Sunday, November 25, 2018

ஆனைக்கு அடி வருடலும் அந்தரப்படும் சந்தணப்பேழைகளும்--பொன்.காந்தன்



வானாபிசேகத்தில் வாரடித்து ஓடிய தீர்த்தம்
காவல் தெய்வங்களின் சந்நிதிகளை கழுவி போகிறது
நாலாவிதமான பூக்களை பறித்து பூரித்துப்போன குமரிகள்
ஆளாகிய அழகாய்
அடர்ந்து படர்ந்த காத்திகை கொடிகளில்
ஈழத்தின் கந்தர்வ மலரை
முந்திக்கொண்டு கொய்து
குலக்கொழுந்துகளின் கோயிலுக்காய் தயாராகின்றார்கள்
பந்தப்பிணைப்பின் பாச இழை பற்றியிழுக்க
முட்டித்ததும்பி கண்ணீரை கொட்டித்தீர்கிறது ஒரு மாரி
தட்டுத் தாம்பாளத்தில் வைத்து
விட்டு விடுதலையாகும் ஒரு சிட்டுக்குருவி வாழ்வுக்கு
எங்கள் பட்டுக்குஞ்சுகளின் உயிர்களை படைத்தோமன்றோ
நட்டு நடு ராத்திரியில் நாத மணி இசைக்க
கட்டிக்கல்லறை தழுவி விளக்கேற்றி
விரும்பியது படைத்து
விட்டுக்கொடுக்கோம் உங்கள் கனவையென
அன்று பச்சைப் பொய்யா சொன்னோம்.
வீதியில் விடைபெறும் வித்துடலுக்கு
கூடி நின்று குமுறி விடைகொடுத்தது
இந்த நாதியற்ற காலத்தில் நாலுதிசைக்கும் வளையவா
நாம் யாரென்பதை மறக்கவா
விடுதலை வேள்வி என்பது
திருவிழாவில் திறந்து பூட்டும் மணிக்கடையா
கருவில் திருவுடையோரை வைத்து
உருக்கொண்டாடும் உன்னத சன்னதம் அல்லவா
ஒன்றா இரண்டா
கொற்றவை தேவியை குளிர்விக்க
கொத்தாய் இரத்தம் சிந்தி சித்தம்விருப்பி
சிரித்தபடியே உயிர்விட்ட
பத்தரை மாற்று தங்கங்களை பார்த்தோமல்லவா
அவரோடு கொக்கான் வெட்டியும்
குளத்தில் குதித்து நீந்தியும்
கிட்டிப்புள்ளடித்தும் கிளித்தட்டு மறித்தும்
தொட்டுதழுவி படர்ந்து பிணைந்திருந்தோமல்லவா
சித்தர்களுக்கு மட்டுமே சித்திக்கும்
முத்திதரும் முகங்களை
சித்தப்பன் மாமனாக சோதரர்களாக
மைத்துனர் மனசுக்கு நெருக்கமானவாராக
பத்துத் தலை இராவண பலத்தோடு
கட்டியணைத்திருக்க எத்தனை பேறுபெற்றோம்.
எப்படி மறக்க
இடைவேளையில் எழுந்துபோய் கடலை கொறித்தும்
கடைவாய் வழிய கதிரையிலே தூங்கும்
படக்கொட்டகை பழக்கமாயிற்று
சிலருக்கு சிந்திய இரத்தம் காயாத பொழுது.
பூ பிஞ்சு காயோடு கனிதரும் தோட்டத்தை
மேய்ந்து தள்ளிய மிருகங்களை
வாயாரப்புகழும் புழுக்களையும்
ஈழத்தாய் ஈன்றெடுத்திருக்கின்றாள்
புலியையும் வலியையும் வாக்கு முதலாக்கி
கிழிய கிழியப் பேசி
மலினமாயிற்று மக்கள் பலம்
ஆனைக்கு சுளுக்கெடுப்பதற்கு அந்தரப்படுவோரை
எங்கள் தானைகளுக்கு தளபதிகள் ஆக்கிவிட்டு
கோவணம் உருவப்பட இடறுப்படுகின்றோம்.
