Wednesday, April 15, 2020

மோகினியுடன் இரவும் தாவணியை மறந்த கவிதையும்-பொன்.காந்தன்,


சாமம் கடந்த பொழுதில் ஒரு சரசரப்பு
மோகினியாய் இருக்குமோ
சல்சல்லென்று எந்த சத்தமும் இல்லை
சன்னலை கடந்த ஒரு மல்லிகை மணம் கூட
மனசை வருடவில்லை
பிறகு எப்படி
வெறும் பிரமைதானெனும் போது
பேரொளியொன்று தோன்றி பெண்ணெனவானது
இதுபோதாதா
என் கவிதையை தொடங்க
விடிய விடிய எழுதலாம் அவளைப்பற்றி
கிழடு பற்றிவிட்டது
கிண்டி எறிய நினைத்த
மல்லிகையில் இருந்தும் மலர்களின்று
ஒரு மழைபோல அருகிலிருந்தாள்
வாரி இழுத்த கூந்தலை
மேவி முடிந்த அந்த மின்னலை
கண்ணெதிரே இருத்தி
காவியத்தின் மீதியை முடித்துவிடும் மோகமிது
தாவணியுடன் அறிமுகமாகாத
தாய் வழியின் முகவரியை
வெற்றிடங்கள் விட்டு விட்டு எழுத விருப்பமில்லை
அவள் விஸ்வரூபத்தை நன்கறிவேன்
ஒருகளித்து தூங்கும் உற்றவளை
மட்டைத் தேள் என்று சொல்லி
மருட்டி முடியாதென்பது
வந்திருக்கும் வைர மோகினியிடம் உணர்ந்ததுதான்
சில காலங்களுக்கு முன்
பார்க்குமிடமெல்லாம் நிறைந்திருந்தாள்
நான் கண்ணுறங்கி எழுந்தபோதெல்லாம்
கால் மாட்டில் இருந்து
என் காலையை அவள் இரசித்தாள்
விடிவெள்ளி
ஏழெட்டுப் பனை கடந்தல்ல
நாள் முழுக்க
ஊர் முழுக்க பூத்திருந்தது
பேர் முழுக்க ஒரு இளவரசிகளின் வாசம்
பெரிய நிலவே
என் பேச்சுத்துணைக்கும் பெருமைக்குமாயிருந்தது
ஒரு நாள்
திணைபுலவிலாவென்று தேடிப்பார்த்தேன்
இந்தத் தேவதை அங்கில்லை
ஓடக்கரையிலாவென்று ஓடிப்போனேன்
அங்குமில்லை
சோலையிலா சொக்கட்டான் வெட்டுமிடத்திலா
எங்குமில்லாத
என் அகல்விழியை
பொங்கும் அலைகளுக்கு நடுவில்
பொறுமையிழந்த பூகம்பத்துக்கு நடுவில்
மின்னல் முளைக்கும் இடத்தில் கண்டேன்
மீட்டினேன் வீணையில் புதிய இராகத்தை
விறலியர் அறியாப் பெண்ணை
பாடிப்பரவசமானேன்
பரம்பரையின் கொடியில்
பச்சை இருப்பதை கண்டு உச்சரிக்க முடியாத
உச்சி குளிரும் வார்த்தையொன்றில்
இந்த வனிதையை கண்டு ஓர் நாள் சொக்கிப்போனேன்
அப்போதெல்லாம்
இவள் மேனியில் மச்சங்கள் தேடாத கவிஞன் நான்
மார்புக்கு கீழும்
இடையிலும்
விழுப்புண் பட்ட வீர காவியத்தை
பாடுவதற்காக மட்டும் அவள் பாதம்வரை இரசித்தேன்
தாவணியை மறந்து கிடந்தேன்
தழுவுவதற்கு கடைசியாய்
களத்தில் விட்ட மூச்சுக்காற்றை மட்டும் தந்து சென்றாள்
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
இதுவும் ஒரு ஈழ மோகினியின் இமைகொட்டா இரவு
விடிய விடிய எழுதலாம்
அவள் பாதங்களை வருடி
பட்டிருக்கும் காயங்களை தழுவி

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...