Sunday, January 12, 2020

மிச்சமும் தோடம்பழ இனிப்பும்-பொன்.காந்தன்,



நூற்றிதொண்ணூற்றொன்பது ரூபா தொண்ணூறு சத
கவர்ச்சியில் நானும்
இருநூறு ரூபா அலர்ஜியில்
அப்பாவுமாய்
கடந்து வந்த காலங்களை
அசைபோடும் போது
பத்து சத
இராசையா கடை தோடம்பழ இனிப்பின்
சுவையும் வாசமும்
தூக்கத்தை கலைத்து
கவிதை எழுத வைக்கும்
கனவு கன்னியாகும் என
ஒரு போதும் நான் நினைக்கவில்லை
என் பாதங்களுக்கு
முதல் முதலில்
மண்ணிறத்தில்
ஒரு செருப்பு தந்த
புதுவிதமான நடை
ஒரு புல்லரிப்பை
பிறகு
என் குதிக்காலை
மென் விரல்களால் வருடியபடி
உதிர்ந்த அழகிய வார்த்தைகளும்
வெல்லவில்லை என்றுதான்
எனக்கு தோன்றுகின்றது
மீசை அரும்பும் தருணத்தில்
ஒரு வாத்தியார்
நூற்றிதொண்ணூற்றொன்பது ரூபா
தொண்ணூறு சதம்
ஒரு விற்பனை தந்திரம் என்று
வகுப்பெடுத்து
பல ஆண்டு கழிந்திருந்தாலும்
இன்று
கடைக்காரர்கள்
எனக்கு பிடித்தமான
சாண்டில்சுக்காக
இரண்டாயிரத்து ஐநூறு சொன்னாலும்
எனது மனம்
இரண்டாயிரத்து நானூற்று தொண்ணூற்றொன்பது
தொண்ணூறு சத கவர்ச்சிக்குள்ளேயே
எல்லாவற்றிலும் தொலைகிறது
எல்லா கவர்ச்சிகளின் பின்னும்
எனக்கு ஒரு பத்துசதம்
எஞ்சுகின்றது என்பதுதான் உண்மை
இராசையா கடை
தோடம்பழ இனிப்பாய் சுவைத்தபடி
போய்க்கொண்டிருக்கிறேன்


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...