Sunday, December 2, 2018

நரை கோதிய நம் பிரம்மன்-பொன்.காந்தன்



தமிழ் நங்கைக்கு உடுத்தி உடுத்தி பார்க்கின்றேன்
ஒரு குறத்தியாய் கூட
என்னால் அலங்கரிக்க முடியவில்லை
செருகியும் வழுவியும் சேலை
யாரும் உருவி எடுக்க வசதியாய்
கட்டற்று கசங்கிக் கிடக்கிறது
அவளது இடையின் அழகை
இந்திர லோக சுந்தரிகளுக்குமில்லா
மார்பின் மதாளிப்பை
சீண்டினால் வரும் சீற்ற விழிகளை
விரல் தீண்டினால் எழும்
ஏழுலகை இழுத்து மயக்கும் முனகலை
எழுந்துவருமவள் தேன் குரலை
தெளிந்த தீட்சண்யத்தை
அச்சுப்பிசகாமல் அழகுபடுத்தி
இச்சை தோன்றும்படி
என் தெருவில் உலவவிட முடியாத
வெற்றுப் பயலாக இருக்கின்றேன்
கூட்டிவா புதுவையை
அகவை அவனுக்கு எழுபதாயினும் இருக்கட்;டும்
அவன் நடை கொஞ்சம் தளரினும் குறையில்லை
விறைத்த அந்த மண்டையனுக்குள் இருந்துவரும்
வற்றாத கவியூற்றை வழித்து அள்ளியெடுத்து
பூசிப்பூரிக்க வேண்டுமென்கின்றது காலம்
சிற்பத்தை செதுக்கும் செம்பவளே விரலே
செருக்கில் பூக்கும் தமிழின்
பொன்னெழில் பூங்காற்றே
கண்ணாடி சரி செய்து
கன்னம் முழுக்க பொங்கச் சிரித்து
முற்றிய முடிகள் நெற்றியில் விழ தட்டிதட்டி
கொட்டி முழக்கும் கடலே
கட்டியிழுத்து என்னையும் கவிதைக்குள் விழுத்திய
ஆண் ரதி ரம்பையே
பட்டிதொட்டியெல்லாம் பெய்து கொட்டிய
கரிகாலனின் ஆஸ்த்தான முகிலே
என்னவாயிற்று எங்கிருக்கிறாய்
இன்றுமக்கு அகவை எழுபதாம்
என் கவிதையின் கன்னத்தில் நீர்த்துளிகள்
ஒரு பொழுதில் என் கனவாய் இருந்த கம்பன் நீ
பின் உன்னருகில் இருத்தி
என் கவிதை நடை பார்த்து  தட்டி நிமிர்த்தி
கைதட்டி சிரித்திருந்த வம்பன் நீ
களத்துக்கான நெருப்பை மூட்டியது உன் நெருப்பு
பருப்பும் சோறும் உண்டு
மருந்தும் விளக்குமற்று விடிந்த எம் பொழுதுகளில்
விருந்து படைத்து
விடியும் விரைவில் விளக்கேறும்
அருந்துவதற்கு அமுதசுரபிகள் ஆயிரமாயிரம்
அணிவகுத்து வாசலில் நிற்கும்
எழுந்துவிடு என எழுச்சியை விதைத்த
விடுதலையின் வீரிய உழவனே
கடந்து போய்க்கொண்டிருக்கின்றன ஆண்டுகள்
உன்னை காணாமல் ஆக்கச்செய்யப்பட்டோராய்
காலம் எழுதி வைத்து காத்திருக்கின்றது.
நீ உலைக்களத்தில் எழுதியதுபோலவே
எல்லாம் நடக்கின்றது
இப்போது காமாளைகளின் கையில் காலம்
ஓணான்கள் எல்லாவற்றுக்கும் ஆட்டிக்கொண்டு நிற்கின்றன
கையை கட்டிக்கொண்டு நிற்கின்றோம்
விசுவாமித்திரர்களின் விரதத்தை கலைக்க
