Wednesday, April 15, 2020

ஊசிலியின் காதல்-பொன்.காந்தன்,


ஐ ஆம் கத்தரிக்காய் என்ற தலைப்பில்
கத்தரிக்காய் சுயசரிதத்தை
எழுத நினைத்தேன்
ஏதோ என்னால் முடிந்த சொல்லடுக்குகளில்
ஐ ஆம் கத்தரிக்காய்
அடிக்கடி நிறம்மாறா
அதே குணம்தான்
சண்டைக்காலத்திலும்
சாப்பாட்டுக்கென் அர்ப்பணிப்பை
சொல்லத் தேவையில்லை
வெண்டைகாயோடு சேர்ந்து
விரதத்தை அலங்கரித்தேன்
வெந்தயக்குளம்புக்கும்
ஒரு விதத்தில் உதவினேன்
சண்டிக்கட்டோடு சாறி
சாணகமும் எருவும் இட்டு
குண்டாயும் கொழுகொழுப்பாயும்
சந்தைக்கும் வந்தேன்
முந்திக்கொண்டு வந்து
முத்தலோவென கேட்டு
மூள் பார்த்து
முத்துக்குமார் மனுசி
முகத்தை பார்க்கையில்
கந்தையர் வீட்டானென்ற
கதையை கேட்டவுடன்
கண்ணை மூடிக்கொண்டு
கை பையை விரித்து
ஐயர் தானத்துக்கும்
அடுத்த நாள் கறிக்கும்
பிட்டுக்கொரு பொரியலுக்கும்
போடு தம்பி இரண்டுகிலோ
என்று வாங்கிப்போன
என்னினிய காலத்தை
இழந்து வாடுங்கால்
அங்கங்கு தொந்தி
ஆடிச் சளிந்துவிழ
மம்பட்டியொன்றை தூக்கி
மண்ணோடு மாயும்
யம்பர் வழுகிவிழும்
யாழ்ப்பாணத் தம்பி
அண்ணையென்று பெடியள்
அன்போடழைத்த
திண்ணைவரை எமக்கு
தெம்புதனை தந்து
விண்ணை உழுவதற்கும்
வித்தைகளை கண்ட
வேலுப்பிள்ளை மகன்
வீட்டுத் தோட்டத்திலும்
மாட்டாலும் உழுது
மானாவாரியிலும் விதைத்து
ஊட்டம் நிறைந்த பயிர்பச்சை
ஊருக்குள் செழித்ததால்
பொருண்மிய மேம்பாட்டு
பெடியனின் ஊடாக
கந்தையரை ஒரு நாள்
காட்டுக்குள் அழைத்து
வேளான் மன்னரெனும்
விருதை கொடுத்ததில்
ஓட்டை புளுக்குத்தல்
ஊனம் இல்லாமல்
சேட்டமாய் நின்ற
வாட்டமில்லாத என்
வாழ்க்கை பங்களிப்புமுண்டு
மூட்டைக்குள் கிடந்த
முன்னொரு நாள் கதையை
வீட்டை வளவையின்று
முடக்கிக் கொள்ளை நோய்
மோச வருத்தத்தில்
கூட்டை அடைத்து
கொஞ்சம் கீரை
கொச்சிக்காய் கொத்தமல்லி
கத்தரிக்காயென்று நட்டு
கூலியில்லாமல்
குசினிக்கு வருமென்று
அவதிப்படுகின்ற
அன்புக்குரிய தம்பி
கொஞ்சக்காலம் முன்
கொரோனா இல்லை
சந்தைக்குப் போனால்
கந்தையர் வீட்டானோவென்று
யாரும் கேட்பதுமில்லை
தம்புள்ளையிலிருந்து வரும்
தக்காளப்பழத்தில் மயங்கி
இன்னும் வேறெங்கோவிருந்து
வீங்கிங் கொழுத்து
விசங்களோடு வருவதில் கிறங்கி
தாங்கோ தாங்கோவென்று
வாங்கிக்கொண்டு போய்
வாழ்க்கை ஓட்டியதை
கத்தரிக்காய் நான்
கவலையுடன் பார்த்தேன்
இஞ்சினியர் டொக்டர் எக்கவுண்டன்
நீ என்ன வேலையோ