எப்போதும் சிற்பம் போன்ற இளசுகளை
சிதையில் ஏற்றிவிட்டு
சத்தியம் செய்தபொழுதை நினைப்பதில்லை.
கப்பம் கிடைக்கின்ற தறுவாயில்
மிச்சம் மீதியில்லாமல் அப்பம் தின்று தாவும்
அந்த வானரங்களிடம்
விட்டுக்கொடுத்துவிட்டு வில்லங்கப்படுகின்றோம்.
பெட்டைக்கு பின்னும் முன்னும் வயப்பட்டலையும்
ஊர் வாலிபனை பிடித்துறுக்கி
அதற்கும் நான்பன் அடங்காவிட்டால்
வழக்கு வாதாட்டமென
ஓயாமல்மினக்கெடும் நம் மேதாவிகள்
நந்திகடலில் நம் நல்லினிகளை கற்பழித்து
களியாட்டம் போட்டவனுக்கு
வாழ்வாதாரம் கொடுத்த வஞ்சனைகளை எப்படியுரைக்க.
பத்துமாட்டுக்காகவும்
பக்கத்துவீட்டான் பெண்டிலுக்காவும்
காட்டிக்குடுத்து களத்தை திறந்த வரலாறு
முடிந்ததா இன்று இல்லையே.
அஞ்சு பத்துக்காக
வஞ்சனையால் எம்மை வீழ்த்தியவன்
இடுப்பை வளைத்துப்பிடித்தபடி
செல்லங்கொஞ்சுகின்றன எங்கள் செம்மறிகள்.
ஆண்டாண்டு காலமாக தமிழர்க்கு அல்வா கொடுத்தவனுக்கு
ஓயாத அலைகளில்
முல்லைத்தீவில் தப்பியோடிய சில்வாவின் ஊடே
வாழ்வா சாவா சொன்னவர்கள் புலிகள்
கதிரை சல்லாபத்தில்
ஒருபோதும் தமிழனை விசிறி எறிபவனுக்கு
விடையிறுக்க முடியாதென
முடிவாய் வெடியை தூக்கியவர்கள் வேங்கைகள்
மிளகாய்த்தூள் பாட்டியை
முப்பது வருசமாய் மூத்திரம் பெய்யவும்
சாத்திரம் பார்க்கவைத்தது எங்கள் சரித்திரம்
காவியுடுத்தபடி இன்றெமை கைநீட்டி வசைபாடும்
கம்முனாட்டியெல்லாம்
காகத்துக்கும் கவரெடுக்கும் காலத்தைக் கொடுத்தோம்.
இருட்டை பார்த்து பார்த்து ஏங்கி
ஈரல் கருகும் அனுபவத்தை எதிரிக்கு
கந்தகம் தாங்கிய காற்றின் மைந்தர்கள் கொடுத்தார்கள்
பதுங்கு குழிக்குள் பாட்டுக்கச்சேரி வைத்துவிட்டு
எழும்பி இளக்கி
கொழும்புவரை குழும்பவைத்தவர்கள் புலிகள்
இந்து சமுத்திரத்துள் சந்து வைத்து காத்திருந்து
மந்திக்கூட்டங்களை மறித்து
கெந்திக்கோடு விளையாடி வென்றுவந்தவர்கள்
எங்கள் நந்தவனத்து நாகபூசணிகள்
இடியன்படகில் ஏறிய புத்திரர்கள்
கடியன் நாய்களை விரட்டி விரட்டி
காங்கேசன்துறை கற்பிட்டிவரை
நாங்கள்தான் ஈழக்கடலின் உரித்துக்காரரென
வெடித்து வெடித்து சொன்னவர்கள்
பார்த்தோமல்லவா புல்லரிக்கும் ஒரு புதிய யுகத்தை
மல்லிகைப் பூச்செண்டு மாமனெல்லாம்
ஆட்டியோடு களத்தில் அழகாய் இருந்தான்
அல்லிமலர்க்கன்னிகள்
ஆர்பிஜியோடு பேர் மாற்றி பெருந்தேவி ஆகியிருந்தனர்.
