Wednesday, April 15, 2020

பேமாசாப்-பொன்.காந்தன்,


தினமும் சவரம் செய்துவிட்டு முகத்தை கண்ணாடியில் பார்த்து மகிழும் பழக்கம் இப்போது கொஞ்சம் என்னிடம் அருகிவிட்டது.அதற்காக ஏதும் வாழ்க்கையில் பிடிப்பற்று போய்விட்ட ஒருவிதமான துறவு நிலை என்று அர்த்தமல்ல.காலையில் முற்றத்தில் கொட்டிக்கிடக்கின்ற வேம்பம் இலைகள் பலா இலைகள் நேற்றைய பூக்கள் எல்லாவற்றோடும் சேர்த்து முற்றத்தை ரசிக்கின்ற குணம்தான் முகத்துக்கும்.எனது முகத்தின் மீது இது இரண்டாவது காதலின் காலம்.பதினாறு வயதில் மீசை அரும்புகின்றபோது என் முகத்தின் மீது எனக்கிருந்த காதலைப்போல என் காதலிக்கும் இருந்திருக்கமுடியாது.என் முகம் எப்படி இருக்கவேண்டுமென்ற கனவுகளுடன் தலையை கோதிவிட்டு வெகு நேரமாய் உதடுகளை பார்த்து கன்னங்களை வருடிவிட்டு எனது ஒரு காலம் இருந்திருக்கின்றது.இப்போதும் அப்படித்தான் இரண்டாம் காலமாக இருக்கலாம்.இப்போது நான் சொல்ல வந்தது எனது முகம் பற்றிய சொல்லி முடிக்க முடியாத கதைகளை அல்ல.சவரம் செய்வதில் இருந்து ஒரு சிறிய பயணம்.
அதுதான் முதன் நான் சொன்னதைபோல வாரத்துக்கு ஒரு முறை அல்லது சில வேளை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை எனக்கு பிடித்தமான அல்லது என் நரையும் கறுப்புமாக அடர்ந்திருக்கும் உரோமங்களை நீர் தெளித்து வருடிவிட்டு சவரக்களிம்பை லாவகமாக தடவும் சிகை அலங்கார வாடிக்கைக்காரரிடம் போகிறேன்.என்னுடைய முகத்தை பற்றி அதிகம் தெரிந்தவர்களில் நானொன்று மற்றது அவரொன்று சவரம் செய்யாத முகத்துக்குள் மறைந்திருக்கும் முத்தக்கதைகளை பற்றி இங்கே நான் பேசவில்லை.சவரம் செய்யப்போய் இருக்கையில் அமர்ந்து பெரிய கண்ணாடியில் என்னை நான் பார்த்துக்கொண்டே இரசிப்பதற்கும் என்னுடைய தோற்றம் எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றது என்பதை பற்றியெல்லாம் சில கணநேரத்துள் வாழ்வின் யதார்த்தத்தை உணரமுடியும் என்றாலும் எனது எண்ணங்கள் கைத்தொலைபேசியை சுற்றியும் தன் முடியை சீர் செய்ய வந்து அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் இன்றைய தலைமுறை பதினைந்து பதினாறு பதினேழுகள் முடிவெட்டுவதற்கு முன் முடிவெட்டுகிறவருக்கு சொல்லும் நாகரிகக் கதையை கேட்பதிலும் அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அந்தப்பெரிய கண்ணாடியில் என் முகத்தில் எந்த சலமும் இல்லாமல் என்னோடு நான் பேசாமல் இருப்பதிலும் கரைகின்றது.