இன்றைக்கு நீ வளவில்
கன்றொன்றை நடக்காண
கந்தையருக்கும் இனியிங்கு
சந்தை வாய்ப்பு வந்து
எந்தை குலம் எழுச்சி கொள்ளட்டும்
இப்படி ஐஆம் கத்தரிக்காயின்
சுயசரிதத்தின் மறுபாதியை
எழுதாமல் இடையில் நிறுத்தி
ஊசிலியின் காதலைப்பற்றி எழுதுகிறேன்
ஓ உன் காதல் ஒன்றா இரண்டா
ஊருக்கே தெரிந்த லீலைகள்தானேயென்று
உங்கள் முணுமுணுப்பும்
என் காதில் விழாமலில்லை
ஊசிலி பற்றிய அடுத்த வரிகள்
அதை தகர்த்து விடும்
எனக்கு ஊசிலியின் சத்தத்தில் ஒரு காதல்
எங்கள் வீடடில் சிக்மா
பக்கத்து வீட்டில் றொபின்
அடுத்த குறுக்குத் தெருவில்
பரமாசாமி அண்ணன் வீட்டில் ஊசிலி
ராசய்யாஅண்ணை வீட்டில் ஒரு பிஎஸ்ஏ
இவை எல்லாமே
ஒரு காலத்தில் என்னை கவர்ந்தவை
அதாவது
வேலியடைப்புக் கிணற்றடியில்
ஒன்றுமில்லாமல்
வெக்கமின்ற குளிக்கும் வயசு
ஒரு ஆறேழு இருக்கும் என்று வையுங்கள்
உழுத தறைக்குள்
கொக்குகளும் மைனாக்களும் குவிந்துநின்று
மண் மண்வாசம் காற்றெலாம் பரவியிருக்க
புரண்டு புரண்டு கிடக்கும்
மண் கட்டிப்புருவங்களில்
தடக்கி விழும் தவழும் பருவம் வாய்த்த
ஒரு வேளான் நிலத்தின் குழந்தை நான்
இதை நம்பப்போகிறீர்களா
உண்மை அதுதான்
மண் கிணறு கயிறு உழண்டி
சிலபேர் கப்பி என்று சொல்வார்கள்
எனக்கு உழண்டி என்றுதான் பாடம்
மரமிதி
ஒரு ஓரத்தில் சிக்மா கம்பீரமாய்
அதன் அருகில்
கப்பிளீன் சாவி பிளக்சாவி
இழுக்கும் கயிறு
எல்லாம் கண் முன் வந்து போகின்றது
சிக்மாவின் காபறேற்றருக்கு
ஒரு மூடியில் விட்டு
நான் பெற்றோல் அடிக்க
குணத்தார் அவர்தான் என் அப்பா
ஒரு பலம் கொடுத்து இழுக்க
ஒரே இழுவைதான் சிக்மா தொடங்கிவிடும்
ஒரு இழுவைதான் சிக்மா என்பதில்
அப்பாவுக்கு ஒரு பெருமிதம்
மேடின் இங்கிலண்ட் என்று
அடிக்கடி சொல்லிக்கொள்வார்
இப்போது மேடின் கொரானா பற்றி
பேசித் துயர்படும் தலைமுறையிலும்
என் வாழ்வு கடக்கிறது
சில ஊர்களுக்கு இடையில்
மரப்பாலங்களில் கடப்பதுபோல
எப்போதாவது சிக்மாவுக்கு வருத்தமென்றால்
திருவையாறில் இருந்து ஒருவர் வருவார்
அவர் பெயர் மறந்து விட்டேன்
அல்லது பின் வீட்டில் இருந்து
விக்டர் வருவார்
சிக்மாவின் இறைப்பில்
மிளகாய்த் தோட்டமாய் இருந்தவளவு
பிறகு வாழைத்தோட்டமாய் மாறியது
வாய்க்கால்களில் நீர் பாய்வதும்
பாத்திகளில் நிரம்புவதும்
வாழைகள் பொத்தி விடுவதும்
குலைகளில் குருவிகள் கூடு கட்டி முட்டையிடுவதும்
நிலம் எப்போதும் குளிந்தே கிடப்பதும்
