Wednesday, March 6, 2019

காஸ்மீரை உணர்தல்-பொன்.காந்தன்


காஸ்மீர் பற்றி
எதையோ எழுத சொல்லி
இரண்டு மூன்று நாட்களாய் 
என் மனம் தவிக்கிறது
எதை எழுதுவது என்பது பற்றி
எனக்குள்
ஒரு போர் நடந்தது
பலர்
கொல்லப்பட்டு கிடக்கிறார்கள்
அவர்கள் யார்
அதில் யார் தீவிர வாதிகள்
யார் தியாகிகள்
எனக்குள்
இரண்டாவது போரும் நடக்கிறது
எனது போரை
முடிவுக்கு கொண்டு வருவது
அவ்வளவு சாதாரணமானதல்ல
நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்
கடந்த காலத்தில்
யாருக்கெல்லாம் இடப்பட்டது
யாரெல்லாம் இட்டார்கள்
எனது தங்கையை
நான் புதைகுழியில் இட்டு
மண் போட்டு கொண்டிருக்கும் போது
அவளை பயங்கரவாதி என
அரச வானொலி
அறிவித்து கொண்டிருந்த அனுபவம்
எனக்கு உண்டு
பிறகு என் வீட்டில் மேல்
குண்டுகள் வீசப்பட்ட போது
மணிப்பூரை படித்து குறையில் இருந்த
புத்தகமும் எரிந்து விட்டது
மிகுதி மணிப்பூரை
நான் தெரிந்ததே ஆக வேண்டும்
மணிரத்தினத்தின்
ரோஜா படம் வந்த போது
ஒரு இரவு பார்த்து விட்டு
ரகுமானின்
சின்ன சின்னஆசை பாட்டை உச்சரித்தபடி
படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது
வயல் கரை வீட்டு சிறுமி
எறிகணைகள் விழுந்து இறந்து விட
அரசாங்கத்தை
கிழவிகள் ஒப்பாரியில்
திட்டி கொண்டிருந்தார்கள்
பிறகு அந்த ஒப்பாரியின் வரிகள்
என்னை பல இரவுகள்
தூங்க விடவில்லை
சின்ன வயதில் அம்மா
எதையெல்லாம் சாப்பிடவேண்டும்
எதையெல்லாம் பேசவேண்டும்
என சொல்லி தந்தார்
காதலி
எப்படி எல்லாம் உடுக்க வேண்டும்
எப்படி எல்லாம் சிரிக்கவேண்டும்
என பழக்க படுத்தினாள்
முள்ளி வாய்க்கால்
நான் யாருக்காகவெல்லாம்
அழவேண்டும்
யாருக்காகவெல்லாம் இரக்கப்படவேண்டும்
யாருக்காகவெல்லாம்
குரல் கொடுக்க வேண்டும் என
சொல்லி கொடுத்திருக்கிறது
என்னை நான்
ஒரு ஈழத்தவனாக
முழுமையாக உணரும் போது
காஸ்மீர் ரோஜாவை
ஒரு காஸ்மீரியன்
முழுமையாக அனுபவிக்கட்டும்
எனச் சொல்வேன்


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...