Wednesday, November 28, 2018
கிழவிகளின் மிகப்பழைய ஒப்பாரி-பொன்.காந்தன்
காட்டு மரங்கள் தீயின் சுவாலையால் பளபளத்தன
வேட்டைக்காரர்கள்
கூதல் போக்க கொழுத்தும்
நெருப்பை மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட
அந்த பெருங்கானக மரங்களுக்கு
தீபங்களை காண கிடைத்த அனுபவம் புதிது
தங்கள் வேரடியில்
சருகுளையும்
காட்டாறுகளையும்
முறிந்த கிளைகளையும் பார்த்து பழகிய மரங்களுக்கு
துப்பாக்கிகள் ஏந்திய மனிதர்கள்
தங்கள் தோள்களில்
தங்கள் மரணித்த தோழனை சுமந்து வந்து
வேரடியில் புதைத்துவிட்டுப்போன
அனுபவமும் புதிது
ஊர் தெருக்களில்
சிங்கள படைகள் டிரக்குகளில் போய்வந்தன
எல்லோரது சட்டைப்பைகளிலும்
அடையாள அட்டைகள் துருத்திக்கொண்டு இருந்தன
படை முகாம்களை இருண்ட முகங்களுடன்
கீறோ மிதி வண்டியில்
அல்லது ரலி மிதி வண்டியில் கடந்து
போய் வந்து கொண்டு வந்திருந்தனர் நம் ஊரார்
மிதி வண்டியின் பெரிய கரியரில் இருந்தபடி
படை முகாம்களை கடக்கும்போது
பெண்கள்
வேறேங்கோ பார்வை விட்டபடி இருந்தார்கள்
பல வேளைகளில்
இலங்கை வானொலியில் அறிவிக்கப்படும்
ஊரடங்குச் சட்ட ஊர்களில்
வெறிச்சோடிய தெருக்களோடு காட்சி தரும் ஊர்
வழமைக்கு திரும்புவதுபோல
ஒரு அச்சமும்
நாளைய வாழ்வின் கேள்விகளும் நிறைந்தாய்
எங்கள் ஊர்கள் இருந்தன
அரிதாய் காணப்படும் சாப்பாட்டுக்கடைகளில்
அன்னக்கிளி அலைகள் ஓய்வதில்லை பாடல்களை
இலங்கை வானொலி ஒலிபரப்பிக்கொண்டிருக்கும்
பொங்கும் பூம்புனல் ஒலிபரப்பாகும் வேளையில்
பனிப்புகாரும் அடங்காத தெருவில்
இரட்டை பின்னலுடன் பெட்டைகளும்
முழங்கால்வரை தொங்கும்
நீல அரைக்காற்சட்டையுமாய் பெடியளும்
தனித்தும் இரண்டு மூன்று பேராயும்
பாடசாலைக்கு போய்கொண்டிருந்தார்கள்
பெரிய கதலிக்குலையை
வாழைச்சருகால் சுற்றிக்கட்டி
சந்தைக்கு கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்
இரவு வயலடிக்கு யானைகள் வந்து போனதைப்பற்றி
அளவளாவிக் கொண்டிருந்தார்கள்
பன்றிகள் மரவள்ளிகளையும்
வைத்த தென்னம்பிள்ளைகளையும்
தின்றுபோனதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்
குளம் மழையில் நிரம்பி
வான் பாய்வதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள்
சண்டிக்கட்டும்
இடுப்பில் கட்டிய கைக்குண்டுகளுமாய்
பெடியள் வந்து இரவு சாப்பிட்டுப்போனது பற்றி
குசுகுசுத்துக்கொண்டிருந்தார்கள்
காட்டை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் ஊரார்
காட்டை அச்சத்தோடும்
வேட்டை ஆடும் வெறியோடும்
அவதானித்துக்கொண்டிருந்தார்கள் படையினர்
அக்காட்டில் பாலைப்பழங்களை தின்று
நல்ல கொழுப்புபன்றிகள் இருந்தன
அழகான மான்களும் காட்டில் குளத்தடிக்கு
நீரருந்த கூட்டங்களாய் வந்துபோயின
பெரிய வெங்கணாந்திகளும் நாகங்களும்
நீளமாயும் கொளுத்தும் இருந்தன
பஞ்சவர்ணச்சிறகுகளுடன் பளபளக்க
காட்டுக்கோழிகள் மரங்களுக்குள் ஓடி மறைந்தன
மரங்களில் இருந்து விழும் பனித்துளிகளும்
மழைத்துளிகளும் மேனியில் படாதபடி
காட்டில் புல்வெளிகளில் யானைகள்
கூட்டமாய் கறுத்த மேடுகளாய் நின்றன
இருள் நிரம்பிய அப்பெருங்காட்டில்
ஒரு புரட்சி விளைந்து கொண்டிருந்தது
காட்டின் நிசப்தத்தை கலைத்து
எப்போதேனும் எழும் ஒரு மரியாதை வேட்டுச்சத்தம்
ஆயிரம் அர்த்தங்களை தந்தது
அவ் வேட்டுச்சத்தத்தில்
முற்றத்தில் மல்லிகை மலர்வது போல
புளிய மரத்தடியில்
ஒரு நற்சேதியுடன் ஒருவன் காத்திருப்பதுபோல
வாசிக சாலை பத்திரிகையில்
ஒரு ஆச்சரியம் மிக்க தலைப்புச்சேதி
கருத்தரித்திருப்பது போல
பிரமை பொழுதுகளில் நிரம்பி இருந்தன
யாரும் எதிர்பாராத தருணத்தில்
ஊருக்குள் கேட்கும் குண்டு சத்தம்
துப்பாக்கிச் சத்தங்கள்
கணத்தில் அடங்கும் தெரு
அடங்கிய தெருவில் மின்னலாய் கடக்கும்
அந்த சண்டிக்கட்டும்
சவரம் செய்யாத முகமுமாய்
கைக்குண்டு ஓரிரு துப்பாக்கிகளும்.
