Wednesday, April 15, 2020

புதிய வரை படம்-பொன்.காந்தன்


எதுவுமே அற்று
பூமியின்
வெறிச்சோடிய சாலைகளுக்கு
எது அழகாயிருக்கும்
ஒரு பேரழகி
என்னை கடந்து
ஒரு புள்ளியாய் மறைவதை
இமைக்காமல் பார்க்கும்
ஒரு சாலையோர
காதல்விழிவரை
வைத்து அழகு பார்த்தேன்
கடைசியில்
கந்தசாமி கோயில்
பூங்காவனத் திருவிழாவில்
தெருநீளும்
மஞ்சள் பச்சை சிவப்பு
ரியூப் லைற்றுக்களால்
வெறிச்சோடிய சாலையை
சம்புக்காய்
வெடித்துப்பறக்கும்
பஞ்சுகளடர்ந்த
வாய்க்கால்கரை காடுகள் கடந்து
பார்த்துச் சோடிக்கிறேன்
காயாந்தடிகளில்
கட்டப்படும் வாழைகளும்
தோரணங்களும்
பூச்சிகள் வட்டமிடும்
மஞ்சள் வர்ண ரியூப்லைற்றில்
இருளின்மீது எழுதும்
மயக்கப்பொழுதினிடை
எலுமிச்சங் கனிகளாய் மின்னும்
எங்கள் ஊர் மேனகைகளால்
இச்சாலைகள்
சாபம் நீங்கியெழும்
இந்திரமாய் ஆகட்டும்
அம்மம்மா குழலும்
ஐஸ் குச்சியுமாய் திரியும்
சின்னஞ்சிறுசுகளை
சமிக்ஞை விளக்குகளை
பிடுங்கி எறிந்துவிட்டு
குளத்தடியாலும்
பிறகு ஆலமரச் சந்தியாலும்
சம்மந்தர் கடையடியாலும்
கடிநாய்
கதிரவேலர் வீட்டடியாலும்
கழிப்பு பூசணியின்
குங்குமம் மிரட்டமிரட்ட
அழைத்துச்சென்று
பூமியின் சாலைகளை
ஆசுவாசம் செய்கிறேன்
வெறிச்சோடிய
பூமியின் சாலைகளுக்கு
எது அழகாய் இருக்கும்
இன்று நேற்று
சிலவாரங்களாய்
மருத மர இலைகள்
கொட்டி கொட்டி மறைந்திருக்கும்
ஒரு அதிவேக சாலை
பூமியின் வரைபடத்தின்
புதிய அழகாய் தோன்றுமா
கந்தசாமி கோவில்
பூங்காவன திருவிழா
ரியூப் லைற்றின் மறுபிறவியாய்
எது நாளை
இச்சாலைகளில்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...