எனது சாலைகள் மாறிக்கொண்டிருக்கின்றன
கூடவே மனிதர்களும்
கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்
முன்பு தூரத்தில் தெரியும்
தென்னஞ்சோலைகளை மேவி
இப்போது
தொலைபேசிக்கோபுரங்கள் வரவேற்கின்றன
மரங்களை மறந்து
விளம்பர கட்டவுட்டுகளில்
குருவிகள் கூடு கட்ட பழகிவிட்டன
பள்ளிவிட்டபின்
முன் என் பால்ய வயது நண்பர்கள்
அப்பாவுக்காக காத்திருந்த நிழல் மரங்கள்
காணாமல் போய்விட்டன
வீதிகள் அகலமாகிவிட்டன
வாகனங்கள் பறக்கின்றன
மஞ்சள் கோடுகளில் கடப்பதற்கு
மாடுகளும் நாய்குட்டிகளும் கூட பழகிவிட்டன
அநேகமாக இதமான முத்தங்களில் பாதி
கைத்தொலைபேசிகளுக்கே கொடுக்கப்படுகின்றன
மாங்குயில்களின் கூ கூ
தேன்சிட்டுக்களின் கீ கீ
ஆலய கோபுரத்தின் டாங் டாங்
எல்லாம் தொலைபேசிகளின் ரிங்ரோன் ஆகிவிட்டன
பழைய சைக்கிளில் விறுவிறுவென
இந்த குச்சொழுங்கையில் புகுந்து
அந்த குச்சொழுங்கையில் மிதந்த
என் நண்பர்களை இப்போது
சிக்னல்களும் சந்திகளும் நிறுத்துகின்றன
பிறகு போ என்கின்றன
ரயிலின் ஓசையை ரசித்துக்கொண்டே தூங்க
போரின் குழந்தைக்கு
புதிய நாட்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன
உதிரும் நெல்மணிகளை பொறுக்கும் மனிதர்களை
வயல்கள் தொலைத்துவிட்டன
முரட்டு பாலைகளையும்
மெல்லிய நெல்லையும்
இயந்திரங்கள் அறுதெறிந்துவிட்டு
பட்சிகளையும் தூரக்கலைத்துவிட்டு ஓடிவிடுகின்றன
பழைய சோறும் பச்சை மிளகாயும் வெங்காயமும்
வரம்புகளுக்கு வருவதை மறந்துவிட்டன
பார்சல்கள் கட்டிய பொலித்தீன்கள்
புதிய பறவைகளாய் காற்றில் எழும்புகின்றன
சாலைகள் மாறிவிட்டன
மனிதர்களும் மாறிக்கொண்டிருக்கின்றார்கள்
நானோ நகரத்தின் நடுவில்
புதிதாகமுளைத்த புல்வெளிகளின் கீழ்
விதைக்கப்பட்ட அந்த அழகிய மலரை தேடிக்கொண்டிருக்கின்றேன்.
போதையில் ஒருவன் புலம்புகிறான்
யாரடா அவனென என்னை நோக்கி!!
No comments:
Post a Comment