Wednesday, April 15, 2020

என்னிடம் ஒரு குளோரோ குயின்-பொன்.காந்தன்,



மீண்டும் அந்த குளோரோ குயின் என்ற வார்த்தை அடிக்கடி காதுகளில் விழுகின்றது.இப்போது அதை தமக்கு தரவேண்டும் என இந்தியாவிடம் கேட்கின்றது அமெரிக்கா.உலகத்தில் உயிர்களை அள்ளை கொள்ளையாக தின்று கொண்டிருக்கும் கொள்ளை நோய்க்காக குளோரோகுயின் பேசப்படுகின்றது.எனக்கு இப்போது குளோரோ குயின் எனது கடந்த காலமொன்றை மீட்டுவதற்காக தேவைப்படுகின்றது.கசப்பான விழுங்கினால் ஆளை ஒரு உலுப்பு உலுப்பும் அந்த மாத்திரையில் ஒன்றை எடுத்து அமெரிக்காவுக்கு தெரியாமல் விழுங்கிவிட்டு புளுதியும் பற்றைகளும் நிறைந்த தெருவில் அக்கராயன் நோக்கி பயணிக்கிறேன்.எனது லுமாலா துவிச்சக்கரவண்டி நினைவினில் ஒரு தேவலோக புரவிபோல அழகாக இருக்கின்றது.நன்றி குளோரோகுயின். அதன் சக்கரங்கள் எனது அகதி வாழ்க்கையின் இன்னொரு திக் விஜயத்தில் பதினெட்டாம் போர் பழைய முறிகண்டி மாங்குளம் வடகாடு மல்லாவி துணுக்காய் தென்னியன்குளம் கோட்டை கட்டியகுளம் எட்டாம் கட்டை ஆனைவிழுந்தான் ஜெயபுரம் வரையும் அப்பாலும் அக்கராயனிலும் அத்தனை குச்சொழுங்கைகளிலும் ஒடிய கதையில் எனது ஊர் கிளிநொச்சியை இழந்த போன கதையிருந்தது.
இப்போது நினைத்துப்பார்த்தால் அக்கராயன் எனும் குறுநிலத்தில் நாமெல்லோரும் ஒரு வகையில் மன்னர்களாக இருந்தோம்.அப்போது எங்களுக்கு புளுதியின் மைந்தர்கள் என்றும் ஒரு பெயர் இருந்தது.அந்த குறுநிலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும் கிளிநொச்சியும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.பலதை வெல்ல போர் செய்தோம் பட்டிணியை நோயை சோர்வை கண்ணீரை பிரிவை இழப்புக்களை எல்லாம் வெல்லப்போர் செய்தோம்.எங்களிடம் மனோபலம் எனும் எதிர்ப்பு சக்தி நிறையவே இருந்தது.நான் இருபத்தொரு இருபத்திரண்டு வயது இளைஞன்.காளை என்றுஎழுதிக்கொள்கின்றேன் என்னை.காட்டோரங்களிலும் ஆற்றங்கரைகளிலும் வயலோரங்களிலும் குடில்கள் அமைத்து சுவர்களுக்கு பதிலாய் சேலை சுற்றிவிட்டு ஒரு வாழ்வின் புதிய முகவரியை அறிமுகம் செய்த எங்களை மலேரியாவும் விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.
சகிப்புத்தன்மை மிக்க போர்காலத்துக்கு எம்மை புடமிட்டுக்கொண்டிருந்தோம்.எங்களது எல்லை குறுகியதாய் இருந்தது.கையில் செல்பேசி இல்லை.வெளிச்சத்துக்கு குப்பி விளக்கை தவிர வேறொன்றுமில்லை.இன்றைக்கு எம்மிடம் இருக்கின்ற ஏராளம் அக்கராயன் வாழ்க்கையில் கோட்டை கட்டிய குள குறும் பயணங்களில் காடுகளை கடந்து மேடுகளை கடந்து வன்னியின் கிழக்குக்கான நெடும்பயணங்களில் இருக்கவில்லை.ஒரு முடக்கத்துக்கான அதன் பிறகான வீச்சான பயணத்திற்காக காலம் என்னையும் என் இன மக்களையும் என்றோ தயார் செய்ததாகவே உணர்கின்றேன்.காற்றடித்தால் கண்ணுக்குள்ளும் நாசிக்குள்ளும் தெருப்புளுதி கொட்டி நிரம்பும் போது எப்படி எல்லாம் அதை சகித்தோம் கடந்தோம்.ஒரு நிலப்போரில் மரணங்கள் காயங்கள் கடினமான செய்திகள் தோல்விகள் பாடங்கள் எனவும் எமது வாழ்க்கையை காலம் எப்படியெல்லாம் தகவமைக்க அக்கராயன் எனும் குறுநிலத்தை தெரிவு செய்திருந்தது.இன்றைக்கு கொரானாவின் போது முடக்கம் என்றும் லொக் டவுண் என்றும் பேசப்படும் ஒரு வகையான அர்த்தகாலத்தில் உணர்வு காலத்தில் நாம் ஏற்கனவே பல தடவை வாழ்ந்துவிட்டோம்.
இன்றைக்கு ஒரு லொக்டவுணுக்குள் என்ன செய்கின்றோம்.நேற்று எதைச் செய்தோமா இன்றும் அதை செய்கின்றோம்.ஒரு காலத்தில் அக்கராயனின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தினமும் என்ன நடக்குமோ அதுபோலவே இன்று உலகின் வீடுகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரே மாதிரியான நாள்கள் வார்த்தைகள் காட்சிகள்.காலைக்கடனை முடிக்க கருக்கலுக்குள் கரும்புத் தோட்டப்பக்கமாய் வயல் வெளிப்பக்கமாய் காட்டுப்பக்கமாக முகங்கள் தெரிவதற்குள் போக வேண்டியிருந்தது.அதற்காக தினமும் தூக்கத்திலும் பக்கத்தில் ஒரு தண்ணீர் போத்தலோடு தூங்கவேண்டியிருந்தது.பிறகு குளத்திலோ தொலைவில் நிறைய நீர் இருக்கும் பொதுக்கிணற்றில் குளிக்க வேண்டும்.அடுத்து முனியாண்டியிலோ அனுசிலோ ரேணுகாவிலோ கையில் உள்ள சில்லறைக்கு சாப்பாடு பிறகு ஸ்கந்தபுரம் முருகன் கோவிலுக்கு அருகில் இருந்த படிப்பகத்தில் நின்ற நிழல் மரத்தின் கீழ் நிறைய நேரம் அப்படியே குந்தியிருப்பது.அப்போது சிலவேளையில் கவிதைகள் வந்தது.இப்போது போல முகநூல் கிடையாது.குப்பி விளக்கில் இருந்து பகல் வந்த கவிதையை எழுதுவது.பிறகு அதை கொண்டு திரிந்து பத்திரிகை ஒன்றில் வருவதற்காக வாய்ப்பை தேடுவது.இப்படித்தான் ஒரு நாளாந்தம் திரும்ப திரும்ப இருந்தது.