சில வேளை காயங்களோடும்
சில வேளை இன்னொருவனை சுமந்துகொண்டும்
காட்டில் மறையும் இளைஞர்கள்
மறுநாள் பத்திரிகையில்
கொல்லப்பட்ட படையும் கைப்பற்றிய ஆயுதங்களும்
அடங்கிய ஊருக்குள் புல்லரிப்பை பரவும்
காட்டின் சருகுகள் உதிர்ந்துகொண்டிருக்கும்
உயர்ந்த மரங்களின் இலைகளில்
காற்று இரைந்துகொண்டிருக்கும்
காட்டின் குளிர் மேனியில் சில்லிட்டிக்கொண்டிருக்கும்
எந்தப்பாடல்களும் இல்லை
காட்டை வெறித்தனத்துடன் படைகள் சூழ்ந்து பார்த்திருக்க
காட்டின் நடுவே
சில் வண்டுகளின் ஓசைகளில் இடையே
வீரச்சாவடைந்த தோழனை
புதைத்துக்கொண்டிருந்தார்கள் புரட்சிக்கர போராளிகள்
இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தன
நேற்றும் அக்காட்டிடையே
எங்கெங்கோ இருந்து வந்திருந்தார்கள்
அவர்களில் அநேகர்
படுகிழவிகள்
கிழவர்கள் கூன் விழுந்தும்
நடக்க முடியாதபடி வந்திருந்தார்கள்
சில கிழவிகள் வரவில்லையாம்
படுத்த படுக்கையில் இருக்கிறார்களாம்
பல கிழவிகளும் கிழவர்களும்
இறந்துவிட்டதாய் சொன்னார்கள்
ஆக்கிழவிகளும் கிழவர்களும்
ஆக்காட்டில் அன்று
மரங்களில் வேரடியில் விதைக்கபட்ட
புரட்சிகர போராளிகளின் புலிகளை ஈன்றவர்கள்
அக்கிழங்களின்
பேரப்பிள்ளைகளும் பூட்டப்பிள்ளைகளும் வந்திருந்தார்கள்
காடு படையினரால் நிறைந்திருந்தது இப்போது
கொளுத்த பன்றிகளாய்
ஆக்கிரமிப்பு இருந்தது
காட்டின் கறுத்த மேடுகளாய் யானைகள் அல்ல
படைப்பாசறைகள் இருந்தன
பூரணை தினங்களிலும்
வெசாக் தினங்களிலும்
காட்டின் நடுவிருந்த பஞ்வர்ணத்தில்
வாண வேடிக்கைகள் வானத்தில் மிதக்கின்றன
காட்டுக்கோழியின் பஞ்சவர்ணம் நினைவில் அழிவதை
எது தடுத்து நிறுத்தும்
நேற்று காட்டில் நடுவே மரங்களின் வேரடியில்
கிழவிகள் கொளுத்திய ஊதுபத்தியும் கற்பூரமும்
அதன் பின் அக்கிழவிகள் பாடிய
மிகப்பழைய ஒப்பாரியில்
கலந்திருந்த மிக அழகிய புரட்சி வீரர்களின்
காட்டுக்கோழியின் சிறகு போன்ற நினைவுகள்
மரவள்ளிகளை தின்ன வரும் பன்றிகளான
நினைவு அழிப்பை தடுத்து நிறுத்தும்
வேரடியில் இருந்து எழும்ப மறுத்தன கிழவிகள்
இச்சந்ததியிடம் யாசிக்கின்றன
காடெல்லாம் பறக்கும் ஒரு சுதந்திர பறவையை!
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment