும்
காறியும் துப்புவார் முத்தர்
அப்போது ஏத்தத்தில்
பெண்டாட்டிக்கும்
ஒரு கோல் எடுப்பார்
என்ன பிட்டோ என்று
இங்கிருந்து இவர்
இல்லை பிறியாணி
அங்கிருந்து அவ
எட்டு மணியாச்சு
இடைவிடாது அவா
அத்தோடு
கட்டாக்கிவிடுவர் இவர்
அப்பத்துக்கு புளிக்க
அடிக்கடி மம்மலுக்குள்
அன்று
முத்தருக்கு கிடைத்த வாய்ப்பில்
புத்துவெட்டுவான் போனாலும்
புளியங்கூடல் போனாலும்
ஏன் பொறினுக்கு வந்தாலும்
பத்தைக்கு நடுவில்
பனையில்
முட்டிகள் தேடும் முத்தருக்கு
பத்து நாளாய் இப்ப
படலை திறக்க முடியா
பயம் தரும் கொரானாவால்
என்னவோ வாய்
ஏதோ ஒரு மாதிரி
இப்படியே போனால்
ஏலாக் கட்டத்தில்
முற்றத்தில் நிற்கும் பனையில்
முக்கி தக்கி ஏறி
ஒரு கால் என்றாலும்
கசிய வைப்பார் முத்தர்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...