குளோரோ குயின் ஒரு மருந்தா என்று கேட்டால் இல்லை.வன்னியின் ஒரு காலத்தின் சிறுகதைகளின் பகைப்புலமாக கவிதைகளின் கருவாக இருந்தது.மலேரியாவின் பெரும் வதையில் இருந்து மீள இந்த குளோரோ குயின் கடவுளைப்போல அறிமுகமாகியது.இத்தியடியில் ஒரு நாள் கொலரா விழிப்புணர்வு நாடகமொன்றை தெருவெளிக்கலைஞர்கள் போட்டார்கள்.போய்ப்பார்த்தோம்.கொலராவை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டுமென ஒரு நடிகர் கேட்பார் அதற்கு இன்னொருவர் என்ன செய்யிறது ஒரிடத்தில் இருக்காமல் அரக்கி அரக்கி இருக்கவேணும் என்றார்.இதுதான் அன்றைய பொழுதுகளில் நாம் விழுந்து விழுந்து சிரித்த நகைச்சுவை.மருந்துகள் வரத்தில்லாத பொருளாதார தடை நிலவிய வன்னிப்போர்காலத்து ஒரு வகையான லொக் டவுணை வெல்வதில் தெருவெளிக்கலைஞர்களும் தேய்ந்தார்கள்.இன்றைக்கு கொரானாவுக்காக பல துறை தொண்டர்கள் இரவு பகலாய் பாடுபடுவது போல.முடங்கிக் கிடக்கும் வாழ்க்கையை வெல்வது எங்கள் கையில்தான் உள்ளது என்பதை காலம் எமக்கு கற்பிக்க ஆரம்பித்து நெடுங்காலம்.
ஒரு முடக்கப்பட்ட நகரத்தில் நிலத்தில் எப்படி எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தலாம் என்பதிலும் இன்றையை விட தசாப்தங்களுக்கு முன்பு சுறுசுறுப்பாய் நம்பிக்கையாய் இதுவும் கடந்துபோகும் என்பதிலும் தெளிவாய் வாழ்ந்தோம்.புளுதி மண்டிய தெருவில் வன்னேரிக்கும் அம்பலபெருமாளுக்குமாய் காதலர்கள் கைகோர்த்து திரிந்தனர்.மரங்களுக்கு கீழ் மகாவித்தியாலயங்கள் கலவன் பாடசாலைகள் அழகாய் இருந்தன.அரங்குகள் அடிக்கடி திறந்தன சதங்கை ஒலிகள் ஓயாமல் ஒலித்தன.போர்ப்பறைகளும் முழங்கின.இலக்கிய விருட்சங்களும் முளைகளும் ஒன்றாய் அடிக்கடி கூடின பேசின.படைக்கப்பட்டன பல காவியங்கள்.ஒரு குறுநிலத்தில் நாம் எல்லோரும் ஒரு மன்னராய் வாழ்வதாய் உணர்ந்தோம்.அன்று நிரம்பிய புளுதி நாசியில் இன்றுவரை கரகரத்தாலும் ஒன்று மட்டும் உண்மை.உள்ளே ஒரு திடத்தை ஊரையிழந்துபோன தடங்கள் எமக்கு தந்து வைத்தன.
யானைகள மேய்ந்து கொண்டிருந்தன.சர்ப்பங்கள் நெளிந்துகொண்டிருந்தன.காட்டுப்பூனை வீதியை கடந்தது.முதலைகள் அணைகளில் தூங்கின.சுடலைகளில் கொள்ளிகள் அணையாதிருந்தன.புளுதி நிரம்பியிருந்தன வெயில் வாட்டியது.மழையும் கொட்டோ கொட்டென்று கொட்டியது.படுக்கை நனைந்தது.குழந்தைகள் அழுதன.குளிர்விறைத்தது.விசம் தீண்டியது.ஒற்றையடிப்பாதையில் முட்கள் முகத்திலும் கீறின.சேற்றில் கால்கள் புதைந்தன.தாகமெடுத்தது நீர் இல்லை.உறவுகள் வீழ்ந்தன குருதி நெடில் சூழந்திருந்தன உடல்கள் விதைக்கப்பட்டன போர் சூழ்ந்திருந்தது.பிணங்கள் சூழ்ந்து கிடந்தன உறவுகள் கட்டி அழவில்லை.அதற்கு இறுதிக்கிரியைகளும் இல்லை.கடந்தோம் பயணித்தோம் இன்றும் இருக்கின்றோம்.இதையும் கடப்போம்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...