முதன் முதலாய் சவரக்கடைக்குப் போய் வந்த போது என்னோடு ஒட்டி வந்த வாசனைத்தைல வாசம் இப்போதும் சவரம் செய்தபின் தடவுகின்ற வாசனைத்தைலத்தின் வழி நினைவுகளை கிளப்புகின்றது.இப்போது சவரத்துக்காக அமர்;ந்த பின் புதிதாய் ஒரு பிளேற் எடுத்து முறித்து கத்திக்குள் பொருத்துவதை பற்றியெல்லாம் மனம் குத்திட்டு நிற்பதில்லை.ஆனால் சிறுவயதில் எனக்கு இந்த புதிய பிளேற் மீது ஒரு தீராக்காதல் இருந்தது.அது எப்படி வந்தது என்றெல்லாம் அலைந்து பார்த்தேன்.என் தந்தையார் தினமும் காலையில் சவரம் செய்து குளிக்கும் பழக்க முடிடையவர்.அவர் ஒரு சேவிங் செற் வைத்திருத்திருந்தார் அதன் சிறிய கைப்பிடி வெள்ளிநிறத்தில் மின்னும்.அதற்கு சிறிய சில்வர் பெட்டி இருந்தது.காலையில் அந்த பெட்டியை ஆராய்வதற்கான கால அவகாசம் இருப்பதில்லை ஏனெனில் நானும் பள்ளிக்குச்செல்ல வேண்டியிருந்தது.அநேகமாக பள்ளியிலும் புத்தக இடுக்குகளுக்குள் ஏதாவது இடுக்குகளுக்குள் பிளேற்றோடு வந்து பெருமையடிக்கின்ற சகபாடிகள் இருந்தார்கள்.பிளேற் பென்சில் சீவுவதற்குத்தான்.அதைவிடவும் ஏதாவது கொய்யாக்காய் மாங்காயை கடதாசியை அந்த பளபளக்கும் பிளேற்றால் சீவி சாகசம் காட்டுகின்ற நண்பர்களால் எனக்கும் அப்பாவின் சேவிங்செற் மீது காதல் அதிகரித்துக்கொண்டே போனது.
நானும் ஒரு பிளேற் வைத்திருக்க நினைத்தேன்.ஒரு நாள் அப்போது ஆறு ஏழு வயதிருக்கும் காற்சட்டை பைக்குள் போட்ட நெல்லிக்காயை எடுக்க ஆவலோடு கைநுழைத்தேன்.அந்தோ என் கையில் இரத்தம் என் நடுவிரலில் ஒரு வெட்டுக்காயம்.அநேகமாக என்னில் நான் கண்ட முதல் குருதி.பயந்துபோனேன்.விரலே போய்விட்டமாதிரி ஏன் உயிரே போய்விடும் என்ற மாதிரி அம்மா கோப்பித்தூள் வைத்து அப்பாவின் பழைய வேட்டியில் சிறு துண்டு கிழித்து கட்டிவிட்டார்.கோப்பித்தூள் கோப்பித்தூள்வாசம் சூடான ஒரு கோப்பி என்ற கதையில் விரலுக்கு கட்டப்பட்ட கோப்பித்தூளும் உண்டு.ஆனாலும் இங்கே இப்போது பிளேற்தான் கதாநாயகன்.நாயகி என்றும் என்றும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்குத் தெரிந்த மனதுக்குப்பாடமான ஒரு பிளேற்றின் பெயர் பேமாசாப் இது அடிக்கடி அப்பாவின் வாயில் இருந்து எனக்கும் பழக்கமானது.சில வேளை அப்பா சவரம் செய்ய காலையில் ஆயத்தம் செய்யும்போது பிளேற் மொட்டையாகிவிட்டது என்று கிணற்றடியில் குரல்வரும்.அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தாலும் புதிய பேமாசாப் வாங்க சில்லறைகள் தந்து கடைக்கு அனுப்புவார்.அதை வாங்கி வரும்போது அதன் மேலாடையை நீக்கி இரசிப்பேன் உள்ளேயும் வெள்ளையாய் அழகிய பெண்ணின் இரவு ஆடைபோல அந்த உள்ளுறையையும் இரசித்தபடியே வாங்கிவருவேன்.
பின்னொரு நாள்.அப்பாவின் கிணற்றடியில் கொழுவியிருந்த கண்ணாடியை பார்த்தேன் எனக்கு பதினாறு கடந்த பதினேழு வயது.அரும்பு மீசை கொஞ்சம் தடித்திருந்தது.கன்னங்களிலும் தாடையிலும் ஆங்காங்கு அரும்பியிருந்தன உரோமங்கள்.ஆனாலும் அந்த அழகை ஒரு பேமாசாப்பால் அப்பாவை போல சேவிங் செற்றால் வழித்து பார்க்க ஆசை தோன்றியது.ஆங்காங்கு சில சிராய்ப்புக்கள்.ஆனாலும் அந்த முதல் சவரமும் பேமாசாப் பிளேற்றும் சில பாடங்களை கற்றுத்தந்தன.அந்த முதல் சவரத்தின் பின் அந்தக் கன்னங்களை வருடிப்பார்த்தேன்.முதல் முத்தங்கள் அற்றதாயிருந்தது.துயரங்கள் அற்ற புன்னகைக்காய் காத்திருந்தது.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...