முப்படையோடு பிரபாகரன் எனும் செய்தியில்
ஆக்கம் பக்கத்து பரமபிதாக்களுக்கு
கேப்சி சிக்கன் கெளுத்தியாய் குத்தியது.
தமிழரிடம் உள்ள மாயவித்தை என்னவென்று
கட்டை நெட்டை பறட்டை கூடி
இந்த ராஜபாட்டையால்
எப்போதோ ஒருநாள்
தம் இருப்புக்கு சுருக்கு வருமோவென
சூத்திரங்கள் தேடினர்.
அறுத்துப்போட்டாலும் பிரபாகரனின் அங்கங்கள் கூட
இலஞ்சம் பதவிக்கு இறங்கிவராதென
இலண்டன் நியூயோர்;வரை இரகசியம் போயிருந்தது.
இப்பிடியோர் எழுச்சிக்காலத்தை இழந்துவிட்டோம்
செத்துமடிவதை பற்றி எந்த கவலையும் இல்லாத
சத்தியப்பிள்ளைகளால்
இந்த ஈழ சாம்ராச்சியம் எத்தனை அழகாய் இருந்தது
எந்த நாயும் எச்சில்படுத்தாதபடி
எத்தனை கனவுகளோடு
எங்கள் தெருக்கள் கன்னிகழியாமல் காத்திருந்தது
ஒரு விடுதலை நாளுக்காய்.
இப்போது எல்லாவற்றையும் விற்றுப்பிழைக்கும்
கைதேர்ந்த கடைத்தமிழ் வியாபாரிகளாகிவிட்டோமா
எவன் ஆண்டால் என்ன என்பதுதான்
எங்கள் ஒவ்வொருவரின் இறுதி முடிவா
இனி எதுவும் முடியாது
மூடிக்கொண்டிரு என்பதுதான் உங்களின் பதிலா
வேடிக்கை மனிதராகி ஆடிக்காற்றில்
வளைந்தும் நெளிந்தும் மீதி வாழ்வை முடிப்போமா
அப்படியெனில்
வாழவேண்டிய வயதில் சாவில் வீழ்ந்த
அந்த சந்தணங்களுக்கு என்ன பதில்
எங்கள் சந்ததிக்கு மைத்திரி அங்கிளையும்
இப்போதுள்ள
எங்கள் மாறாட்டக்கூட்டங்களையும்
மாபெரிய தலைவர்களாக காட்டுவதற்கு
மானத்தை ஒரு மசிராய் பிடுங்கி எறிவோமா
ஆண்டாண்டாண்டு கார்த்திகையில்
பக்கம் பக்கமாய் கவிதையும் எழுதி
துயிலுமில்லங்களை குத்தகைக்கு எடுப்பது பற்றி
கூடிக்கதைத்து குதர்க்கங்களும் விட்டு
கார்த்தினை பூ கல்லறை படங்களை
முகநூல்களில் படரவிட்டும் பதிவிட்டும்
இதயவணக்கங்கள் தெரிவித்தும்
அத்தோடுமட்டும் விடுதலைப்போராட்டத்தின்
எல்லைகளை வகுத்து
இனி எப்பொழுதுமே வாழ்க்கையை தொடர்வோமா.
பிறகு என்னதான் செய்யமுடியும்
நீயே சொல்லென திருப்பிக்கேட்டால்
என்னிடமும் தனித்து பதிலில்லை
ஒன்றாய் தமிழர் உலகத்தில் சேர்ந்தால்
அன்றே பதில் கிடைக்கும்
அந்த சந்தணபேழைகளின்
சதா ஏக்கமும் அதுவாகத்தான் இருக்கும்!


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...