Sunday, December 2, 2018

2018.12.02 தமிழனின் பிறிதொரு வாக்கு மூலம்--பொன்.காந்தன்



நந்திக்கடலடியில் வைத்து
எனது ஆடையை உரியச் சொன்னாய்
உரிந்து நின்றேன்
நல்ல நினைவிருக்கிறது
எனது குஞ்சாமணியை
தடியால் தட்டி பார்த்தாய்
பிறகு குந்தி இருக்கச் சொன்னாய்
என் குண்டிப்பக்கமெல்லாம்
தடியால் தட்டி தடவி பார்த்தாய்
என்னிடம் துப்பாக்கி இருந்ததா
இல்லையே

பிறகு நான் தலைகுனிந்தபடி
போகவும் வரவும்
நீதான்
துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தாய்
உனக்கு நம்பிக்கையில்லை
நிரையில் நிறுத்தி
நீயே தந்த நிவாரணப்பொதிகளை
நீயே வந்து வந்து
பிறகும் திறந்து பார்த்தாய்
அப்போதும் நீயே துப்பாக்கியோடு இருந்தாய்

அகதி முகாமில் இருந்து
என்னையும் சேர்த்து அள்ளி அடைந்துவந்து
மீண்டும் என்னூரில் இறக்கி
அப்போதும் என்னை
ஏற இறங்கப் பார்த்தாய்
நீயே எனது காணிக்கு அழைத்துச்சென்று
ஒரு பச்சைத் தகட்டில்
முற்றத்து மரத்தில்
இலக்கம் அறைந்து இருக்கச்சொன்னாய்
அப்போதும் என்னிடம் துப்பாக்கி இருந்ததா
உன்னிடம்தான் இருந்தது

உன்னால் உடைக்கப்பட்ட
எனது வீட்டின் மண்மேட்டில்
வீடு கட்டத் தொடங்கினேன்
கற்கள் உயர்ந்தன
கற்களின் மேலால் எட்டிப்பார்த்தாய்
நிலைவைத்து கதவு வைத்தேன்
கதவடியில் வந்து நின்று
உள்ளே பார்த்தாய்
சாளர ங்கள் வைத்தேன்
சாளரங்கள் வழியே
உள்ளே பார்வையால் துளாவினாய்
துப்பாக்கி இருக்கவில்லை என்பது
உனக்கு நன்றாகவே தெரியும்

நீ ஒரு முறை வரும்போது
அடைப்பில்லாத கிணற்றடியில்
குறுக்குக்கட்டோடு
ஒருத்தி குளித்துக்கொண்டிருந்தாள்
பிறகுகொருமுறை
விறாந்தாவில் நண்பர்களுடன்
பீர் அருந்திக்கொண்டிருந்தேன்
வேறொரு சந்தர்ப்பதில்
குடும்பமாய் சின்னத்திரையில்
நாடகம் பார்த்தபடி
நீ வந்ததும் தெரியாமல் இருந்து
கண்டு திடுக்குற்றோம்
அப்போதும் உன்னிடம் மட்டுமே
துப்பாக்கி இருந்தது

தொலைபேசியில் கூட
துப்பாக்கி ஏந்திய எவருடைய
படமும் இருந்ததில்லை
என் முகநூலில் கூட
கவர்ச்சி நடிகைகளையும்
ஆத்தையும் குளத்தையும்தான்
பகிர்ந்து கொண்டிருந்தேன்
புளியம்பொக்கணை திருவிழாவில்
விளையாட்டுத் துப்பாக்கி கடைப்பக்கம்
தலை வைத்ததில்லை
கரடிப்பொம்மைகளும்
விளையாட்டுக் கைபேசிகளும்
டோனி விராட்கோலியின் படங்களும்
முகப்பூச்சுக்கள் உதட்டு நகச்சாயங்கள்
இவ்வாறே எல்லாம்
நிறைந்த வீடாய் இருப்பதை
துப்பாக்கியோடு எனது நகரத்தில்
பல இடங்களில் இருக்கும் உனக்குத் தெரியும்

நந்திக்கடலில் வைத்து
என்னை இந்த உலகத்துக்கு
நீ துப்பாக்கிகள் தரித்தபடி நின்று
நிர்வாணியாக பிரகடனம் செய்தாய்
சந்தேகம் இருந்தால்
மீண்டும் இப்போது உரிகின்றேன்
மீண்டும் என் குஞ்சாமணியையும்
குண்டியையும் தடவிப்பார்
எனது நகரத்தில் நேற்று
இருவர் சுடப்பட்டு விட்டார்கள்

எனது நிர்வாணமே போராடிக்கொண்டிருக்கின்றது
அந்தத் துப்பாக்கிகள் யாருடையது!


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...