Sunday, November 25, 2018
நித்தியும் நித்தியாவும் யார்-பொன்.காந்தன்
நித்தியும் நித்தியாவும் சகோதரர்கள்
நித்திக்கு என்னுடைய வயது
நித்தியா என்னைவிட
இரண்டு வயது மூப்பு
நித்தி என்னைப்போல பொது நிறம்
நித்தியாவும் அப்படித்தான்
நித்தி நித்தியாவும் சகோதரர்கள்
அவர்களின் இருவரின் புன்னகை
அதை காட்டிக்கொடுத்து விடும்
நித்தி நித்தியாவும் முகம் செந்தழிப்பானவர்கள்
இருவருக்கும் முன் பல்வரிசை ஒரே மாதிரி
உதடுகள்
கைகளை அகல வீசி நடக்கும் நடை
எல்லாம் ஒரே மாதிரி
நித்தி என் வகுப்பு தோழன்
நித்தியா நித்தி நான் எல்லோரும்
ஒரே பாடசாலையில்தான் படித்தோம்
நித்தியும் நானும் நண்பர்களும்
மழை காலத்திலும் நனைந்தபடி
மைதானத்தில் விளையாடுவோம்
அப்போது எங்களுக்கு சிறிய வயசு
துடுப்பாட்டம் உதைபந்து
வேறு சிலபேர் சம்போல் என்பார்கள்
சில பேர் புளிச்சல் என்பார்கள்
இறப்பர் பந்தால் ஆளுக்காள் எறிவது
ஏறிகிற வீச்சில் முதுகு புளிக்கும்
அதையும் விளையாடுவோம்
அந்த புல்லு பத்தை முழுக்க ஓடித்திரிவோம்
பிறகு கொண்டல் காய்களை பறித்து
அதை உடைத்து ஆளுக்காள் எறிந்து
சண்டை செய்தோம்
அதுவும் ஒரு விளையாட்டாக்கினோம்
ஆடைகளில் கயர் படியும்
சீருடை மஞ்சளாகும் பச்சையாகும்
கிழியும்
முகம் உடம்பில்
கொண்டல் காய் குத்தி காயமும் வரும்
ஆசிரியர்கள் தண்டித்தார்கள்
தண்டனை சும்மா அல்ல
அத்தனை பிள்ளைகளுக்கும் முன்
வரிசையில் நிறுத்தி வழங்குவது
அதுவும் இனி செய்வியா செய்வியா என
கேட்டு கேட்டு பிரம்பால் பின் பக்கம்
வீட்டில் அம்மாக்கள் ஆடைகளை துவைக்கும்போது
ஏகப்பட்ட திட்;டு விழுந்தது
இருந்தும் எங்கள் விளையாட்டுக்களும் தொடர்ந்தன
நித்தியாவுக்கு அப்போது பருவ வயது
பருவ பெண்களுக்கே உரிய பண்புகள்
அவளை ஆக்கிரமித்திருந்தது
நித்தியாவுக்குள் ஏதேனும்
யார் மீதும் காதல் இருந்திருக்குமா தெரியவில்லை
அவளது வகுப்பு தோழிகள் பலர்
காதல் வயப்பட்டிருந்தனர்
ஆங்காங்கு குச்சொழுங்கைகளில்
பள்ளி மரமறைவுகளில்
வகுப்பு ஓடைகளில்
வாலிபர்களோடு
அங்கும் இங்கும் பார்த்து பார்த்து
பயந்து பயந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள்
அப்படி நித்தியாவை
ஒருபோதும் நான் காணவில்லை
கண்டிருந்தாலும்
அவளின் காதல் பற்றி ஓரிரு வரிகளை
இப்போது இதில் சேர்த்திருக்கலாம்
ஏன் நித்தியா ஒரு இனிய காதலை
அனுபவித்திருக்கக்கூடாது என்ற ஏக்கம்
எனக்கு இப்போது இருக்கின்றது
நித்தியாவை போல நிறத்தில்
நித்தியாவை போல புன்னகையில்
நித்தியாவை போல உயரத்தில்
பருவ வயது பெண்களை காணும்போதும்
அவர்கள் அனுபவிக்கின்ற வாழ்க்கை
சந்தோசங்கள் இனிமைகள் யாவையும்
நித்தியா இழந்திருக்கின்றாள்
நித்தியா இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை
நித்தியாவை
எத்தனை உச்சத்தில் வைத்துப்பார்க்கலாம்
நித்தியும் அப்படித்தான்
எனக்கு ஒருத்தி மீது படிக்கிற காலத்தில்
காதல் வந்தபோது
காதலா என்பது தெரியவில்லை
அது வந்தபோது
தினமும் பறந்து கொண்டிருந்தேன்
படிப்பதற்காக பலர் பள்ளி வந்தபோது
நான் அவளை பார்ப்பதற்காவே
பள்ளி வரத் தொடங்கினேன்
ஒரு காதல் கடிதத்தை எழுதி
காற்சட்டை பையில் வைத்து
கொடுப்போம் கொடுப்போம் என
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த வேளையில்
ஆடைகளை தோய்த்த அம்மா கையில்
காதல் காவியம் சிக்கியதும்
அதனால் அவர் முகத்தில் முளிக்க