வரிசையில் வந்து
வளைவதும் நெளிவதுமாய்
வாசலில் வந்து நின்று பார்வையால் நக்கி
நரம்புகளை முறுக்கேற்றி
குடித்து முடித்துவிட்டு குரும்பையாய் தூக்கிவீசிப்போக
நிரம்ப வகையறாக்கள்.
இரும்பன் என நினைத்த பலரும்
எறும்பாய் மாறி கரும்பில் ஊர்ந்து கொண்டிருக்கிறான்
எனக்கு கூடத்தான் எங்க மச்சமோ
ஏதேதோ நடக்கின்றது
மயக்கம் தெளிந்து எழும்போது
மிச்சம் மீதிவிடாமல் ஏதோ மேய்ந்துவிட்டுப்போய்விடுகின்றது.
கட்டிவைத்து கணக்காய் நூலைவிட
ஒரு உலைக்களம் இல்லை
வெருட்டி இருத்தி வழிகாட்டவும்
அந்த வேங்கைத் தலைவன் இல்லை
புறணிபாடியே புற்களை எல்லாம் நெல்லாய் மாற்றி
நல்ல விலையாக்க நம்மாழ்வாராய் இருந்த
நதியின் மகனே
கொள்ளைக் கூட்டத்தின் கையில்
நீவீர் பரணியாக்கிய பாசுர மண்
சிக்கித் தவிக்கிறது.
அக்கம் பக்கம் பார்த்து வெட்கத்தை விட்டு சொல்கிறேன்.
உங்கள் கவிதைப் பெண்மீது
எனக்கும் ஒரு இது.
நீர் இல்லாத நேரம் பார்த்து
கண்ணையடித்தேன்
என்னவோ தெரியவில்லை
அவளும் கொஞ்சம் இணங்குவதுபோல்தான் இருந்தது
புரவியில் ஏறி அவளுக்கென் புயபலத்தை காட்டப்புறப்பட்டு
வளவில் இருந்து கொஞ்சத்தூரத்துள்
தடக்கி பாலத்துள் விழுந்து பழுவில் அடி
இருந்தும் அவளை கவர்ந்துவிடவேண்டுமென்ற தீராக்காதலால்
வியாசராவது விபரீத ஆசையென்பதையறிந்தும்
இந்த மைனர்குஞ்சு கேட்பதாயில்லை.
மடக்கிவிடவேண்டுமென்ற தவிப்பு
தடக்கி விழுகின்றது என் தாளம்
உங்கள் கவிதைக்கன்னியை
என்ன முகூர்த்தத்தில் படைத்தீர் பிரம்மரே
ஒரு காலத்தை உங்கள் கவிதையின் பின்னால்
ரியூசன் பெட்டைகளுக்கு பின்னால் சுழலும்
பருவப்பெடியளின் இரவுபகல் மையலாக்கவிட்டீர்கள்
காவாலித்தனமும் கலிங்கத்துப்பரணியை
அடிவளவுவரை உலவவிட்டு சூடேற்றும் தீயாகும் குணமும்
பாவாடைத்தாவணி மயக்கத்தை மருந்துபோல் கலக்கும்
பரியாரிப்பக்குவமும்
இளந்தாரிகளுக்கு ஈழத்தை மீட்க முறுக்கேற்றும்
வசன வயாக்கராவும்
மாசமாகிவிட்டவளுக்கு சீசர் செய்யாமல்
பத்தியம் பார்க்கும் பழக்கப்பட்ட கைராசியும்
ஒருங்கே வரப்பெற்ற உயர்ந்த கவிப்பேறே
உமது ஆசனத்தை உயர்ந்த பீடத்தில் ஏற்றிவைத்து
காலடியில் உட்கார்த்திருந்து
வளர்த்த நாயின் வாஞ்சையோடு வாலை ஆட்டுகின்றேன்
உனைப்போலொருவன் இனிப்பிறப்பதில்லை
உன் கவிதை என்றும் இறப்பதில்லை
வாழ்க வாழ்க எமக்கு வாய்த்த பெருவரமே!


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...