சனிச்சந்தைக்கும் புதன் சந்தைக்கும்
வண்டில் கார அப்புவின் வண்டில்
வாசலில் நிற்பதும்
கம்பல் கதலி மொந்தன் என ஏற்றி
லாம்பு வெளிச்சத்துடன் போவதும்
எகிப்திய மம்மிக்குள் கிடக்கும்
பிணம் போல
எனக்குள் உறங்கும்
ஒரு தோட்டக்காரனின் நினைவுகள்
ஒரு பெருநதி வரண்டதுபோல
எவ்வாறு எல்லாம் வற்றி வறண்டு
நதிக்கரை நாகரிகத்தின் புதல்வர்களான எமக்கு
எப்படி
ஒரு கத்தரியை வாழையை மிளகாயை நடுவது
ஒரு ஆச்சரியமாயும் புதினமாயும் ஆயிற்று
அந்த நதிக்கரை குளிர்மை பொருந்திய
நாகரிகத்தின்
இலைகள் மீதான தளிர்கள் மீதான
பூக்கள் மீதான கனிகள் மீதான காதலோடு
கடைசி வரையும் வாழ நினைத்தவர்களை
எனது ஊர்களிலும்
பேரூந்துப் பயணங்களின் போது
செம்மண் நிலத்தில் வெங்காயங்களுக்கு நடுவில்
பயற்றங் கொடிகளுக்கு இடையில்
ராச வள்ளிக்கொடிகளோடு
காண கிடைத்ததும் ஒரு வரமாயே இருந்து
பரமசாமி அண்ணனும் அப்படி ஒருவர்
அவர் வளவில் தான் ஊசிலி இருந்தது
சிறு வயதில் அவர் வீட்டுக்கு முன்னால் போகும்போது
ஊசிலியை பார்க்கவேண்டுமென ஆவல் தோன்றும்
பரமசாமி அண்ணன் சில வருசங்களுக்கு முன்பு
மரணமாகும்வரை
அவரின் உடல் ஒத்துழைக்கும் வரை
அவர் வளவில் ஏதோ பயிரோடு அவருக்கு தீராக் காதல் இருந்தது
நதிக்கரை மைந்தன் அவர்
ஒரு வேலிக்குள்
ஒரு பக்கத்தில் இளையதம்பி
இளைய தம்பி
அவருடைய ரேகைகளை
அவர் கைகளைவிடவும் மண்வெட்டி பிடியறியும்
மறுபக்கத்தில் எழில் வளவு
எழில் இப்போது ஒரு ஆசிரியை
உனக்கு நினைவிருக்கும்
உனது இரண்டு மூன்று வயசுகளில்
உங்கள் வளவு
மிளகாய்ச்செடிகளால் நிறைந்திருந்தது
அப்போதைய காலத்தில்
இரண்டு வளவுக்காரருக்கு
ஒரு வாக்குவாதம் தொடங்கினால்
அது உன் ஆடுகள்
கத்தரியை கடித்துவிட்டது என்றேதொடங்கும்
ஐம் கத்தரிக்காய்
நதிக்கரை மைந்தர்கள் தொலைந்த கதையைதான்
எழுத நினைக்கின்றது என நினைக்கின்றேன்
நதிக்கரை நாகரிகமொன்று
எனக்கு அருகாக மிக அழகாக இருந்த காலமொன்றிருந்தது
கனகராயன் நதியோரங்கள்
தளதளத்து நிரம்பும்
இரணை மடுவின் கிளைகளாய் பிரியும்
சிற்றாறுகள்
திருவையாறு மருதகர் பன்னங்கண்டி முரசுமோட்டை
பத்தாம் வாய்க்கால் கண்டாவளை
வட்டக்கச்சி என என தழுவும்போது
பின்னர் சங்ககாலத்தை இலக்கியத்தில் படிக்கும்போது
செய்யுள்களில் அனுபவித்த மருத நிலம்
நிசமாய்த் தோன்றக்கண்டேன்
திருவையாற்றின் நிலம் முழுக்க பயிர்களே
பயிர்களில் கிளிகள் பட்சிகள்
நடுவில் வெருளிப்பொம்மைகள்
ஆநிரைகளின் மணம்
அங்கு பயிர்களுக்கு நடுவில் இருக்கும்
சின்ன சின்ன குடிசைகளில் இருந்து
செம்மண் தெருவுக்கு வரும்
திருவையாற்றின் பேரழகிகள்
இரணை மடு நதிக்கரை நாகரிகம் எவ்வளவு பசுமையோ
அவ்வளவு பசுமை அவ்வூர் பருவ மங்கைகளும்
இவ்வாறு எழுதாவிட்டால்
திருவையாறுக்கு மிளகாய்ப்பழமோ
ஒரு கப்பல் வாழைக்குலையோ
வாங்க வரும் சாட்டில்
அம்மருத நில மங்கைகளை காண வந்த வாலிபர்கள்
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
இப்போது என் மீது கோபித்துக்கொள்வார்கள்
திருவையாறின் குடிசைகள் முரசுமோட்டையின் குடில்கள்
கண்டாவளையின் கொட்டில்கள்
இப்படி இரணைமடு நதிக்கரை நாகரிகத்தில்
கல்வீடுகள் முளைத்தது
முதலில் திரைகடல் ஓடி திரவியம் தேடி அல்ல
தினமும் அந்த நிலத்தின்
அந்த மருத நிலத்தின் மைந்தர்களின் வியர்வை
இந்த ஐ ஆம் கத்தரிக்காய்
இப்போது
போரிலும் இயற்கையாலும் இவ்வுலகைவிட்டு
இல்லாதுபோன நதிக்கரை
மைந்தர்களுக்காக
கண் கலங்கி தொடர்கிறது
ஒரு குளிர்மை பொருந்திய
பசும் நினைவைத்தந்தவர்கள் அவர்கள்
தம்புள்ளை காய் கறிக்கும்
கந்தையரின் கத்தரிக்காய்க்கும்
கதைகள் வேறு
கந்தையரின் கத்தரிக்காய்
நாம் நதிக்கரையின் மைந்தர்கள் என்பதை
மறந்த கதை கூறும்
அதுவோ மறக்க வைத்த கதையில் மகிழும்
எமது சுயத்தை இழந்த கதை
காலடியில் சப்பாத்தி முட்களாய்த் தைக்க
மண்வெட்டி பிடிப்பது
எம் வளவில் ஒரு பயற்றங்கொடி தோன்றுவது
ஆச்சரியமாய்த் தோன்றிற்று எமக்கு
ஊசிலிகளின் சத்தம் எட்டக்கேட்கும்
றொபினின் ஒலிகள் அயலில் கேட்கும்
என் பக்கத்தில் சிக்மா இறைத்துத் தள்ளும்
முன்னே ஈஸ்வரியக்கா வளவில் சோழன்
முளைத்துப் பொத்தி தள்ளும் தறுவாயில் நிற்க
ஒரு அந்திப்பொழுதில்
ஏஐ மகா தேவன் கிண்டலும் கிரந்தமுமாய் வந்து
எட்டத்தில் நின்று எல்லாப் பயிர்களையும் பார்ப்பார்
எல்லாவற்றையும்
ஒரு அரைகாற்சட்டையோடு வெறும்மேலோடு
பார்த்து ரசித்து குளிர்ந்த
ஐ ஆம் கத்தரிக்காயில்
ஏதோ ஏக்கத்தை இழப்பை
சுயத்தை எழுத நினைத்த காந்தன்
இங்கு
மிளகாய் நாதனை தவறவிட்டு
முடிவுக்கு வந்து விட்டேன்
அவரில்லாமலும் இதை முடிக்க முடியாது
ஒரு காலத்தில் மிளகாய்
தங்கப்பவுண் விலை
அது ஒரு கதை
அதில் பொருளாதார கொள்கை பற்றியும்
பேசவேண்டுமென்பதால்
இதை முடித்து கொள்கிறேன்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...