பட்டபாடுகளும் நெளிவுகளும் நசிவுகளும்
கொஞ்ச நஞ்சமல்ல
இந்த பருவ வேளைகளில் நித்தி என்னோடு இல்லை
நித்தி இருந்திருந்தால்
இப்போது அவன் காதலை பற்றி
என்னைப்போலவும்
இப்போது உள்ளவர்களை போலவும்
முகநூல்களிலும் வாட்ஸப்புகளிலும்
புலம்பிக்கொண்டிருந்திருப்பானோ
தெருமுனையில் நின்று கொண்டு
சிகரெட்டை பற்றவைத்தபடி
கைபேசியில் மறுமுனையில் யாரையோ
திட்டித்தொலைத்தபடி இரவை கடக்கும்
யாரோ ஒருவனைப்போல இருந்திருப்பானோ
எனக்கு மீசை அரும்புகின்ற பருவத்திலேயே
நித்தியும் நித்தியாவும்
கண்களில் இருந்து மறைந்திருந்தார்கள்
நித்தியை நித்தியாவையும்
நீண்ட காலமாக காண முடியவில்லை
நித்தியும் நித்தியாவும்
வேறு ஊருக்கு போய்விட்டார்களோ
என்றும் எண்ணியதுண்டு
அப்படி நான் எண்ணிய தருணத்தில்
அவர்கள் இருவரும்
ஊர் ஊராய் போய்கொண்டிருந்திருக்கவேண்டும்
அவர்கள் இருவருக்கும்
என்னை விடவும் வேறு நண்பர்கள் தோழிகள்
கிடைத்திருக்க வேண்டும்
நான் அடைந்திராத ஒரு புல்லரிப்பை
அவர்கள் அடைந்திருக்கக் கூடும்
இப்போது யாழ்ப்பாணம் போகின்ற பலரும்
அங்கிருந்து வருகின்ற பலரும்
சங்குப்பிட்டியால் பயணிப்பது அதிகம்
சங்குப்பிட்டியில் சிலவேளை தரித்து நின்று
பொழுதை கழித்துச்செல்கின்றார்கள்
பலர் செல்பி எடுத்துக்கொள்கின்றார்கள்
காதலர்களும் சங்குப்பிட்டி பாலத்தில் நின்று
அந்திப்பொழுதை ரசிக்கின்றார்கள்
திருமணத்தின் பின்
பூப்புனித நீராட்டுவிழாவின் பின்
வெளிப்புறப்படப்பிடிப்புக்கும்
சங்குப்பிட்டிப்பாலத்தையும்
அந்தகடலையும் அதனோடு கூடிய பொழுதையும்
விரும்பி படையெடுக்கின்றார்கள்
எனக்கோ ஆனையிறவு வீதியால் கடக்கிறபோது
என்னோடு ஆயிரம் பேர்
காற்றில் வந்து பேசுவதுபோல
அலாதியான உணர்வு
அதற்காகவே ஆனையிறவு வீதியில்
எப்பொழுதும் பயணிக்க ஆசைப்படுகின்றேன்
பரந்தனில் இருந்து இயக்கச்சி தாண்டும்வரை
பல நினைவுகள் பல முகங்கள் வந்துபோகும்
ஆனையிறவு கடல் வெளியில் நின்று கொண்டு
பார்க்கும் போதெல்லாம்
நித்தியாவின் நினைவுகளும்
அவளை ஒத்த பெண்களின் நினைவுகளும் வருகின்றன
நித்தியை போன்ற தோழர்கள்
அவர்களின் பல இராத்திரி பகல்களும்
கழிந்த அந்த உப்பவெளியின் இரகசியங்கள்
ஒரு சாதாரணன் கண்களுக்கு கதை சொல்லாது
வெறும் வழிப்போக்கர்களுக்கு கவிதைகள் தராது
இதயம் அற்றவர்களுக்கு கண்ணீரை தராது
வானத்தையும் அச்சிறுகடலையும்
கண்டல் பற்றைகளையும் திரும்திரும்ப
பார்த்து பார்த்து இருக்காத ஒருவருக்கு
அற்புதமான ஓவியங்களை காட்டாது
பேரூந்தில் சாளரத்தின் ஓரத்தில் இருந்தபடி
ஆனையிறவின் வெளியை கடக்கின்றபோது
சாளரத்தின் வழி கச்சான் கோதுகளையோ
வெற்றுத் தண்ணீர்போத்தலையோ
மிட்டாய்களின் உறைகளையோ
எறிந்துவிடவேண்டுமென மனம் ஒப்புவது இல்லை
அத்தனை சாளரத்தினூடும்
மலர்களை தூவி வெளியில் பரவ
பறக்கும் பறவையாக பேரூந்துப்பயணத்தை
அனுபவித்துவிட விரும்பம் தோன்றுகின்றது
நித்தியாவின் உயிரும்
அவள் தோழிகளின் உயிரும்
அந்த ஆனையிறவு வெளிக்காற்றில்தான்
உலவிக்கொண்டிருக்கின்றன
அன்று பொழுதொன்றில்
விஜிதா என்ற நித்தியாவை
மேஜர் நித்தியாவாய்
அந்த ஆனையிறவு வெளி அறிவித்தது
அவ்வாறே வேறொரு ஊரொன்றில் இருந்து
அன்று இன்னொரு பொழுதில்
ரஜனிகாந் என்ற நித்தி
கப்டன் நித்தியாய் அறிவிக்கப்பட்டான்
நித்தியும் நித்தியாவும் யார்
அவர்கள் நிரந்தரமானவர்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment