Wednesday, April 15, 2020

முத்தக் கனவும் கூட ஏழெட்டு நாளாயில்லை செத்தவீடானது பூமி-பொன்.காந்தன்,


பத்து நாளாய்
கட்டியணைப்பது கனவில் கூட வருவதில்லை
முத்தக் கனவும்
ஏழெட்டு நாளாய் எட்டிப்பார்க்கவில்லை
செத்தவீடாய் கிடக்கிறது பூமி
முட்டைப்பொரியலும் பிட்டும் குளைத்து
ஊட்டிவிடுகின்றவள்
கொக்கத்தடியில் கட்டி சாப்பாட்டை தந்துவிட்டு
எட்டவாய் நிற்கிறாள்
முந்தானை வாசத்தை
மூக்கு மறந்தே போய்விடும் போல
ஓட்டி உரசி இருக்காவிட்டால்
தொற்றிவிடும் வைரஸ் ஒன்று
தோன்றாதா என்றேக்கமாம் என்கிறது
இக்காலக் கிறுக்கொன்று
பரநாசமாய் போவாய் கொரோனா
கவிஞனின் சாபம்
உன்னை கருக்கி வீழ்த்தட்டும்
இத்தாலி ஸ்பெயின் சீனா அமெரிக்கா என்று
கொள்ளை நோய் குடிக்கிறது உயிர்களை
நாமெல்லோரும்
பூமியின் புத்திரர்கள் எனில்
வெள்ளையென்ன கறுப்பென்ன
செத்துக்கொண்டிருப்பது
அக்காளும் தம்பியும் சித்தியும் மாமனும்தானே
ஒப்பாரி வைக்காமல்
எப்படி இருக்கமுடியும் நான்
ஒன்றாய்த்தான் போராடவேண்டும்
இந்த உயிர்கொல்லிக்கு எதிராக
கைகூப்புவதொன்றும் எங்களுக்கு கஸ்டமில்லை
வழி வந்த பண்பாடு
இப்போது அது ஒரு அடிப்படை தடுப்பு மருந்து
செத்தவீடு போய்வந்தால்
சேலையோடேயே தலையில் அள்ளிவார்ப்பதும்
வாசலில் ஒரு வாளி வைத்து
கால் அலசுவதும்
நீளமான நெடிய குணம் எங்களது
சுற்றுநிருபம் அடித்து அதையின்று
கடைப்பிடி என்கிறது உலகம் கட்டாயமாய்
முன்னோர் முதுசமாய் தந்த
ஏகப்பட்டவை
எல்லா வைரசுக்கும் இயமனானவை
நாம்தான் வெட்கம் நாகரிகம் என்று
வெளியில்
குப்பையில் போட்டுவிட்டு
இப்போது கொரோனாவுக்காய் கிளறுகிறோம்
காட்டுக்கறுப்பு பட்டாலுமென
பாட்டன் வாய்க்கு வந்தபடி சொன்னதுக்குள்
ஏதோ நோய்க்கு மருந்துண்டு
ஏலியனை தேடும் அளவில்
ஏகப்பட்ட வளர்ச்சி இறுமாப்பு
ஆனால் பாவபட்டு பதறுகின்றது பூமி கொரானாவால்
நட்டு கெட்டு விட்டு கிளைபரப்பி
பூத்துக்குலுங்கும் என கனவு கண்டதெல்லாம்
பட்டுப்போகிறது பசும் தளிராயே கொரானாவால்
வட்டுவாகலில் என் சொந்தங்கள்
செத்துப்போகும் போதும்
கசியாதவர்கள்
இந்தக் கொள்ளை நோயால் மடிந்தாலும்
என் செத்தவீடு போலத்தான் அழுவேன்
ஏனெனில்
இந்த உலகத்தை காதலிக்கிறேன் நான்
உயிரின் வலியும் கனதியும்
உலகத்தவரை விட
என் ஊருக்கு கொஞ்சம் அதிகம் தெரியும்
எல்லாவற்றுக்கும் உயர்ந்த சக்தியே
இந்த மானுட உயிர்களை காப்பாற்று
மானுட உயிர் மறுபடியும் வராது
ஏதோ தெரியாமல்
ஏகப்பட்ட தவறுகளை மானுடங்கள் செய்துவிட்டன
மன்னித்து
இந்த அழகிய பூமியை
இனியாவது அன்புடன் அனுபவித்து முடிக்கட்டும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...