Friday, November 16, 2018
2018.11.16 விஜயனின் வருகைகள்--பொன்.காந்தன்
இன்று ஒரு காலைப்பொழுதில்
விஜயனின் வருகை நிகழ்கின்றது
தியவன்ன ஓயாவின் கரையில்
தன் தோழர்களுடன் இறங்குகின்றான்
இது அவனுடைய எத்தனையாவது வருகை
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதுபோக
எஞ்சிய வரலாற்று சுவடிகளை படிக்கின்றேன்
கஜா என்ற ஒரு புயலின் கரைகடப்பில்
ஈழம் என்ற இலங்கையின் வடக்கு அலமந்து கிடக்கின்றது
கார் முகில்களால் வானம் நிறைந்து கிடக்கின்றது
விஜயனின் வருகையில்
தம்பபன்னியில் நிகழ்ந்த அபசகுனங்கள்
இன்றும் நிகழ்ந்தேறுகின்றன
விஜயன் என்றால்
என்றுமே திருந்தாதவன் என்பது பொருள்படுகின்றது
சிங்கபாகு சிங்கசீலி எனும் சகோதரர்களுக்கு
அவன் பிறந்ததால்
அவன் மரபணுக்களில்
சகோதரர்களுக்கு இடையிலான யுத்தம்
கபடம்
தந்தையை கொன்று அரியணை ஏறுதல்
யாவும் நிறைந்திருக்கின்றன
இன்றைய வருகையில்
ஜெயவர்த்தனபுரவின் தெருக்களில்
அவனது எக்காளம் நிறைகின்றது
அவனது வருகைகண்டு
செங்கோலை ஒரு சேவகன்
பத்திரமாய் ஏந்திச்சென்று
காத்துவிட அவதிப்படுகின்றான்
இலங்கையின் கடைசி மன்னன்
தமிழர் விக்கிரமராச சிங்கரின் சிங்கக்கொடி
சோர்வுற்று
ஜெயவர்த்தனபுரவில் தொங்குகின்றது
குவேனியின் வழி வந்த இயக்ககுலம்
மிகவும் அற்பசொற்பமாகியிருக்கின்றது
விஜயனின் வருகைகள்
இயக்க நாகர்களை அழித்துவிட்டது
விஜயனின் குழப்படிகளும் வெறித்தனமும்
அப்படியே இன்னுமும்
அடங்காவெறியுடன் அலைகின்றான்
விஜயனின் கும்பல்கள்
செங்கோலை மலத்தின் மீது நாட்ட
தருமாறு குரலெழுப்புகின்றன
செங்கோலினால் மற்றவர்களை நிர்வாணப்படுத்தி
குறிகளின் மீது குத்தவும் கீறவும்
தருமாறு கேட்கின்றன
முள்ளிவாய்க்காலில்
இளம் தமிழ் பெண்களை சிறைப்பிடித்து
அதாவது இயக்கர்நாகர்குல இளவரசிகளை
சில காலத்துக்கு முன்பு
நந்திக்கடற்கரையில் நிர்வாணப்படுத்தி
யோனிகளுக்குள் திணித்தும்
மார்புகளை கிழித்தும்
ஜெயவேவா சொல்லி
பிணங்களின் நடுவில் சிரித்தபடி பாற்சோறுண்ட
செங்கோலை தரும்படி ஆக்ரோசிக்கின்றன
இயக்கர் நாகர்களின் வழிவந்தவர்களின்
இரத்தத்தில் தோய்த்து தோய்த்து முறுக்கேறிய
தங்கள் பூர்வீக செங்கோலுக்காக
சுபதேவிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த
சிங்கத்தை போன்ற கைகால்கள் உடைய
தோற்றத்தினால் செய்யக்கூடிய
பாதிமிருகத்தின் பண்புகளை கொப்பளிக்கின்றன
ஓ! வாயிற்காவலனே
சேவகர்களே!
தியவன்ன ஓயாவின் அருகில்
கோட்டையில் நீங்கள் விஜயர்களிடமிருந்து
காக்க நினைப்பது எந்தச் செங்கோலை
கிருசாந்தியை வன்புணர்ந்து கொன்று
புதைத்து நாட்டப்பட்டது ஒரு செங்கோல்
தமிழ் பெண்களின் மார்பில் முன்னொருமுறை
சிங்கள ஸ்ரீ சுடுவதற்காக சூட்டுக்கோலானது ஒன்று
குமுதினியிலும் கிளாலியிலும் படகில்போன
அப்பாவி தமிழர்களை
குத்திக்கிழிக்க ஈட்டியானது இன்னொன்று
குட்டி மணியின் கண்கணை பிடுங்க
கூராக இருந்ததே ஒன்று
யாழ்;ப்பாண நூலகத்தை எரிக்க
தீப்பந்தமாய் மாறியதே ஒரு செங்கோல்
கறுப்பு யூலையில் கொழும்புத்தெருவில்
தமிழர்களை கொல்ல அகதியாக்க
அவர்களின் திரவியங்களை சூறையாட
கட்டளை பிறப்பித்ததே ஒரு செங்கோல்
இதில் எந்த செங்கோலை காக்க பிரயத்தனபடுகின்றீர்கள்
வாயிலோயே வாயிலோயே சொல்மின்!
நந்திக்கடலில் எஞ்சிய தமிழர்கள்கள்
நெருப்பின் எச்சங்கள் என
மகாநாமன் திரும்பவும் சொன்னாரா
விஜயர்கள் காதில்
தேவநம்பிய தீசன்போல சும்பிரமணிய சுவாமி
ஏதேனும் விஜயர்களுக்கு உரைத்துள்ளாரா
அநாகரிக தர்மபால
இனியும் தாமதிக்காமல் ஜெயவர்த்தனபுரவில்
சன்னதம் கொள்ளென ஓதினாரா
இன்றைய விஜயர்களின் வெறியில்
எக்காளத்தில்
இரத்த வாடையை மோப்பம் பிடித்தலையும்
ஒரு கொடிய மிருகத்தின் நாற்றமடிக்கின்றது
பட்டித்திடலே கொக்கட்டிச்சோலையே
பெரிய புல்லுமலையின் காற்றே
நிலாவெளியே உடும்பன்குளமே
திரியாய் தம்பலகாமத்தின் வயல்வெளிகளே
செட்டிகுளம் பண்டிவிரிச்சான் கானகமே
கொக்குளாய் கொக்குத்தொடுவாய்
மன்னார் கடலே
இலட்சம் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த
அந்தச் செங்கோலின் இரகசியத்தை சொல்லிவிடுங்கள்
ஈழமெனும் இலங்கையில்
தமிழனின் கையில் நிலவின் ஒளிபொருந்தியதாய்
இருக்கவேண்டிய அந்தச்செங்கோல்
குருதி தோய்ந்த கைகளில்
இழுபடுகின்றது இதயம் வலிக்கின்றது
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment