Monday, November 19, 2018

நிலவோடு உலவுதல்- பொன்.காந்தன்


ஏழை அம்மாவின் பொட்டுச்சிரட்டையிலும்
அப்பா பல்லு தேய்க்கும் கரியிலும்
பனங்காமத்து காட்டோர வயலில்
குளிரில் விறைக்கும் இரவில்
காவற்கொட்டகைக்கு அருகில் மூட்டிய
கட்டைகளின் சாம்பலிலும்
தொட்டு அளைந்து நிலவில் பூசுகின்றேன்
கறுப்பு நிலவு
எனக்கு நெருக்கமாய் இருக்கின்றது

ஏன் வன்னிக்காட்டின் கருங்காலிகளிலும்
மாறன் என்ற புலி பதுங்கிய
கானகத்தின் இருளிலும்
இன்னும் தொட்டு தொட்டு
என்னை அழகுறச்செய்திருக்க
உன்னொடு நெடுகிலும் புன்னகைத்து
தொடர்வேன் எனவும் பேசிற்று நிலவு

கிளிநொச்சி குளத்து அணைக்கட்டின்
வடக்காய் விரியும்
மருதநகர் நான்காம் வாய்க்காலின்
சம்புகளும் வருட
கானாங்கோழிகள் பறக்க
தாமரை இலைகளுக்கு அப்பால் விரியும்
வயல்வெளிகளில் கறுத்த நிலவோடு
குந்தியிருந்து மிதக்கின்றேன்
எளிய நடையில் ஒரு கவிதையில்
காடுவெட்டி களனியாக்கிய
மாந்தரின் முற்றத்தில்
மரங்களின் வேர்களில் குந்தியிருந்து
அம்மணாங்குண்டியராய் மண் அளையும்
குழந்தைகளின் வாழ்க்கையை
படைத்துவிடச்சொல்கின்றது

மலையகத்தில் இருந்து
கலவரத்தில் அள்ளுண்ட சிதறிய
ராமலிங்கத்துக்கும்
அவர் பெண்டாட்டிக்கும்
மருதநகர் நன்றி கடனாய் எதைக்கொடுக்கும்
உழவு காலத்தில்
கலப்பைகளுக்கு பின்னால் இழுபடும்
சிறுவர்களையும் பறவைகளையும்
மண்வாசத்தையும்
தொங்கிப்போன பெருத்த மார்புடைய
பத்தை ஈன்று தள்ளிய
கிழவிகளின் தேனீரையும்
வயல்களிள் ஊடே தடக்கிவிழுந்து புதைந்து
விதைப்பில் நிற்கும் விசுவலிங்கத்தின்
நொட்டை சொட்டைகளையும் கடந்து
பன்னங்கண்டி வீதியில் ஏறும்
இரட்டை சடை அழகிகளையும்
பழஞ்சோறு பச்சை மிளகாய் வெங்காயத்தையும்
மோரையும் வல்லாரை கங்கூனையும்
உன் கவிதையில் தவறவிட்டுவிட்டுவிடாதே என்றும்
கடப்பை கருக்கலில் திறக்கையில்
இடுப்பைக்கிள்ளிவிட்டு தண்ணிபாய்ச்சப்போகும்
கறுப்பையனின் முரட்டு விரல் சிலுமிசங்கள்தான்
மருதநகர் கன்னிகளின் இளவரசுக்கனவு
எழுதிவிடு அவனையும் என்றிற்று கரு நிலவு

பிளாவில் கள்ளுடன்
கிளிநொச்சி குளத்தின் யப்பான் விரால் கரியலையும் கடித்தபடி
மண்ணில் விசாலித்து இருந்து
புனா சுனா ஓவன்னாவையும் அடிக்கடி
உச்சி ஸ்தாயியில்
தூரத்தில் சச்சியின் வீட்டுக்கு கேட்க
பெண்புரசு இருக்கத் தொடுக்க வழியில்லையென
திட்டித் தொலைக்கும் பெண்டிலையும்
கள்ளுமண்டிக்கு காத்திருந்து
அப்பத்துக்கும் தோசைக்கும் வாங்கிச்செல்லும்
இளந்தாரிகளையும் எப்படி நீக்கி
இந்த மண்வாசத்தை பாடமுடியும்

ஈசுவரன் பராசக்தி சண்முகா திரையரங்குகள்
நெருக்கமாய் இருந்ததால்
வசந்த மாளிகையையும் பைலட் பிரேம்நாத்தையும்
அலாவுதீனும் அற்புதவிளக்கையும்
கலியாணப்பரிசையும் உலகம் சுற்றும் வாலிபனையும்
பார்த்துவிட்டு வந்து பரபரப்பாகி
திரும்ப திரும்ப அந்தக்கதைகளையே சொல்லித்தீர்த்த
அந்த முற்றங்கள் புதைந்த நிலத்தை
விட்டுவிட்டு செல்ல மனமின்றி நிலவு தவித்தது
பரவிப்பாஞ்சானை திரும்பி பார்த்தால்
விம்மல்களை தவிர்க்க முடியாது
விடியாத கனவொன்றின் கோட்டை
யார் கையில் இன்றுள்ளது
எதற்காக அவர் கையில் உள்ளது
அவர்களால் எதை அடையமுடிந்தது
அருகே பாயும் வாய்க்காலில்
எல்லாம் அவிட்டெறிந்து விட்டு
நீச்சலடித்த மீன்களின் நெஞ்சில் நிறைந்திருந்த
அந்த மகிழ்ச்சியின் பொருளை
உணர்ந்து சொல்ல முடியுமா அட்சரம் பிசகாமல்

கண்ணில் வார்த்தைகளற்ற ஒரு வறட்சி
கறுத்த நிலவு புறப்பட்டிற்று
இரணைடுவின் நீரை அள்ளித் தலையில் தெளித்தபடி
அம்பகாமத்தின் கானகங்களின் இலைகளை வருடி
ஒட்டுசுட்டானின் ஏறிஇறங்கும் கானகவீதிகளில் பரவி
தண்ணீரூற்று காற்றில் மிதந்து
புதறிக்குடாவில் நிலை குத்திற்று கருநிலா
எல்லா வீடுகளையும் எட்டிஎட்டி பார்க்கின்றது
அத்தனை இரகசியங்களையும் காத்துகாத்து
கைகோர்த்து நின்ற புதறிக்குடாவை
கடைசிவரையும் மறந்திட முடியாது
அத்தனை முகங்களிலும் கறுத்த நிலவின்
வர்ணம்
நிலவின் ஊராய் இருந்த காலத்தை
எல்லா குச்சொழுங்கைகளிலும்
குந்தி இருந்து ஒவ்வொன்றாய்
பனங்கிழங்கு போல எடுத்த தருகின்றது
எல்லா வாசல்களில் இருந்தும்
ஏழை அம்மாவின் பொட்டுச்சிரட்டையாய்
தொட்டு தொட்டு வைக்கின்றது
புதறிக்குடா பொன்னகர்
தாம் நிலவின் ஊர்கள் என்பதை மறந்திருக்க
எந்தக்காரணமும் கிடையாது
மறப்பது போல் மயக்கமும்
நடிப்புமாய் உறங்கும் தீராப்பிணைப்பின்
நினைவுகளை குந்தியிருந்து
தூண்டில் போட்டு எடுத்து எடுத்து
விளக்கெரியும் வற்றாப்பளையின்
ஆயிரம் உப்பு நீர் தீபங்களாய் என்னைச்சுற்றி
நிரப்பி வைத்திருக்கின்றது நிலவு

மணலாறு நெடுங்கேணி ஒட்டுசுட்டான் மாங்குளம்
பனங்காமம் காடுகளுக்குள்
இடைவிடாது நடந்த இளந்தாரிகளை
அக்கம் பார்த்து இருத்தி
மரவள்ளிக்கிழங்கும் சம்பலும்
சில வேளை பழஞ் சோற்றுத்திரணையும் கொடுத்து
உசார் ஏத்தி நம்பிக்கை வார்த்து
கற்பூரப்புல்வெளி கதைகளும் சொல்லி
எப்போதும் உங்களோடு என்ற
தொப்பூழ் கொடியையும் பிணைத்து
எப்போதும் அடிவானைப்பார்த்திருந்த
எண்ணெய் வடியும் முகங்களை
கற்பூரத்தில் கலந்து வரிகளாக்க நிலவு பணிக்கின்து
வாடைகாற்றென வருடும்
வாழ்வின் புல்லரிக்கும் வண்ணங்களை அள்ளி அள்ளிப்பூசி
அழகு பார்க்கத்துடிக்கும் கறுத்த நிலவின் உள்ளத்தில்
வாளாய் அறுத்துக்கொண்டிருக்கின்றது
அடங்கிவிட்ட ஒரு பேரலையின் கதை
ஆறிய நெருப்பின் கீழ்
விரல்களை விட்டு வேரில் முட்டி
விசாரிக்கின்றது என்னவெல்லாம் ஆயிற்று
பண்டாரவன்னியின் உயிர்த்து
படையாய் திரண்டு
வற்றாப்பளையிலும் தண்ணீரூற்றிலும் நந்திக்கடலோரமும்
சத்தியப்பிரசங்கம் செய்து
முல்லைத்தீவு கோட்டையை வீழ்த்தினாரே
பிறகு எப்படி ஆயிற்று இந்த நிலவொளிரா இரவு
எல்லாளன் உயிர்த்து அம்பகாமம் மாங்குளம்
மதவாச்சி கடந்து பழைய அவர் இராச்சியம் வரை
மடை திறந்த ஆடினாரே வீரசன்னதம்
என்னவாயிற்று பிறகு
புதறிக்குடாவே பொன்னகரே உரைப்பாயா
எதை மறந்திட முடியும் என்ற
ஒரு பெரிய ஏக்கத்தை புதறிக்குடாவில் போர்த்திவிட்டு
உலவுகின்றது நிலவு கொக்காவில் பக்கமாய்

பழைய முறிகண்டி பதினெட்டாம் போர் வழியே
நினைவு பெருக்கெடுக்க பரவுகின்றது
இயக்கர் நாகனின் சொல்லில்
இல்லாத மிருகங்கள் இப்போது
இந்தக்காட்டில் நிறைந்திருக்கின்றது
முதிர்ந்த பாலைகளுக்கு அறிமுகமற்ற
யாரோ காட்டின் ஆன்மத்தை குலைத்துள்ளார்கள்
ஐயன்கங்குளத்தில் உறையும் அரண்மனை
உற்றவர்கள் இன்றி பாழ்பட்டு நெடுங்காலம்
தொலைந்து மீண்டும்
கலைக்கப்பட்டது இராச்சியக்கனவு
புத்துவெட்டுவானின் வேட்டைக்காரர்களுக்கு
வரலாற்றில் இல்லாத அச்சத்தில்
கறைபடிந்த நாளில்
மிருகங்களின் மீது மலர்கள் தூவ
கட்டளையிட்ட கயமையில்
கொக்காவிலின் ஆழ்ந்த கனவை
பன்றியாய் வேட்டை ஆடப்பட்டுவிட்டது

நெடுந்தீவில் இருந்தும் கரவெட்டியில் இருந்தும்
காடுவெட்டிக் குடியேறிய செல்லனும் கணேசுவும்
முறிகண்டியில் தேங்காயை உடைத்துவிட்டு
நடக்கிற நடையில்
தனியன்களும் எட்டத்துக்குப்போய்விடும்
ஆசுப்பத்திரிபோகாமல்
காட்டுக்கு நடுவில் உறையும்
புத்துவெட்டுவானுக்குள் எத்தனை பிள்ளைப்பெறு
பத்தியம் பாத்த பாறுவதிக்கு
காட்டுக்கறுப்பு அண்டியது கிடையாது
பண்டிமான் உடும்பு தின்று
திடகாத்திரமா இருந்தே செத்தார்
துணுக்காய் டீ ஆர் ஓ ஒபிசுக்கு போறதுக்கு இடையில்
மயில்கள் மான்களை கண்டு கவிதை எழுத வேணும்
யானையை கண்டால் மீசையை முறுக்கவேணும்
உடும்பைக்கண்டால் ஓடி பிடித்து கறிப்பாட்டுக்காக்கவேணும்
பாலைப்பழம் பிடுங்கவேணும்
நாவல் பழம் பொறுக்கவேணும்
நாம்பனை சாய்க்கவேணும்
வயல்களில் குரங்கு கலைக்கவேணும்
புத்துவெட்டுவான் காரருக்கு வாய்த்த நிலக்கதையை
சொல்லி முடித்தல் கூடுமோ

பாம்பு இரையெடுக்கின்றது
கரடி போயிருக்கு
யானை கிட்டத்தான் நிற்கிறது
பண்டி வந்திருக்கு
குரங்கு கடிச்சிருக்கு
மரநாய் வரும்
புறாறாஞ்சி கவனம்
எல்லாம் இருந்த விரல் நுனியில்
இது என்ன மொச்சை
இது
நிலந்தின்னி படுத்துக்கிடக்கும் மொச்சை
கொக்காவிலின் அயலை சுற்றி காற்றில் அலைகின்றது
எல்லாவற்றையும் ஒரு புராணமாக்கு
எல்லாவற்றையும்
பண்டாரவன்னியரின் நினைவு நாளில்
எல்லாளரின் நினைவு நாளில்
கந்தசட்டி கவசம்  போல
முறிகண்டியில் ஒலிக்கும் திருவெம்பாவை போல
திரும்பதிரும்ப பாடு என்கின்றது கறுத்த நிலவு

புரட்சி வாசகங்கள் அற்றுப்போன
பள்ளிகளின்  காலைப்பிரார்த்தனைகளை கடந்து
கனகாம்பிகை குளத்தை மறைக்கும்
விளம்பர அட்டிகளை கடந்து
உதிரவேங்கை வைரவரை கடந்து
டிப்போ சந்தியில் நின்று
சுற்றியும் பார்த்த கறுத்த நிலவு
கண்களில் நீர் சொட்ட
கண்ணாடி சந்திரனாய் விடைபெற்றது என்னிடம்
ஓங்கி ஒலித்த குரலுடைய வேங்கையே போய் வா
நீ நடந்த நிலம்
கடந்த நிலமல்ல
அது என்றும் எங்கள் கனவு நிலம்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...