Saturday, November 24, 2018
கேணல் புத்தர்--பொன்.காந்தன்
எனது யாத்திரையை தொடங்கினேன்
கொழும்பில் இருக்கப்பிடிக்கவில்லை
அங்கே
சிங்களவர் சனநாயகத்தை தேடிக்கொண்டிருந்தார்கள்
தமிழரைக்கொன்றொழித்த
சிறிலங்காவின் சனநாயகத்தை தேடுகின்ற
யுத்த முழக்கம் என் காதுகளை சிரமப்படுத்தியது
தமிழர்கள் சிலரும் கூட
அந்த இரத்தகறைபடிந்த சனநாயகத்தை
மீட்க போராடும் செய்திகளில்
கொழும்புச்சாக்கடையில்
எனது வாந்தியும் கலந்து ஓடிக்கொண்டிருந்தது
எனது யாத்திரையை தொடங்கினேன்
எனக்கு அமைதி தேவைப்பட்டது
எனக்கு என்னுடைய சந்தியில்
விழுந்து புரண்டு அழவேண்டும் போலிருந்தது
புறப்பட்டுவிட்டேன்
ஐயப்பர் சாமிக்கு போவதைப்போல
மக்காவுக்கு போவதைப்போல
மடுவுக்கு போவதைப்போல
கதிர்காமத்துக்கு போவதைப்போல
நானும் புறப்பட்டுவிட்டேன்
எனது கடவுளரிடம்
பாதையெங்கினும் பார்த்தபடியே நடந்தேன்
புத்தர் அங்கேயே இருந்தார்
புத்தர்
புத்தருக்குரிய இடத்தில் அமர்ந்திருந்தார்
அவர் அவராக இருக்கும்
அந்த நிட்டையில் நெக்குருகி
அவரை வணங்கினேன்
அரசமரங்களோடு பேசினேன்
அரச மரங்களுக்காக புத்தரா
புத்தருக்காக அரச மரங்களா
அவருக்குரிய இடத்தில் இருந்த அந்தப்புத்தர்
எனக்கு ஒரு தெளிவான போதனையை செய்தார்
அவர் போதனையை கேட்டபடியே
எனது யாத்திரை தொடர்ந்தது
மகாவலி தொடங்கும் அந்த ஊற்றில்
எனது தாகத்தை தீர்க்க
நீர் அள்ளி அருந்தினேன்
எனது வியர்வையை
அந்த நீர் தொட்டு கழுவினேன்
அது மிகத் தெளிந்த நீராய் இருந்தது
அதில்
எந்த வர்ணங்களும் இல்லை
அந்த ஆச்சரியத்திலும்
அந்த உண்மையிலும் கட்டுண்டு
அது நதியாகிப்பாயும் கரைகளின் ஓரமாய்
எனது யாத்திரையை செய்தேன்
அது வர்ணம் மாறிக்கொண்டிருந்தது
ஒரு சந்தர்ப்பத்தில்
அது குருதிச்சிவப்பாய் காட்சி கொடுத்தது
மன்னிக்க முடியாத திசையில்
அது பாயவும் விளைந்தது
தன்னை இழந்து அது பாய்ந்து கொண்டிருந்தது
தன் முகவரியை சொல்ல முடியாதபடி
அது தவித்துத் பாய்ந்துகொண்டிருந்தது
எனது யாத்திரையில்
வன்னிக்காடுகள் வழியே நடந்து கொண்டிருந்தேன்
புதூர் நாகதம்பிரானுக்காக
இந்தக்காடுகள் வழியே போவதுபோலவும்
நான் வன்னிவிளாங்குளத்தில் நடந்தேன்
வற்றாப்பளை கண்ணகையிடம் போவதுபோலவும்
நந்திக்கடலாரமாய்
முள்ளியவளைக்கு நடந்தேன்
கீரிமலைக்கு போவது போலவும்
கோப்பாய்க்கு நடந்தேன்
புளியம்பொக்கணைக்கு போவது போலவும்
கனகபுரத்துக்கு நடந்தேன்
மடுவுக்கு போவது போலவும்
ஆட்காட்டி வெளிக்கு நடந்தேன்
கொக்கட்டி தான்தோன்றீ ஈசுவரரிடம் போவதுபோலவும்
கோணேச்சரிடம் போவது போலவும்
தரவைக்கும் உப்பாறுக்கும் நடந்தேன்
இப்படியே நடந்த என் யாத்திரையில்
ஓரிடத்தில் கண் குத்திட்டு நின்றது
அந்த இடத்தில் புத்தர் அமர்ந்திருந்தார்
அவரை ஒரு சிறிய அரச மரம் சூழ்ந்திருந்தது
புத்தரை நோக்கி சொன்னேன்
புத்தரே
நீங்கள் உங்களுக்கு உரிய இடத்தில் அமரவில்லை
நீங்கள் அமர்திருக்கின்ற இடம்
கேணல் தர புலிப்படைத்தளபதி ஒருவரை
நாம் விதைத்த இடம்
நீங்கள் கௌதம புத்தரா
கேணல் புத்தரா!!
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment